
மிக அழகானது செல்லங்குப்பம் கிராமம்!
அன்று சனிக்கிழமை. அரசு தொடக்கப் பள்ளி அமைந்திருக்கும் தெரு வழியாக நடந்தார் லட்சுமி; அவருக்கு வயது, 60. கனமான பையை கையில் வைத்திருந்தார்.
பள்ளியில் படித்து கொண்டிருந்த போது காணாமல் போன மகன் சூரியராஜா பற்றிய எண்ணம் மனதில் அலை மோதியது. அதை சுமந்தவாறு நடந்தார்.
'எல்லாம் தலைவிதி தவிர வேறென்ன' என நொந்திருந்தார்.
வாழ்வின் பெரும் பகுதி, அழுகையும் கவலையுமாக கரைத்திருந்தது.
புழுங்கி கிடந்த வேளையில் மழையாய் வந்தது அந்த தகவல்.
கடந்த திங்கள் கிழமை காலை, 11:00 மணிக்கு, அந்த மகிழ்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அந்த நொடி முதல், புதிய பலத்துடன் வலம் வருகிறார்!
அவருக்கு கிடைத்த தகவல் -
'பத்து ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு ஓடிய, ஒரே மகன் சூரியராஜா உயிரோடு இருக்கிறான்... தற்போது, மும்பையில் வசிக்கும் அவன், ஞாயிற்றுக்கிழமை மதியம், தாயாரை காண வீட்டிற்கு வரவிருக்கிறான்...'
அந்த தகவல் கேட்டதுமே ஆனந்தத்தில், திக்கு முக்காடி போனார் லட்சுமி!
மகனைப் பற்றிய எந்த விபரமும் தெரியாமல் நெடுங்காலம் தவித்தவருக்கு நிம்மதியாக இருந்தது. தவிப்பு, கொஞ்சம் மறைந்தது. மனதில் இருந்த மாபெரும் வேதனை வடிந்ததாக உணர்ந்தார்!
தாயை உடன் அழைத்துச்செல்ல போவதாகவும் தெரிவித்திருந்தான் மகன்.
இதை விட வாழ்வில் என்ன வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் கடலுார் துறைமுகம் - புதுநகர் இடையே உள்ளது செல்லங்குப்பம் கிராமம்.
பொன்மாலை வேளையில், அந்த ஊருக்குள் புகுந்து தாலாட்டும் வங்கக் கடல் காற்று. அங்கு வாழும் உயிரினங்கள், உற்சாகம் அடையும்.
அந்த இனியக் காற்று, லட்சுமி முகத்தில் வீசியதும் புத்துணர்வு ஏற்பட்டது.
ஆனாலும், பலவீனம் காரணமாக நடப்பதற்கு சிரமப்பட்டார்!
அவர் சுமந்து வந்த துணிப்பையில், வரப்போகும் மகனுக்கு விருந்து வைக்க தேவையான, அரிசி, மளிகைப் பொருட்கள் இருந்தன. அதை துாக்கியதால் கைகளில் வலி உண்டானது.
இறக்கி வைத்து, சற்று நேரம் இளைப்பாறிய பின் போகலாம் என்று நினைத்தார்.
வீடு போய் சேர, 300 அடி துாரமே இருந்தது. எனவே, நினைப்பை மாற்றி தொடர்ந்து நடந்தார். இருப்பிடத்தை அடைந்தார்.
திருமணமானது முதல் இதே வீட்டில் ஒரு பகுதியில் தான் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அந்த வீட்டின் சொந்தக்காரர் பழனிதுரை, பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். பொதுநல பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். மிகவும், சேவை எண்ணம் கொண்டவர். அவரது குடும்பமும் அங்குதான் வசிக்கிறது.
முன்னறையில் பையை வைத்து, தாகம் தீர நீர் அருந்தினார் லட்சுமி.
பின், திண்ணையில் வந்து அமர்ந்தார்.
நீண்ட கால தோழியான பத்மா அங்கு வந்தார். அவர் நான்கு வீடுகளுக்கு அப்பால் வசிக்கிறார்.
