
அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான் சேகர். அப்துல் கலாம் நினைவு தினம், பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. அவரது அறிவு நுட்பம், நாட்டுச் சேவை, எதிர்கால இந்தியாவை உருவாக்க, கனவுடன் உழைக்க வேண்டிய அவசியம் பற்றி எல்லாம் உரையாற்றினர், ஆசிரியர்கள்.
மாலை வீடு திரும்பி, சிற்றுண்டி முடித்தவுடன் படுக்கையில் விழுந்தான் சேகர்.
வழக்கத்துக்கு மாறான செயலால் பயந்து, ''என்னப்பா உடம்புக்கு முடியலையா...'' என பதறினாள் அம்மா.
கண்ணை திறக்காமல், ''சும்மா இருங்கம்மா... அப்துல் கலாம் ஐயா கனவு காண சொல்லியிருக்கார்... தொந்தரவு செய்யாதீங்க...'' என்றான்.
அம்மாவுக்கு, எதுவும் புரியவில்லை.
''என்னப்பா, பகலில் எப்படி கனவு வரும்...''
பரிதாபமாக கேட்டாள் அம்மா.
உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த பாட்டி, ''கலாம் எவ்வளவு பெரிய விஞ்ஞானி; எது சொல்லி இருந்தாலும், உண்மையாகத்தான் இருக்கும்; அவனை தொந்தரவு செய்யாதே...'' என தடுத்தார்.
பாடங்களை படிக்காமல், கால்களை ஆட்டியபடி கண்மூடி படுத்திருப்பதை வாடிக்கையாக கொண்டான் சேகர்.
வீட்டில் படிக்க வைக்க முயன்ற போதெல்லாம் தடுத்தார் பாட்டி.
''அவன் போக்குல விடு... கலாம் ஐயா கூறியபடி கனவு காணட்டும்...'' என பரிந்து பேசினார்.
அம்மாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
ஒரு வாரத்துக்கு பின் பொறுமை இழந்து, ''ஏம்பா... கனவு வந்துச்சா...'' என, நச்சரித்தார்.
''இல்லை பாட்டி... தொந்தரவு செய்யாதீங்க...''
சற்று அதட்டலாக பேசினான் சேகர்.
அன்று வீட்டிற்கு வந்திருந்தார் மாமா.
மாலையில் பாடங்களைப் படிக்காமல், கண் மூடியபடி, கட்டிலில் கிடந்த சேகரைக் கண்டதும், ''என்ன... உடம்பு சரியில்லையா...'' என விசாரித்தார்.
''உடம்புக்கு ஒன்றுமில்லை; கலாம் ஐயா கூறியபடி கனவு கண்டுட்டு இருக்கான்... அவனை தொந்தரவு செய்யாக்கூடாதாம்...'' என்றார் சற்று கவலையுடன் பாட்டி.
ஒன்றும் புரியாமல், ''என்ன இது...'' என விசாரித்தார் மாமா.
''அதை ஏன் கேக்குற... இரண்டு வாரமா, இதே கூத்து தான்... பாடம் எதையும் படிக்காமல், கனவு காண்கிறேன் என, கண்ணை மூடிக்கிடக்கிறான்...''
மாமவிடம் வருந்தினாள் அம்மா.
உண்மை புரிந்தது. சேகரை எழுப்பி, ''எதிர்காலத்தில் சிறப்பான இந்தியாவை உருவாக்கும் தலைவராக, மருத்துவராக, பொறியியலாளராக, விஞ்ஞானியாக உருவாக வேண்டியதன் அவசியத்தை தான், 'கனவு காணுங்கள்' என்று வலியுறுத்தினார் கலாம்...
''லட்சியத்தில் உறுதியுடன், முன்னேற்றக் கனவை அடையும் வரை விடா முயற்சியுடன் படித்து முன்னேற வேண்டியதன் அவசியத்தை தான், கலாம் ஐயா வலியுறுத்தி இருக்கிறார்... கண்மூடி துாங்குவதற்கு அல்ல...'' என்று அறிவுரைத்தார் மாமா.
''ஓ... அப்படியா... நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்; துாக்கத்துல வர்ற கனவுன்னு நினைச்சுட்டேன். இப்ப தான் புரியுது... லட்சியத்தை அடையும் வரை படிப்பில் கவனம் செலுத்துவேன்...''
உறுதியுடன் சொன்னான் சேகர்.
பாராட்டியதுடன், ''இதைத் தான் ஒவ்வொரு மாணவனிடமும் எதிர்பார்த்தார் கலாம்...'' என, தட்டிக் கொடுத்தபடி விடை பெற்றார் மாமா.
செல்லங்களே... எந்த அறிவுரையையும், பொருள் உணர்ந்து சரியாக புரிந்து நடக்க பழகுங்கள். அது தான் வாழ்வில் முன்னேற துணை புரியும்.
வே.சுந்தரம்

