/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (12)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (12)
PUBLISHED ON : ஜூன் 17, 2016

ஹலோ மாணவர்களே... இந்த வாரம் ரொம்ப மிரண்டுபோய் காத்திருக்கீங்களா... குட்டீஸ் மட்டுமல்ல... பெரியவர்கள், உங்க மம்மீஸ்ல சில பேர், தாத்தா, பாட்டிகள் என அனைவரும் வர்ஷி மிஸ்... வர்ஷி மிஸ் என அன்பை பொழிவது எனக்கு ரொம்ப, 'குஷி'யா இருக்கு.
ஒரு மம்மி எழுதியிருந்தாங்க... 'எனக்கு, 'இங்கிலீஷ்' தெரியலைன்னு என் பிள்ளைகள் ரொம்ப கிண்டல் செய்வாங்க... இனி, 'வர்ஷி' மிஸ் இருப்பதால் கவலை இல்லை' என்று எழுதியிருந்தார். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். இனி பாடத்துக்கு போலாமா?
இது ரொம்பவும் முக்கியமான பாடம். ஸோ... கவனமா படிக்கணும். சரியா? நாம் வாக்கியங்களை அமைப்பதற்கு முன் ஒரு செயல் எந்த காலத்தில் நடைபெற்றது என்பதன் அவசியத்தை கவனிக்க வேண்டும். அதைத்தான் இப்போ கத்துக்கப் போறீங்க.
உதாரணம்:
1. நான் கடிதம் எழுதுகிறேன் - Simple Present
2. நான் கடிதம் எழுதினேன் - Simple Past
3. நான் கடிதம் எழுதுவேன் - Simple Future
4. நான் கடிதம் எழுதியிருக்கிறேன் - Present Perfect
5. நான் கடிதம் ஏற்கனவே எழுதியிருந்தேன் - Past Perfect
6. நான் கடிதம் எழுதியிருப்பேன் - Future Perfect
7. நான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன் - Present Continuous
8. நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன் - Past Continuous
9. நான் கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன் - Future Continuous
10. நான் காலையில் இருந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் - Present Perfect Continuous
11. நான் காலையில் இருந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன் - Past Perfect Continuous
12. நான் காலையில் இருந்து கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன் - Future Perfect Continuous
அய்யய்யோ... எனக்கு தலைய சுத்தது ஆளைவிடுங்கன்னு ஓடப் போறீங்களா? இல்லையா? குட்... நீங்க எல்லாருமே சமத்து சக்கரகுட்டிகள்தானே...
இந்த 12 வாக்கியங்களையும் நன்றாகப் படித்து மூளையில் பதிவு செய்து கொண்டாலே நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டாயிற்று என்றுதான் அர்த்தம்.
சரி... இந்த ஒவ்வொரு வாக்கியங்களையும் எங்கெங்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தர்றேன்.
நான் கடிதம் எழுதுகிறேன் - Simple Present tense
வழக்கமாக நடைபெற்று வரும் செயல்களைப் பற்றி குறிப்பிட Simple Present tense ஐ பயன்படுத்த வேண்டும்.
உதாரணம்: நான் 9 மணிக்கு அலுவலகம் செல்கிறேன். மாலை 7 மணிக்கு திரும்பி வருகிறேன். நான் ஞாயிற்றுகிழமைகளில் கோயிலுக்குச் செல்கிறேன். இப்படி வழக்கமாக நடைபெறும் செயல்களைப் பற்றி பேசும்போது Simple Present tense ஐ பயன்படுத்த வேண்டும்.
சரி... இப்போ இரண்டு வார்த்தைகளில் வாக்கியங்களை அமைக்கப்போறோம். சரியா? ரொம்ப த்ரில்லா இருக்கா?
உதாரணம்:
1. I Believe - நான் நம்புகிறேன்.
2. You Believe - நீ/நீங்கள் நம்புகிறீர்கள்.
3. We Believe - நாங்கள் நம்புகிறோம்.
4. They Believe - அவர்கள் நம்புகின்றனர்.
5. He Believes - அவன் நம்புகிறான்.
6. She Believes - அவள் நம்புகிறாள்.
7. It Believes - அது நம்புகிறது.
இது Subject + verb இணைந்துள்ள வாக்கியங்கள் சரியா?
இரண்டு வார்த்தை வாக்கியங்களாக இருந்தாலும் அவை முழுமையான அர்த்தத்தை தருகிறது அல்லவா? இவற்றையே சற்று மாற்றி I believe you - நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லிப் பாருங்கள்... வாவ்... சூப்பர்... இப்படித்தான் வாக்கியங்கள் அமைக்க வேண்டும்.
இதே போல் நீங்கள் அமைத்துப் பார்க்க சில Verb களை கொடுக்கிறேன். கட்டாயமாக உங்களது நோட்டுப் புத்தகத்தில் இவற்றை நான் எழுதியது போலவே எழுதிப் பழக வேண்டும். சரியா?
Ask, Agree, Arrive,
Advance, Enjoy, Follow,
Move, Look, Inform.
இதுதான் உங்களுக்கான, 'ஹோம் ஒர்க்.' சரியா? பை! பை!,
உங்கள் வர்ஷி மிஸ்!

