/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
இமுவும், இயக்குனர் அரவிந்தனும்....
/
இமுவும், இயக்குனர் அரவிந்தனும்....
PUBLISHED ON : ஜூன் 17, 2016

சமீபத்தில் லக்னோவில் நடந்த எட்டாவது சர்வதேச குழந்தைகளுக்கான திரைப்பட திருவிழாவில், இந்தியா சார்பில் திரையிடப்பட்ட இரண்டு படங்களில், தமிழகத்தில் இருந்து சென்ற, 'இமு' படமும் ஒன்று.
உலகம் முழுவதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படங்களை பல பிரபலங்கள், பள்ளிக்குழந்தைகளுடன் பார்த்து ரசித்தனர். ஜப்பான் நாட்டு படம் ஒன்று சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று லட்ச ரூபாய் பரிசினை பெற்றது. பரிசு பெறாவிட்டாலும் பலரது பாராட்டை பெற்றது 'இமு' குறும்படம். இந்த படத்தை இயக்கியவர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஏ.எம்.அரவிந்தன்.
'இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா சார்பில் எனது படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது பெருமையைத் தருகிறது.
'ஸ்பெயின், ரஷ்யா, உக்ரைன், ஜப்பான் என்று பல்வேறு நாட்டு திரைப்பட இயக்குனர்களுடன் நானும் மேடையில் நின்றது மகிழ்ச்சியை தந்தது. ஒரே ஒரு நாள் மட்டும், 'இமு' படம் திரையிடுவதாக இருந்தது. ஆனால், படத்தை பார்த்த விழாக்குழுவினர், விழா நடந்த நான்கு நாட்களுமே என் படத்தை திரையிட்டு பெருமை சேர்த்தனர், என்றார் அரவிந்தன்.
'இமு' கதையை சொல்லட்டுமா?
சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ள அந்த சிறுவனுக்கு உலகமே, தான் கண்ணாடி தொட்டியில் வளர்த்து வரும் மீன்தான்.
'இமு' என்ற பெயரிட்டு இவன் வளர்க்கும் இந்த மீனுடன்தான் பெரும்பாலும் பொழுதை செலவிடுவான். இந்த மீனை பார்க்கும் போதெல்லாம் சிறுவனுக்கு எவ்வளவு உற்சாகம் வருகிறதோ, அதே அளவு உற்சாகம் மீனுக்கும் ஏற்படுகிறது.
மற்ற சிறுவர்களுடன் விளையாடப்போகும் போது கூட மீன் தொட்டியுடன் தான் செல்வான். அப்படி ஒருநாள் எடுத்துச் செல்லும்போது, நண்பனின் பந்து பட்டு, மீன் தொட்டி உடைந்துவிடுகிறது.
தண்ணீரின்றி துள்ளிக்குதிக்கும் மீனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதை தூக்கி போய் அருகில் உள்ள ஓடையில் விட்டுவிடுகிறான் சிறுவன். அந்த மீனும் உயிர்பிழைத்துவிடுகிறது.
மீனை காப்பாற்றிவிட்டாலும், அதன் அருகாமை இல்லாமல் சிறுவன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான். தூக்கத்தில் கூட, 'இமு... இமு' என்று பிதற்றுகிறான், மீனைவிட்ட ஓடைக்கு அடிக்கடி போய்ப் பார்த்து அங்கே அந்த மீன் இல்லாததை பார்த்து ஏங்கிப் போகிறான்.
மீண்டும் ஒரு மீன் தொட்டி கிடைக்கிறது. அதில் இருந்தது போலவே தண்ணீர் ஊற்றுகிறான். ஆனால் மீன்?
அதனை தேடி விரக்தியுடன் மீண்டும் ஓடைக்கு செல்கிறான். ஓடையின் வெறுமை இவனை வாட்டுகிறது. வருத்தத்துடன் திரும்பும்போது தண்ணீரில் ஒரு சலசலப்பு. திரும்பிப் பார்த்தால் அவன் வளர்த்த அதே மீன் உற்சாகமாக இவனைப் பார்த்து நீந்தி வருகிறது.
அப்படியே அன்பொழுக தண்ணீருடன் அள்ளி எடுத்து ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று புதிதாக வாங்கிய தண்ணீர் தொட்டிக்குள் விடுகிறான்.
தண்ணீருக்குள் விடப்பட்ட மீன் துள்ளிக்குதித்து சந்தோஷத்தில் நீந்துகிறது. தண்ணீருக்கு வெளியே அதே சந்தோஷம் சிறுவனின் முகத்தில் நிலவுகிறது.
படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர் கே.பி.கணபதி, கேமிராமேன் ஜோ மெர்வின், எடிட்டிங் ராமமூர்த்தி, சவுண்டு மிக்சிங் தபஸ்நாயக் என்ற பெயர் பட்டியலுடன் படம் நிறைவுபெறுகிறது.
இயக்குனர் அரவிந்தன் பல பெரிய திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் பெரிய திரைப்படம் செய்யும் ஆர்வத்துடன் உள்ளார். இடைப்பட்ட காலத்தில் சும்மாயிருக்கக்கூடாது என்பதற்காக ஒரு குறும்படம் செய்வோம் என்று எடுக்கப்பட்ட படமிது.
படம் எடுக்கும் போது, இந்தப் படம் சர்வதேச அளவில் புகழ் பெறும் என்று எண்ணவில்லை. ஆனால், ஒரு பெரிய திரைப்படத்திற்கு உண்டான தகுதிகளுடன் எடுக்கப்பட்ட படம் இது என்றார் இயக்குனர் அரவிந்தன். இன்னும் பல சாதனைகளை படைத்து நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க சிறுவர்மலர் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
இந்த இமு படத்தை பார்ப்பதற்கான லிங்க்: https:www.youtube.com/watch? v=m9sa7vamUdg
பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க குட்டீஸ்! அவரது மொபைல் எண்: 96006 61784
- எல்.முருகராஜ்.

