
ஹாய் ஜெனி ஆன்டி... எனக்கு 'சிறுவர்மலர் இதழ்' ரொம்ப பிடிக்கும். இங்கு உங்களிடம் கேட்கும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்றீங்க ஆன்டி. ஸோ, என் பிரச்னைக்கு ஒரு, 'அட்வைஸ்' கொடுங்க ப்ளீஸ். நான் புகழ் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன்.
எனக்கு, 'புக்ஸ்' படிப்பது ரொம்பவே பிடிக்கும். அதனால், சிறுவர்மலர் இதழை போல, தற்போது வேறு ஒரு இதழை படித்தேன். அதில், வரும் ஒரு பகுதிக்கு கதை எழுதி அனுப்பினேன். ஆனால், அந்த இதழில், நான் எழுதி அனுப்பிய கதை வரவில்லை. அதனால் நான் ரொம்ப வருத்தப்பட்டேன்.
ஆனால், மறுநாள் அந்த இதழில் இருந்து ஒரு போன், வந்தது. அதில், ஒருவர் நான் எழுதிய கதை நன்றாக இருந்ததாக பாராட்டினார். நானும் சந்தோஷமாக நன்றி கூறி இணைப்பை துண்டித்தேன். ஆனால், அந்த, 'போன் கால்' அடிக்கடி வந்து ஆரம்பத்தில் நான் எழுதிய கதையை பற்றி பேசிவிட்டு, வேறு எங்கேயோ பேச்சை இழுக்கின்றனர்.
அண்ணனிடமோ அல்லது பெற்றோரிடமோ போனை கொடுத்தால், இணைப்பை துண்டிக்கின்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் செய்தித்தாள் படிப்பேன். அதனால், நாட்டு நடப்புகள் தெரியும். எனக்கு இந்த, 'போன் கால்ஸ்' தவறாக தோன்றுகிறது.
இதற்காக நான் நம்பிக்கையுடன், மிகவும் விரும்பும் சிறுவர்மலர் இதழின் ஜெனிபர் ஆன்டியிடம் அட்வைஸ் கேட்கிறேன்... நான் என்ன பண்ணட்டும்னு சொல்லுங்க ஆன்டி...
ஹாய்மா... கங்கிராட்ஸ்... எதுக்குன்னு கேட்கிறியா? இந்த காலத்து பசங்களுக்கு, 'புக்ஸ்' படிக்கிற பழக்கமே இல்லை. எப்பவும், 'நெட், வாட்ஸ் அப்'னு, கிடக்கிறாங்க. அதில் நீ வித்தியாசமாய் இருக்கிறாய். எட்டாவது படிக்கும்போதே, கதை எழுதி அனுப்பியுள்ளாய். தினமும் செய்தித்தாள் வாசிப்பதால் நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்திருக்கிறாய்...
அதைவிட, 'ஸ்மார்ட்'டாய் ஒரு கேள்வி கேட்டுள்ளாய். 'ஜெனி ஆன்டி இந்த, 'போன் கால்ஸ்' எனக்கு தவறாகப்படுகிறது... என்ன செய்யட்டும்?' என்று. உண்மையிலேயே, அது தவறான போன்-கால்ஸ்தான். இந்த விஷயத்தை உன் பெற்றோரிடம் சொன்னாயா?
இந்த மாதிரி தெரியாத ஆண் நபர்களிடம் இருந்து போன் வந்தால் பேசவே கூடாது. நாம் கொஞ்சம் பேச்சு கொடுத்தாலே போதும்.... பேச்சை வளர்ப்பர்... ஸோ... தெரியாத நபர்களிடம் இருந்து போன் வந்தால், 'கட்' பண்ணிவிடு. 'ஆண்ட்ராய்ட் போன்' என்றால் அந்த நம்பரை, 'பிளாக்' பண்ணிடு.
அந்த அலுவலகத்தில் இருந்து மீண்டும், மீண்டும் கால்ஸ் வந்தா, 'நீ நல்லா கோபமா பேசு... உங்களுக்கு இப்ப என்ன வேணும்? நான் எழுதின கதை நல்லா இருக்குன்னா அதை உங்கள் இதழில் போட வேண்டியதுதானே...
அதைவிட்டுட்டு கதை நல்லா இருக்குன்னு தினமும் போன் பண்ணி இதைப் பற்றி சொல்ல என்ன இருக்கு? இனிமேலும், என்னை போனில் தொந்தரவு செய்தால், பெற்றோருடன் வந்து, உங்கள் அலுவலகத்தின் மனித வளத்துறை அதிகாரியிடம் (H.R) இது குறித்து நான் புகார் செய்ய வேண்டியிருக்கும்...' என்று சொல்லி, 'டக்'கென்று போனை, 'கட்' பண்ணு.
அதன் பிறகு அந்த, 'போன் கால்' வரவே வராது. இப்படி உனக்கு பேச தைரியம் இல்லையென்றால், உன் அண்ணா அல்லது பெற்றோரிடம் சொல்லி பேசச் சொல். சரியா?
எப்பவுமே இதுபோல் உஷாராய் இருப்பது நல்லது. எதிர்காலத்தில் நீ ஒரு சிறந்த கதாசிரியையாய் வர என் வாழ்த்துக்கள்!
செல்ல முத்தங்களுடன்,
ஜெனிபர் ஆன்டி.

