தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிசாசு கொடுத்த பரிசு!

பிசாசு கொடுத்த பரிசு!

பிசாசு கொடுத்த பரிசு!


PUBLISHED ON : மார் 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அங்கிருந்து நடந்த அவன் முதலில் நல்லூரை அடைந்தான். அங்கே எல்லாரும், பார்வை இழந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இலைகளின் மேல் கிடந்த பனித்துளி களை ஒரு பாத்திரத்தில் திரட்டினான் வாசு.

அவர்களை ஒவ்வொருவராக அழைத்தான். அவர்கள் கண்களில் பனித்துளியைத் தடவினான். எல்லாரும் பார்வை பெற்றனர்.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள், அவனிடம் ஏராளமான பொன்னையும், மணிகளையும் தந்தனர்.

அவற்றை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டான். அடுத்ததாக, அரசூரை அடைந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாரையும் கோவில் பாறை அருகே அழைத்துச் சென்றான். பாறையில் காதை வைக்கும் படி சைகை செய்தான்.

அவர்களும் அந்தப் பாறையில் காதை வைத்தனர். அந்தப் பாறையில் சுத்தியால் அடித்து, ஓசை எழுப்பினான். அந்த ஓசை கேட்டதும், அவர்கள் எல்லாருக்கும் காது கேட்கத் தொடங்கியது.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் அவனிடம் பொற்காசு மூட்டையைத் தந்தனர்.

''உங்களால் கேட்கும் ஆற்றலைப் பெற்றோம். எங்கள் காணிக்கையாக இதை வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினர்.

அந்தப் பொற்காசு மூட்டையையும் தூக்கிக் கொண்டான் அவன். அடுத்ததாக, புத்தூரை அடைந்தான்.

அங்கே நிறைய புன்னை மலர்கள் பூத்திருந்தன. அவற்றை காய்ச்சி, அந்த ஊர் மக்கள் அருந்தக் கொடுத்தான் அவன். எல்லாரும் பேசும் ஆற்றலைப் பெற்றனர்.

அவர்களும் அவனுக்கு ஏராளமான பொற்காசுகளைக் காணிக்கையாகத் தந்தனர்.

எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு, தன் ஊர் திரும்பினான்.

கூன் நீங்கி ஏராளமான செல்வத்துடன் அவன் திரும்பியதைப் பார்த்தான் சோமு.

பொறாமையால் துடித்த சோமு, ''உனக்கு எப்படி இவ்வளவு செல்வம் கிடைத்தது?'' என்று கேட்டான்.

நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொன்னான் அவன்.

''தேவதைகள் பாடிக் கொண்டிருந்த அந்த மரம் எங்கே உள்ளது? எனக்குக் காட்டு,'' என்று கேட்டான் சோமு.

''அங்கே செல்லும் எண்ணத்தை விட்டுவிடு. சென்றால், பிசாசுகளால் உனக்கு ஆபத்து வரும் என்னிடம் ஏராளமான செல்வம் உள்ளது. உனக்கு தேவையானதை எடுத்துக் கொள்,'' என்றான் வாசு.

''அந்த மரத்தைப் பார்க்க ஆசையாக உள்ளது. அதைக் காட்டு. நான் தனியாக அங்கே செல்ல மாட்டேன். என்னை நம்பு,'' என்றான் சோமு.

காட்டிற்கு அழைத்துச் சென்று அவன் அந்த மரத்தைக் காட்டினான்.

அன்று மாலையே அவனிடம் சொல்லாமல் புறப்பட்டான் சோமு. அந்த மரத்தை அடைந்த அவன் அதன் மேல் ஏறினான். கிளைகளுக்கு இடையே நன்றாக ஒளிந்துக் கொண்டான்.

சிறிது நேரம் சென்றது.

''ஆ! ஊ!'' என்று பயங்கரமான ஓசை கேட்டது. பூமி ஆடத் தொடங்கியது. நடுங்கிய அவன் கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

பிசாசுகள் நான்கும், அந்த மரத்தின் கீழ் வந்து நின்றன. வழக்கம் போலப் பெரிய பிசாசு மரத்தின் வேரில் அமர்ந்தது.

''நம்மிடையே கருங்காலி ஒருவன் இருக்கிறான். அவன்தான் ரகசியத்தை வெளிப் படுத்தி இருக்கிறான். இல்லாவிட்டால், நல்லூர் மக்கள் எப்படிப் பார்வை பெற்று இருப்பர்? புத்தூர் மக்கள் எப்படிப் பேசி இருப்பர்? அரசூர் மக்கள் எப்படிக் கேட்கத் தொடங்கி இருப்பர்? யார் அந்தக் கருங்காலி?'' என்று கோபத்துடன் கத்தியது பெரிய பிசாசு.

