PUBLISHED ON : ஜன 11, 2020

நெற்குப்பை என்ற ஊரில், பெரிய காடு இருந்தது. அங்கு, ஒரு நரி வசித்து வந்தது. இரை தேடி புறப்பட்ட நரி, வழிதவறி நகரத்துக்கு சென்றது. அங்கிருந்த நாய்கள் திரண்டு, பயங்கரமாக குரைத்து விரட்டின. தப்பி ஓடிய நரி, ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.
அது, துணிகளுக்கு சாயம் ஏற்றுபவன் வீடு. வீட்டருகே, தொட்டியில் நீலச்சாயம் கலந்து வைத்திருந்தான். நாய்களுக்கு பயந்து, மறைவிடம் தேடிய நரி, நீலச்சாய தொட்டிக்குள் குதித்தது.
துரத்தி வந்த நாய்கள், நரியைக் காணாமல், பலமாக குரைத்தபடி ஓடிவிட்டன.
குரைப்பு அரவம் அடங்கியதும், மெல்ல வெளியே வந்தது நரி. சாய தொட்டியில் அமிழ்ந்து கிடந்ததால், அதன் உடல், நீல நிறமாகி விட்டது.
நாய்களின் கண்ணில் படாமல் காட்டுக்குள் ஓடியது. நீல நிறத்தில் ஓடிய விலங்கை கண்ட, சிங்கம், புலி, கரடி, யானை போன்ற பலசாலிகள் பீதி அடைந்தன.
'இது வழக்கமான காட்டு விலங்காக தெரியவில்லை. இதனுடன் பழக்கம் வைத்தால் ஆபத்து ஏற்படும்...' என பேசியபடியே ஓடி ஒளிந்தன.
அந்த அச்சத்தை, புரிந்து கொண்ட நீலநரி, பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி பிழைக்க தீர்மானித்தது.
ஓடி ஒளிந்த விலங்குகளை எல்லாம் கூவி அழைத்து, 'சற்று நில்லுங்கள்... உங்கள் நலனை காக்கத்தான் வந்திருக்கிறேன்; அனாவசியமாக அச்சப்பட வேண்டாம்...' என, மிடுக் குரலில் பேசியது.
அறிமுகமான குரலாக இருந்ததால், விலங்குகள் ஓடுவதை நிறுத்தி, தயக்கத்துடன் நீலநரி பக்கம் வந்தன.
உயர்ந்து நின்ற பாறையில் ஏறிய நீலநரி, குரலை மாற்றி, 'வானுலகத்திலிருந்து, என்னை அனுப்பியுள்ளார் கடவுள். உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். இந்த காட்டின் அரசனாக பணியாற்ற வேண்டும் என்பது கடவுளின் கட்டளை; இந்த கணம் முதல், நான் அரசனாகிவிட்டேன்...' என்றது.
அந்த பேச்சில் மயங்கிய விலங்குகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றன.
ஏற்கனவே, அந்த காட்டின் அரச பதவிக்கு வர, பெரிய போட்டியிருந்தது. சிங்கம், புலி, சிறுத்தை, யானை என, வலிமையான விலங்குகள், பதவியை பிடிக்க துடித்தன. இந்த பூசலுக்கு இடையே, சம்பந்தமில்லாத விலங்கு மன்னனானதில், அனைத்து விலங்குகளுக்கும் பரம திருப்தி.
இப்போது, பிற பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டது. சர்ச்சைக்கு இடமளிக்காமல், சர்வாதிகாரமாக பதவிகள் கொடுத்தது நீலநரி.
சிங்கத்துக்கு, முதல் அமைச்சர் பதவி தரப்பட்டது; புலியிடம் படை தலைமை ஒப்படைக்கப்பட்டது; சிறுத்தை, காவலர்களின் தலைவனாக நியமிக்கப்பட்டது. கலைத்துறை குரங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், நரி இனத்திற்கு எந்த பதவி கொடுக்கவில்லை; இவ்வாறு செய்ததற்கு காரணம் இருந்தது. நரிகளை அருகே வைத்திருந்தால், குட்டு வெளிப்பட்டு விடும் என, அஞ்சியது நீலநரி.
நிறத்தில் தான் வேறுபாடே தவிர, இயல்பில் வித்தியாசமில்லை என, நரிகள் உணர்ந்தால், அடுத்த கணமே பதவி பறிபோய் விடும் என பயந்தது. அதனால், நரிகளை அருகில் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டது.
வலிமை மிக்க விலங்குகள் வேட்டை யாடும் இறைச்சியை தானும் உண்டு, மீந்தவற்றை, எளிய விலங்குகளுக்கு வழங்கி, உல்லாசமாக, சுக போகத்துடன் ஆட்சி நடத்தியது நீலநரி.
பதவி கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த நரிகள், கூடி யோசித்தன.
அறிவாற்றல் நிரம்பிய முதிய நரி, 'அன்பர்களே... நம்மை ஆட்சி செய்யும் விலங்கு, மோசடியாக தான் மன்னர் பதவியை பிடித்துள்ளது. அது, எல்லா அம்சங்களிலும் நம்மைப் போன்றே உள்ளது. நிறம் மட்டும் தான் நீலமாக இருக்கிறது. ஏதோ சூழ்ச்சி நடந்துள்ளதாக எனக்கு தோன்றகிறது...
'நாளை பவுர்ணமி தினம். சபையைக் கூட்டி, அலுவல்களை மன்னர் கவனிக்கும் போது, நாமெல்லாம் ஒரு பக்கம் கூடி ஊளையிடுவோம். அப்போது, மன்னரின் உண்மை தோற்றம் புலப்படும்...' என்று கூறியது.
அந்த திட்டத்தை நரிகள் எல்லாம் ஏற்றன.
மறுநாள் இரவு, நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. சபையைக் கூட்டி, அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தது நீலநரி.
சபையின் அருகே, மறைவாக கூடிய நரிகள், ஊளையிட துவங்கின. அதை கேட்டதும், நீலநரி கிளர்ச்சியடைந்து, உற்சாகமாக ஊளையிட துவங்கியது.
ஓடிவந்த நரிகள், 'அன்பர்களே... மன்னனாக இருப்பது, நரி தான். நீங்கள் நினைப்பது போல, தேவலோக விலங்கன்று. உடலில் நீலச்சாயம் பூசி, வேஷம் போட்டு முட்டாளாக்கியுள்ளது...' என கூறின.
விலங்குகள் திரண்டு, நீலநரியை நோக்கி பாய்ந்தன. உயிர் பிழைக்க, விழுந்தடித்து ஓடியது.
அப்போது, மழை லேசாக துார துவங்கியது. நீல சாயம் கரைந்தது. வேஷம் கலைந்த நரியைக் கண்டு, கைகொட்டி சிரித்தன விலங்குகள். மன்னர் பதவியை இழந்தது நீலநரி.
குழந்தைகளே... ஏமாற்றி பிழைப்பது நீண்ட நாள் நீடிக்காது; நரியின் கதிதான் ஏற்படும். எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து, மகிழ்ச்சியாக வாழுங்கள்!
