
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருச்சி மாவட்டம், பாப்பாகுறிச்சி, காட்டூர் அரசு ஆரம்ப பள்ளியில், சத்துணவு திட்டத்தை முதன்முதலாக துவங்கி வைத்தார். பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்தினார்.
அந்த பள்ளியில், 1964ல், 3ம் வகுப்பு படித்தேன். வகுப்பு முடிந்ததும், வீட்டுக்கு அழைத்து செல்வார் வகுப்பாசிரியர். அறிவூட்டும் நல்ல கதைகளைக் கற்று தருவார்.
ஒரு நாள், 'கண்ணா... தெருவோர வேப்ப மரத்தில், 10 குச்சிகள் பறித்து வா...' என கூறினார். எடுத்து வந்து, 'ஐயா... இவை எதற்கு...' என்றேன்.
அவற்றை எல்லாருக்கும் பிரித்து கொடுத்தபடி, 'தினமும் காலை எழுந்தவுடன், இந்தக் குச்சியால், பல் துலக்கினால் பளபளப்பாகும்... இது வாயில் பட்டதுமே, கசப்பு தன்மையால் உமிழ் நீர் சுரக்கும். வாயில் துர்நாற்றம் மறையும்; ஈறுகள் பலம் பெறும்...' என்றார்.
அறிவுரைப்படி, தினமும் வேப்பங்குச்சியால் பல் துலக்கி வருகிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன்.
என் வயது 64; இன்றும் என் பற்கள் உறுதியாக உள்ளன. வேப்பங்குச்சியால் பல் துலக்க கற்றுத்தந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- மா.கோ.கண்ணன், திருவள்ளூர்.