''நாங்கள் அப்படிச் செய்வோமா? எங்கள் மீது ஐயப்படலாமா?'' என்று மூன்று குட்டிப் பிசாசுகளும் கேட்டன.

''நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள். அப்படியானால் யார் செய்து இருப்பர்?'' என்ற அது சிந்தனையில் ஆழ்ந்தது.

''இந்த ரகசியங்களை நாம் இங்கேதான் பேசினோம். இங்கேதான் ஏதோ நடந்து உள்ளது. நாம் பேசியதை யாரோ கேட்டிருக்க வேண்டும். நாம் ஒளிந்து இருந்து பார்த்தால், உண்மை தெரிந்து விடும்,'' என்றது.

அருகில் இருந்த புதரில் அந்த நான்கு பிசாசுகளும் நன்றாக ஒளிந்துக் கொண்டன.

மரத்தில் இருந்த சோமு அவற்றின் பேச்சைக் கேட்டு நடுங்கினான்.

சிறிது நேரம் சென்றது. கலகலவென்று சிரித்தபடி தேவதைகள் அங்கே வந்தன. பிசாசுகள் ஒளிந்து இருந்ததை அவை அறியவில்லை.

வழக்கம் போல அவை,

''ஒன்றும் ஒன்றும் இரண்டு,

இரண்டும் ஒன்றும் மூன்று,

மூன்றும் ஒன்றும் நான்கு,

நான்கும் ஒன்றும் ஐந்து,'' என்று பாடத் தொடங்கின.

இந்த தேவதைகள் தன் கூனைச் சரியாக்கி விடும் என்று நினைத்தான் அவன். அவை பாடி முடிக்கும்வரை அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

''ஐந்தும் ஒன்றும் ஆறு,

ஆறும் ஒன்றும் ஏழு,'' என்று பாடியபடியே கீழே குதித்தான்.

அவன் குதித்ததைப்பார்த்த தேவதை கள் பாடுவதை நிறுத்தின. அவனைக் கோபத்துடன் பார்த்தன.

''நாங்கள் எல்லாரும் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தோம். குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாயே,'' என்றது தேவதைகளின் தலைவி.

புதரில் மறைந்து இருந்த பிசாசுகள் அங்கே நடந்த எல்லாவற்றையும் பார்த்தன.

''இவன்தான் ஒளிந்து இருந்து எல்லாவற்றையும் கேட்டு இருக்கிறான். நம் முயற்சியை எல்லாம் பாழாக்கி விட்டான். இவனைப் பிடியுங்கள்,'' என்று கோபத்துடன் குரல் கொடுத்தது பெரிய பிசாசு.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் அங்கே ஓடி வந்தன.

பிசாசுகள் வருவதைப் பார்த்ததும் தேவதைகள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.

மூன்று பிசாசுகளும் சோமுவைப் பிடித்துக் கொண்டன. பெரிய பிசாசு அங்கே வந்தது.

''நான் இப்போதுதான், முதன் முறையாக இங்கே வந்தேன். உங்கள் ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னவன் என் நண்பன் வாசுதான். என்னை விட்டுவிடுங்கள். இனிமேல், இந்தப் பக்கம் வர மாட்டேன்,'' என்று கெஞ்சினான்.

அவனை முறைத்துப் பார்த்த பெரிய பிசாசு, ''உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. நீ சொல்லவில்லை என்பதை நம்ப முடியாது. உனக்குக் கொடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,'' என்றது.

''இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?'' என்று மற்ற பிசாசுகளைக் கேட்டது.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் அவனை நன்றாகப் பார்த்தன.

அவற்றில் ஒன்று, ''இவன் முதுகில் தேங்காய் அளவு கூன் உள்ளது. இன்னொரு தேங்காய் அளவு கூனை வைத்தால் பூசணிக்காய் அளவாகிவிடும். அவ்வளவு பெரிய கூனைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் துன்பப்படுவான். இவனுக்கு ஏற்ற தண்டனை இதுதான்,'' என்றது.

இதைக் கேட்ட அவன், ''என்னைக் கொன்று போடுங்கள். இன்னொரு கூன் வேண்டாம்,'' என்று அலறினான்.

அவன் அலறலை அவை பொருட்படுத்தவில்லை. இன்னொரு கூனை அவன் முதுகில் வைத்துவிட்டு, அங்கிருந்து மறைந்தன.

இப்போது, அவன் முதுகில் பூசணிக்காய் அளவு பெரிய கூன் இருந்தது. அந்தக் கூனைத் தூக்கிக் கொண்டு, அவனால் நடக்க முடியவில்லை.

எப்படியோ, மெல்ல நடந்து ஊர் வந்து சேர்ந்தான்.

அவன் நிலையைப் பார்த்து இரக்கப்பட்ட வாசு அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான்.

தனது நிலைமையை எண்ணி அழுது புலம்பினான் சோமு.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us