PUBLISHED ON : ஜூன் 01, 2018

வித்வாத் நகரின் வெளியே ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது. அதில், முகமது என்பவன், மனைவி, மக்களுடன் வசித்து வந்தான். அவன் சோம்பேறி; வேலை செய்யாமல், பகல் கனவு கண்டான். இதனால் சிறு குடிசையைக் கூட, வாடகைக்கு எடுக்க முடியாமல், மண்டபத்தில் தங்கியிருந்தான்.
சரியான சாப்பாடு இல்லாததால் இளைத்து, துரும்பாகி, எலும்பும், தோலுமாகக் காட்சியளித்தான். இப்படிப்பட்ட தோற்றத்தில் அவனுக்கு, வேலை கொடுக்க எவரும் முன்வரவில்லை.
பாழடைந்த மண்டபம் அருகே, ஒரு நீரூற்று இருந்தது. அதில் தண்ணீர் வற்றி, வறண்டு கற்கள் பெயர்ந்து கிடந்தன. அதன் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து தான் கண்ட கனவைப் பற்றி, நினைத்து பார்ப்பான் முகமது.
கனவில், 'மிவ்யாலா நகருக்குச் செல், அங்கு தான் உன் எதிர்காலமே இருக்கிறது' என்று தினமும் ஒரு குரல் கேட்கும்.
வெட்ட வெளியில், கால் கடுக்க மிவ்யாலா நகரை நோக்கி நடப்பது போலவும், கனவு கண்டான். மிவ்யாலா செல்வதற்கு பல நாட்கள் ஆகும். முகமதுவிடம் சாப்பிடுவதற்கே பணம் கிடையாது; பின் எப்படி அங்கு போக முடியும்.
'ஏதாவது சம்பாதித்து வா...' என்று மனைவி கூறினாள்.
'இங்கு எனக்கு எவன் வேலை கொடுக்கிறான்; மிவ்யாலாவுக்கு சென்றால், அளவற்ற பணம் சம்பாதித்து வருவேன்...' என்று முகமது கூறினான்.
'உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவர் அசலுாரில் ஆனை பிடிக்கப் போகிறீங்களா... இப்படி கனவு கண்டே உங்க வாழ்க்கையை முடித்துக் கொள்ளுங்க...' என்று, கிண்டல் செய்தபடி திட்டினாள் முகமதுவின் மனைவி.
வறண்ட நீரூற்றின் அருகே, ஒரு கிணறு இருந்தது. அதில், தண்ணீர்; சுவையாக இருந்ததால், அந்த வழி வரும் பயணிகள் ஒட்டகத்தை நிறுத்தி, ஓய்வு எடுத்தனர். அவர்களுக்கு, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து தந்தான் முகமது. பயணிகள் அவனுக்கு உணவோ, சிறு தொகையோ தருவர்.
ஒரு நாள்-
ஒரு பயணிக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தான் முகமது. அந்த பயணி, தன்னிடமிருந்த உணவில் கொஞ்சம், முகமதுவிற்கு கொடுத்தான். அந்த பயணியிடம், பேச்சுக் கொடுத்த போது, மிவ்யாலாவிற்கு செல்வதாக, கூறினான். உடனே, முகமது, 'என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்கிறீரா...' என்றான்.
'தாராளமாக அழைத்துச் செல்கிறேன்; எனக்கும் வழியில் வேலை செய்ய, ஒரு ஆள் தேவை...' என்று ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டான்.
பல நாள் பயணத்திற்குப்பின், முகமதுவை மிவ்யாலாவில் இறக்கி விட்டு, தன் வழியே சென்றான் பயணி.
கையில் காசு இல்லை; உணவுக்கு வழியில்லை; தங்குவதற்கும் இடமில்லை; ஊரெல்லாம் அலைந்து, கடைசியில், நடைபாதையில் துாங்கினான் முகமது.
அதிகாலையில், ஒரு முரட்டுக் கரம், அடித்து எழுப்பியது.
கண் விழித்துப் பார்த்த போது, எதிரே அரசு காவலன் நின்றிருந்தான்.
'சோம்பேறி... எங்கிருந்து வருகிறாய்...' என்றான் காவலன்.
ஊரை கூறினான் முகமது.
'இங்கு, சிறையில் இருக்கும் பிச்சைக்காரர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வந்தாயா... இந்நாட்டில், பிச்சைக்காரர்கள் எவரும் நடமாடக் கூடாது என்பது சட்டம். வா... நீதிமன்றத்துக்கு...' என்று இழுத்து சென்றான்.