வந்த வேகத்தில், ''எதிர் வீட்டு சுப்ரமணியன் பேரன் வேலுவை இந்த பக்கம் பார்த்தாயா...'' என்று கேட்டார்.
''பாக்கலியே... நீ எதுக்கு அவனை தேடி அலையுற...''
''வெத்தலை வாங்கறத்துக்கு பெட்டி கடைக்கு அனுப்பலாம்ன்னு பார்த்தேன்...''
''ஓ... அப்படியா... மளிகைக் கடைக்குப் போயிட்டு இப்பதான் திரும்பி வந்தேன்... நான் பாக்கலயே...''
லட்சுமியின் பதில் கேட்டு, திரும்பி நடந்தார் பத்மா.
கடிகாரத்தை நோக்கினார் லட்சுமி!
மாலை, 5:00 மணி!
இன்று இரவு மட்டும் கடந்தால் ஒரு வாரம் தான், அடுத்த ஞாயிறு வந்து விடும்!
நீண்ட காலம் காணாமல் போயிருந்த மகன் சூரியராஜா திரும்பி வரும் திருநாள்.
'அடுத்த ஞாயிறன்று, இந்நேரத்திற்குள் இங்கு வந்து சேர்ந்திருப்பான்... மகனை கண் குளிர பார்த்திருப்பேன்' என எண்ணி மகிழ்ந்தாள்.
தொடர்ந்து, 'தாயை தவிக்க விட்டு போக எப்படி மகனே மனசு வந்துச்சு' என, கேட்க வேண்டும் என தோன்றியது. ஆனால், உடனடியாக கேட்பது உசிதமல்ல என எண்ணியபடி அமர்ந்திருந்தாள். கதறி அழ வேண்டும் போல் இருந்தது!
நாள்காட்டியைப் பார்க்கும் போதெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார் லட்சுமி.
சமீபகாலமாக அதுவே வழக்கமாகி விட்டது.
அதிலும், நான்கைந்து நாட்களாக அதிகரித்து விட்டது.
இப்போது மீண்டும் ஒரு முறை நினைவுகள் அலைமோத மூழ்கினார்.
அவரது மனம், மகிழ்ச்சியில் ஊடுருவியது. நெருங்கிய உறவினர் செல்வானந்தம் கொண்டு வந்த மகிழ்ச்சி செய்திக்குள் பிரவேசித்தது.
லட்சுமிக்கு துாரத்து சொந்தம் செல்வானந்தம்; முதுநகரில் வசித்து வந்தார். போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கம்பீரமாக இருப்பார்.
மும்பைக்கு ஒரு பயணமாக போனவர், எதேச்சையாக, மகனை பார்த்துள்ளார். அடையாளம் கண்டு விசாரித்துள்ளார். திரும்பியதும் விவரத்தை சொன்னார்.
'உண்மையா... என் மகனை பார்த்தாயா...' என, நம்ப முடியாமல் கேட்டார் லட்சுமி.
அவர் கண்கள் அகல விரிந்திருந்தன.
'ஆமாங்க... அவனை பார்த்ததும் எனக்கே ஆச்சரியம் தாங்கலை... உங்க கணவர் முத்து மாமாவே என் நேரில் வந்த மாதிரி இருந்துச்சு...'
'என்னப் பெத்த ராசாவே...'
அதற்கு மேல் பேச முடியாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி.
அந்த தவிப்பு கண்டு, 'கடைத் தெருவில் உங்க மகனைப் பார்த்தேன். கப்புன்னு கையை புடிச்சிக்கிட்டேன். ஒரு மாதிரி முழிச்சான். விவரத்தை சொல்லி விசாரிச்சேன். சற்று நேரம் யோசனை செய்தவன், திணறியபடி ஒப்புக்கொண்டான்...' என்றார்.
கண்களில் நீர் பெருக அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார் லட்சுமி.
- தொடரும்...
- நெய்வேலி ராமன்ஜி

