
சீனாவிலுள்ள, 'காங்டாங்' மாகாணத்திலுள்ளது, 'ஷண்டே' என்ற சிறிய கிராமம். இக்கிராமம் மட்டும் சிறியதே ஒழிய, இதன் பெருமை மிகவும் பாராட்டுதலுக்குரியது.
இக்கிராமத்தில் வசிக்கும் பெண்மணிகள் அனைவருமே, 'திருமணமே வேண்டாம்' என்ற மிகவும் அழுத்தமான கொள்கையுடன், உலகமே பெருமைப்படும்படியாக, மிகத் தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
பெண்கள் என்றால் அவர்கள் இனவிருத்தி செய்வதற்கும், வீடு மற்றும் வயல்வெளிகளில் நாள் முழுவதும் உழைக்க மட்டுமே தகுதி உள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அந்த ஆண் ஆதிக்கத்திற்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கின்றனர் இந்த, 'ஷண்டே' கிராமத்துப் பெண்மணிகள்!
இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட சில பெண்கள், முதலில் அவ்வூரிலுள்ள பட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்தனர். தன் கையில் திறமை இருக்கிறது. இனி தலை நிமிர்ந்து தனியே வெளி உலகில் நடமாட இந்தத் திறமை ஒன்றே போதும் என்ற தீவிர எண்ணம் இவர்களை ஊக்குவிக்க, தனியே வாழ்ந்து பீடு நடை போடுவோம் என்ற உறுதியில், 'இனி திருமணமே செய்து கொள்ள மாட்டோம்' என்று சத்தியம் செய்தனர்.
இவ்வூரில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் போய் உழைத்து எங்களை நிமிர்த்திக் கொள்வோம் என்று முடிவு எடுத்ததின் பலன்தான் சிங்கப்பூர், மலேஷியா, மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பிரபல இடங்களில் எல்லாம், 'ஷண்டேவின் ப்ளாக் - ஒயிட் அமாஸ்' என்ற பெயர் மிகவும் பிரபலமடைந்தது என்றால் அது மிகையாகாது. இத்தனை பிரபலங்கள் வந்தடைய காரணமானவர் 83 வயதை நிரம்பிய, 'வாங்க்ஷி' என்ற இளைஞிதான்.
சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த அத்தையுடன் தன் 12வது வயதில் இவர் ஊருக்குப் புறப்படும் தினம். இவரின் பாட்டி இவருக்கு குளிப்பாட்டி விட்டு மிகவும் நேர்த்தியாக தலை சீவி விட்டாராம். இவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இனி எனக்கு யார் குளிப்பாட்டி தலை சீவி விடப் போகின்றனர் என்று வாய்விட்டு அழ, இவரை சமாதானம் செய்ய முடியாமல் பாட்டியும், அம்மாவும் தவித்தனர்.
ஆயினும், அடுத்த அரைமணி நேரத்தில் தன் அத்தையுடன் ஊருக்குப் புறப்பட்டாள். அவ்வீட்டு வாயிற்படியை தாண்டிய உடன், இவரின் மனமெல்லாம் ஒரே மகிழ்ச்சி புகுந்து விட்டன. 'இனி, நான் ஒரு புது மனுஷி. நானே சம்பாதிக்கப் போகிறேன்; தலை நிமிர்ந்து நடக்கப் போகிறேன்; இந்த ஆண் வர்க்கத்திற்கு ஒரு சரியான பாடம் புகட்டப் போகிறேன்...' என்று மனதில் ஒரு மகிழ்ச்சி புயல் ஏற்பட்டது.
சிங்கப்பூர் வந்தடைந்ததும், இவருடைய அத்தை இவரை ஒரு மிகப் பணக்கார பெண்மணியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தி விட்டார். இவர் வயதையொத்த நாலைந்து பெண்களும், அங்கே வேலையில் இருந்தனர். அந்த பணக்கார எஜமானியுடன் காரில் வெளியே சென்று அவர் சொல்லும் சிறு, சிறு வேலைகளைச் செய்வதுதான் இவரது பணி. மற்றபடி கடினமான வேறு எந்த வேலையும் கிடையாது.
அங்கே தான் இவர் மலாய் மொழியில் பேச கற்றுக் கொண்டார். கைநிறைய சம்பளம்... நல்ல உணவு, நல்ல பாதுகாப்பு... நல்ல தோழிகள்... அவ்வீட்டில் வசித்த ஆறு வருடங்களில் இவருக்கு எந்தவிதமான குறையுமே இல்லை. இந்த சூழலில் இவர் மிக அழகான பெண்ணாக மாறிவிட்டார் என்பதுதான் உண்மை.
ஆறு வருடங்களுக்குப் பின் ஊர் திரும்பிய இவரை கண்டு ஊரே பிரமித்தது. இவரைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இவர் வீட்டில் எப்போதும், 'ஜே... ஜே' என்று ஆண் பிள்ளைகள்.
சிங்கப்பூரில் மிக மகிழ்ச்சியுடன் எவ்வித கவலையுமின்றி இருந்தவளுக்கு, இங்கே இத்தனை குறுகிய மனப்பான்மையுடன் திரிந்து கொண்டிருக்கும் ஆண்களை கண்டாலே ஒரே அலர்ஜி என்பதுதான் உண்மை.
திருமணமா- இத்தகைய ஆண்மகனுடனா? என்று மனதிற்குள் கருவிக் கொள்வாள்.
