PUBLISHED ON : நவ 20, 2021

காட்டில் யாகம் செய்து கொண்டிருந்தனர் இரண்டு முனிவர்கள்.
அப்போது, அங்கு வந்தது ஒரு கீரி. அதன் உடல் பாதி தங்கமாக இருந்தது.
முனிவர்கள், 'என்ன வேண்டும்...' என்று கேட்டனர்.
ஒரு கதையை கூறியது கீரி.
'ஒரு ஏழையும், அவன் குடும்பமும் வேலையின்றி, நான்கு நாட்கள் பட்டினி கிடந்தனர். ஐந்தாவது நாள், சிறு வேலை கிடைத்தது. அந்த பணத்தில் கொஞ்சம் தினை வாங்கி வந்தான் ஏழை. அவன் மனைவி அதை மாவாக்கி வைத்திருந்தாள்...
'ஏழைக்கு, இரண்டு குழந்தைகள்; தினை மாவை உண்பதற்காக, நான்கு கிண்ணங்களில் எடுத்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து யாசகம் கேட்டான்...
'ஏழை, தன் பங்கு தினை மாவை பிச்சைக்காரனுக்கு கொடுத்தான். ஆனால், பிச்சைக்காரன் வயிறு நிரம்பவில்லை...
'இப்போது ஏழையின் மனைவி, தன் பங்கு தினை மாவை கொடுத்தாள்; அதையும் சாப்பிட்டு, பசி அடங்கவில்லை என்றான் பிச்சைக்காரன்...
'இரண்டு குழந்தைகளும், தங்கள் பங்கு தினை மாவை, பிச்சைக்காரனுக்கு கொடுத்தனர்; அவன் சாப்பிட்டு புறப்பட்டான்... அங்கே சிதறிக் கிடந்த தினை மாவு துணுக்கில் நான் புரண்டேன்; உடலில் பாதி தங்கமாகி விட்டது...' என்றது.
வியப்புடன் கவனித்த முனிவர்களிடம், 'என் உடலின் மற்ற பாதியையும் தங்கமாக்க முடியுமா...' என்றது கீரி.
'மனம் முழுதும் தங்கத்தால் நிறைந்துள்ள ஏழையால் தான் அது முடியும்...' என்று அனுப்பி வைத்தனர் முனிவர்கள்.
குழந்தைகளே... தானம் வழங்குவது பெருமை தரும் என்பதை உணருங்கள்.
மரகதம் சிம்மன்
