PUBLISHED ON : ஜூன் 17, 2016

இது 60 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது நான், தம்பி, தங்கை மூவரும் ஈரோட்டில் உள்ள முனிசிபல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அன்று பள்ளி விட்டவுடன் வழக்கம்போல், வீட்டுக்குப் புறப்பட்ட நாங்கள், பள்ளியின் வாசலை ஒட்டி வளர்ந்திருந்த செடிகளுக்கிடையில் கொலுசு ஒன்று கிடப்பதைப் பார்த்தோம்.
'இது கண்டிப்பாக நம்ப ஸ்கூல் பிள்ளைகளுடையதாகத்தான் இருக்கும். ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போயிட்டார். நாளைக்கு அவரிடம் கொடுத்து விடலாம், என்று அந்தக் கொலுசை பையில் பத்திரமாக வைத்தேன். வீட்டில் பெற்றோரும் அதையே சொன்னார்கள்.
அடுத்த நாள், ஹெட்மாஸ்டரிடம் நடந்ததையெல்லாம் கூறி கொலுசை அவரிடம் கொடுத்தோம். அதைக் கையில் வாங்கியவர் ஏற்கனவே, மேசை மேலிருந்த மற்றொரு கொலுசுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். இரண்டும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன், 'குழந்தைகளே! சிறிது நேரத்திற்கு முன் நம் பள்ளிச் சிறுமி தமிழ்ச்செல்வியின் அப்பா வந்திருந்தார். இது அவளது கொலுசுதான். தொலைந்த கொலுசை யாராவது கொண்டு வந்தால் அவருக்குச் சொல்லி அனுப்புமாறு சொன்னார்' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இறை வணக்கக் கூட்டத்துக்கான மணி அடித்தது.
கூட்டத்தில் ஹெட்மாஸ்டர் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிவிட்டு, 'நீங்களும் இவர்களைப் போல் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களது பொருளுக்கு ஆசைப்படக்கூடாது' என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது தமிழ்ச்செல்வியின் அப்பாவும் அங்கே வந்தார்.
எங்களை வாழ்த்தியதோடு ஆளுக்கு எட்டணாவை பரிசாகக் கொடுத்தார். இன்று அப்பள்ளி தோற்றத்தில் முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும், அப்பள்ளியில் நடந்த சம்பவங்கள் மட்டும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
-ஏ.வெங்கடேசன், கொடுங்கையூர்.

