sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

கண்ணாடித் தலையன்! (2)

/

கண்ணாடித் தலையன்! (2)

கண்ணாடித் தலையன்! (2)

கண்ணாடித் தலையன்! (2)


PUBLISHED ON : ஜூன் 17, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 17, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பறவைக் கூட்டத்தினிடையே, தர்பாருக்குள் நுழைந்த வழுக்கைத் தலையனைக் கண்ட சுல்தானுக்கு வியப்பினால் பேச்சே வரவில்லை. அடுத்த வினாடி அத்தனை பறவைகளும் கலகலவென்று இனிமையான ஒலி எழுப்பியபடி அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மரங்களில் போய் உட்கார்ந்து பாடலாயின.

''சுல்தான் அவர்களே! உங்கள் நிபந்தனையை நிறைவேற்றி விட்டேன். உங்கள் மகளை எனக்கு மனைவியாக்குங்கள்,'' என்றான் கண்ணாடித் தலையன்.

''அவசியம், அவசியம். திருமண ஏற்பாடுகளை நான் உடனே செய்கிறேன். உன் தலையில் அடர்த்தியான சுருள் முடிதான் உன் முகத்துக்கு ஏற்றதாக இருக்கும். பெரிய மந்திரவாதியான நீ அடர்த்தியான தலைமுடியோடு வந்துவிடு. இளவரசியும் சந்தோஷப்படுவாள்,'' என்றார் சுல்தான்.

மறுபடியும் பாவம், வழுக்கைத் தலையனுக்கு வருத்தமான வருத்தம். அவன் வழு வழுத் தலையில் கருகரு முடி எப்படி முளைக்கும்? இருந்தாலும் மன்னரை வணங்கி விடை பெற்றான்.

அரசர் என்ன முட்டாளா? வழுக்கைத் தலையனுக்குத் தம் பெண்ணை மணம் செய்து கொடுக்க. பிரதம மந்திரியைக் கூப்பிட்டார்.

''வஸீர்! உடனே என் மகளுக்குத் தகுந்த ஒரு வரனைப் பார்த்து நாளையே திருமணத்தை முடித்துவிட வேண்டும். ஏன், உமது மகன் இருக்கிறானே... அவனை விடாவா சிறந்த மாப்பிள்ளை கிடைக்கப் போகிறான்? நாளைக்கே உமது மகனுக்கும், எனது மகளுக்கும் கல்யாணம்,'' என்றான் சுல்தான்.

இதைக் கேட்டு, மகிழ்ந்தார் மந்திரி.

வழுக்கைத் தலையனுக்கு சுல்தானின் சதிச் செயல் எட்டியது.

மறுநாள் அரண்மனைக்கு வந்து ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டான். மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்துச் சென்றனர் தோழிகள்.

கல்யாண மண்டபத்தில் சுல்தானைத் தவிர எல்லாருமே கூடி விட்டனர். ஒரு தூணின் மறைவிலிருந்த வழுக்கைத் தலையன், மந்திரவாதி பறவைகள் மயங்கச் செய்யச் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கூறினான். அவ்வளவுதான் மண்டபத்திலிருந்த அத்தனை பேரும் சிலைகளைப் போலாகி விட்டனர். அசையவே இல்லை!

சுல்தான் வந்தார்; பார்த்தார். மணமகன், மணமகள், மந்திரி பிரதானிகள் எல்லாருமே சிலைகளாகி, சலனமற்று கிடப்பதைக் கண்டு கலங்கினார். நாட்டிலுள்ள பெரிய, பெரிய மந்திரவாதிகளையும், பக்கீர்களையும் வரவழைத்து மயங்கிக் கிடக்கும் அவர்களை உயிர்ப்பிக்கும்படி கேட்டார்.

அவர்களோ, ''மன்னா! குற்றம் உம்மீது உள்ளது. சொன்ன வாக்குப்படி நடக்காததனால்தான் இந்த நிலை. இவர்களைக் கட்டியிருக்கும் மந்திரத்திலிருந்து விடுவிக்க ஒரே வழி, இந்த மணமகனை அனுப்பிவிட்டு, அந்த இடத்தில் வழுக்கைத் தலையணை மணமகனாக்குவதுதான்,'' என்றனர்.

பாவம், சுல்தான்! வேறு வழியின்றி வழுக்கைத் தலையன் வீட்டுக்கு வீரர்களைப் பல்லக்குடன் அனுப்பினார். அவன் அம்மா இலேசுப்பட்டவளா?

''ஐயோ! என் அருமைப் பிள்ளையை பல நாட்களாகக் காணோமே. என்னிடம் பணங்காசு இருந்தாலாவது அவனைத் தேடி கண்டுபிடிக்கச் சொல்வேன். ஏதுமில்லாத ஏழை நான்,'' என்று நாடகமாடினாள்.

''அதற்காக வருந்த வேண்டாம். இந்த மூட்டை நிறைய பொற்காசுகள் உள்ளன. விரைவில் உங்கள் மகனைத் தேடிக் கண்டிபிடித்து அரண்மனைக்கு அழைத்து வா,'' என்று கூறிவிட்டுச் சென்றனர் வீரர்கள்.

அன்றிரவே வழுக்கைத் தலையன் தன் வீட்டுக்குள் வந்தான். பல நாட்கள் யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள்ளேயே சுகமாகச் சாப்பிட்டு ஒளிந்திருந்தான். அரண்மனையிலோ, மந்திரத்தினால் கட்டுண்ட அத்தனை பேரும் அப்படியே இருந்தனர்.

ஒருநாள் -

எங்கோ வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவன் போல் அரண்மனைக்குப் போனான் கண்ணாடித் தலையன்.

''மாப்பிள்ளை! மாப்பிள்ளை! எங்கே போய்விட்டீர்கள் இத்தனை நாட்களும்?'' என்று உபசாரத்துடன் வரவேற்றார் சுல்தான்.

''நியாயமான முறையில் உங்கள் மகளை நான் பரிசாகப் பெற்றேன். ஆனால், நீங்கள் அவளை எனக்கு மனைவியாக்க விரும்பவில்லை. ஆகவே, எனக்கு வீடும், நாடும், வாழ்வும் வெறுத்துப் போச்சு. கால் போன திசையில் சுற்றினேன். இப்போது என் உரிமையைப் பெற வந்திருக்கிறேன். உங்கள் வஸீரைக் கூப்பிட்டுத் திருமணத்துக்கான ஏற்பாட்டைச் செய்யச் சொல்லுங்கள்,'' என்றான்.

வஸீர் திருமண ஒப்பந்தம் தயாரித்தார். வேறு வழியின்றி சுல்தான் தம் ஒப்புதலை அளிக்க முத்திரை மோதிரத்தை அதில் பதித்தார்.

கண்ணாடித் தலையனும், மந்திரத்தைக் கூறி எல்லாரையும் விடுவித்தான்.

இளவரசிக்கும், கண்ணாடித் தலையனுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. அடடே! ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டோமே...! இப்போது அவன் கண்ணாடி தலையனல்லன்.

ஏன் தெரியுமா? அடர்த்தியான சுருள் முடிகளைத் தன் தலையில் வைத்து மந்திரத்தைக் கூறினான். அவை அவன் தலையில் அப்படியே நிரந்தரமாக நின்றுவிட்டன.

இப்போது சுருள் முடிகொண்ட ஆண் அழகனான அவனைக் கண்டதும், இளவரசிக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

சுருள் முடியனும், சுந்தர வதனியான இளவரசியும் கணவனும், மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்தனர்.

- சுபம்.






      Dinamalar
      Follow us