அதற்கு ஏற்றார்போல், ஒரு பிரபல ஜோசியன் இவள் தந்தையிடம், 'உன் மூத்த இரு பெண்களால் உன் குடும்பத்திற்கே மிகப் பெரிய பெயரும், புகழும், வந்தடையும். திருமண பந்தத்தில் இவர்களை மாட்டிவிடாதே...' என்று அறிவுரை கூற, இவளின் தந்தையும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
தான் கொண்டு வந்த பணம் அத்தனையும் குடும்ப செலவிற்காக தந்தையிடம் கொடுத்து விட்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டு விட்டாள். இம்முறை இவளின் அடுத்த சகோதரி 'சீன் வுன்' உடன் புறப்பட்டு விட்டாள்.
அங்கே சென்றதும் இனி, தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சபதம் மேற்கொண்டிருப்பதைப் பற்றி அனைவரிடமும் கூறி விட்டாள். உடனே அங்குள்ள கோவிலில் இதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
'சார்-ஹை' என்று கூறப்படும் இந்தத் திருவிழா அன்று ஒரு மணப் பெண்ணைப் போல் அலங்கரிப்பட்ட, 'வாங்-ஷி' மிக வித்தியாசமான முறையில் தன் தலைமுடியை தூக்கிக் கட்டி கொண்டாள். 'சார்-ஹை' என்றால், 'இனி வாழ்நாள் முழுவதுமே திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று அர்த்தம்.
இந்த தலைமுடி அலங்காரம் முடிந்ததும், மிகப் பெரிய டின்னரும் மற்றும் பல கேளிக்கைகளும் நடைபெறும். இந்த, 'சார்ஹை' விழாவில் திருமணமே வேண்டாம் என்று எண்ணும் மற்ற பெண்களும் (உறுதி மொழி எடுத்துக் கொள்ளும்) பங்கேற்று தலைமுடியை அலங்கரித்துக் கொள்வர்.
மிக தடபுடலான இந்த திருவிழா முடிந்ததும் 'இன்று எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மகிழ்ச்சி நிறைந்த நன்னாள்' என்று பொங்கி பூரிப்பர்!
இவர்களின் நேர்மை... மிக பரிசுத்தமாக வேலையை செய்யும் திறமை... பணிவு... வாக்கு சத்தியம் இக்குணங்களின் மொத்த உருவான இவர்களுக்கு வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இவர்களை தங்களுடன் அமர்த்திக் கொள்ள மிக கடுமையான போட்டா, போட்டி. இவர்களே எதிர்பாராத அளவு சம்பளப் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள் என்றால் மிகையாகாது.
ஒரு ஜப்பானிய குடும்பத்தினரின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் அவர்கள் வீட்டில் சில காலம் வேலை செய்த பின்னர்... கவர்மென்ட்டிலிருந்து லைசன்ஸ் பெற்று தனியாக ஒரு சாப்பாட்டு உணவகத்தை நடத்தினாள்.
இங்கே பகலில் சோடா நூடுல்ஸும், 'டோவூம்' தன் வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து கொடுத்து விட்டு மாலையில் இவரைப் போன்ற 'சார்-ஹை' அமாக்கள் தங்கியிருக்கும் கூலி ரூம் என்ற விடுதிக்கு சென்று தங்கிவிடுவார்.
விடுமுறை நாட்களில் இவர்கள் மலேஷியா மக்களால் பீஜிங், நான்ஜிஸ்... என்ற ஊர்களுக்கெல்லாம் சென்று அங்கெல்லாம் சுற்றிப் பார்த்து மகிழ்வர்.
சம்பாதிக்கும் பணத்தில் தன் நெருங்கிய உறவினர் அனைவருக்கும் தனித்தனியே வீடுகள் கட்டிக் கொடுத்து, மேலும் தேவையான உதவிகளையும் செய்வது இவரது தலையாய கடமை.
இவரும் இவரைப் போன்ற மற்ற சார்-ஹை அமாக்களுமாக சேர்ந்து தங்கள் ஊரில் தங்களின் கடைசி நாட்களை செலவழிப்பதற்காக மிகவும் வசதியான நான்கு மாடி கட்டடம் ஒன்றை கட்டி இருக்கின்றனர். இந்த கட்டடத்தை 'டிங்யு-ஹால் த சார் ஹை உமன்ஸ் ஹோம்' என்று குறிப்பிடப்படுகிறது.
சுமார் 60 வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் உழைத்து தன் ஊருக்கும், தன் இனத்திற்கும் அளப்பற்ற பெருமையை கொடுத்திருக்கும். இவரின் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 'US Certification of Recognition' அளித்திருக்கிறது. அவ்வூரில் நடக்கும் மிகவும் முக்கியமான மீட்டிங்களில் பங்கேற்கும் இவரின் புகழுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
இவரும், இவரது சகோதரி அமாஸ்களும் வசிக்கும் அந்த 'பிங்கி' இல்லத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றால் மிகையாகாது. சீட்டு விளையாடுவது, 'டிவி' பார்ப்பது என்பது மட்டுமல்ல, இவர்களின் பிறந்த நாள் பார்ட்டிகள், மற்றும் உறவினர்களின் பார்ட்டிகள் என்று அமர்க்களப்படுகிறது.
'திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதே இல்லையா, என்று கேட்டால், மிக அழுத்தமாக, 'ஊஹும். ஒருநாளும் இல்லை. எனக்கு தெரியும் இந்த ஆண்களின் யோக்கியதை... மனைவியிடம் மிகவும் ஒழுங்கானவன் போல் நடித்துவிட்டு வெளியே எக்கச்சக்கமான பெண்களின் தொடர்பு உண்டு. பாவம்! பரிதாபத்திற்குரிய இந்த நன்றி கெட்டவர்களின் மனைவிகள்' என்கிறாள்.
'சரி, அதை விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் திருமணத்திற்கே இடமில்லையா?' என்றால், 'ஒரு மிக கண்ணியமான ஆளை இதுவரை நான் சந்திக்கவே இல்லையே...' என்கிறாள் பெரிதாக சிரித்துக் கொண்டே!