முகமதுவைப் பார்த்து, 'எங்கிருந்து வந்தாய்...' என்றார் நீதிபதி.
'வித்வாத் நகரிலிருந்து வருகிறேன்...'
'எதற்காக வந்தாய்...'
'ஏழைகளின் காவலரே... என் எதிர்காலம் இங்கிருப்பதாக ஒரு கனவு கண்டேன்; அதனால் தான் இங்கு வந்தேன்...'
இதைக் கேட்டதும், நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். நீதிமன்ற சேவகன், அமைதிப்படுத்தினான்.
'நீ இங்கு வந்தது உன் மனைவிக்கு தெரியுமா...' என்றார் நீதிபதி.
'தெரியாது... அவளிடம் சொன்னால், கண்டபடி திட்டுவாள்; இங்கு அனுப்பமாட்டாள். அதனால்தான் அவளிடம் சொல்லாமல் வந்தேன்...' என்றான், முகமது.
'முட்டாளாக இருக்கிறாயே... ஒரு பைசா கையில் இல்லாமல், கனவை நம்பி வந்திருக்கிறாயே... இப்போது சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்...'
'பட்டினி தான்...'
'கொஞ்சம் பணம் தருகிறேன் சாப்பிட்டுக் கொள்; ஆனா இங்கு நீ தங்கக் கூடாது; உடனே, உன் நகரத்திற்கு போய்விட வேண்டும்; இல்லையென்றால், சிறையில் தள்ளுவேன்...'
'சரி நீதிபதி அவர்களே...'
'உன் கதையைக் கேட்டதும், நான் கண்ட கனவு ஒன்று நினைவுக்கு வருகிறது; ஒருமுறை, நான் வித்வாத்திற்கு சென்ற மாதிரி, கனவு கண்டேன்...' என்றார், நீதிபதி.
'வித்வாத்திற்கா...' என்றான் முகமது.
'ஆமாம்... அந்த ஊரை விட்டு வெளியே வந்தேன்; அங்கு ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது...'
'பாழடைந்த மண்டபமா...'
'ஆமாம்... அதற்கு அருகில் ஒரு நீரூற்று இருந்தது; அதில் தண்ணீரே இல்லாமல் வறண்டு இருந்தது...'
'அப்புறம்...'
'அப்போது, ஒரு குரல், தோண்டு... அந்த செங்கற்களைப் பெயர்த்து எடு... என்றது...'
'பின்...' என்று, ஆர்வப்பட்டான் முகமது.
'பின், என் கனவு கலைந்தது; இதற்காக, நான் நீதிபதி பதவியை விட்டு விட்டு கையில் மண்வெட்டியுடன் வித்வாத் நகரத்துக்கு போக முடியுமா... இனிமேலாவது, புத்திசாலியாக இரு; இம்மாதிரி முட்டாள் தனமாக கனவை நம்பி, ஊர் ஊராக திரியாதே...' என்றார், நீதிபதி.
'சரி எஜமான்...' என்று கூறி வெளியே வந்தான். நீதிபதி கொடுத்த பணத்தில் உணவு உண்டான். வித்வாத் புறப்பட்ட பயணி ஒருவனிடம், கெஞ்சிக் கேட்டு, அவனுடன் புறப்பட்டான்.
அப்போது, இரவு நேரம்; நிலா காய்ந்து கொண்டிருந்தது; நகருக்குள்ளிருந்து வெளியே இருந்த வறண்ட நீரூற்றில் இறங்கினான்; சிதிலமாகிக் கிடந்த செங்கற்களை பெயர்த்துப் போட்டான்.
பொழுது விடியும் வரை, நீரூற்று பகுதியில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தான். முடிவில், அவன் கையில் கனமான தோல் பை தட்டுப்பட்டது. அதை, திறந்து பார்த்த போது, ஒரு அரசருடைய செல்வங்கள், இருப்பதைக் கண்டு, ஆனந்த கூத்தாடினான்.
'கனவை நம்பாத நீதிபதியே, இப்போது யார் முட்டாள்...' என்று, தன்னை மறந்து, உரக்கக் கூவினான் முகமது.
குட்டீஸ்... கனவு காணுங்கள்; புதையலை எண்ணிக் கொண்டிராமல், கனவை நனவாக்க உழையுங்கள்.
