
சென்னை, பெரம்பூர், லுார்து மாதா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
எல்லா தேர்வுகளிலும், முதல், மூன்று இடங்களைப் பிடித்து விடுவேன்; மூவரில் யார் முதலிடம் என்பதில் தான் எப்போதும் போட்டி.
ஒரு மாதம், அத்தை மறைவினால் அறிவியல் பாடத் தேர்வு எழுத முடியவில்லை. மனம் வருந்தினாலும், மற்ற பாட தேர்வுகளை சிறப்பாக எழுதியிருந்தேன்.
அன்று மதிப்பெண் பட்டியல் கொடுக்க வந்தார் தலைமை ஆசிரியை. முதல், 'ரேங்க்' பெற்றவரை அழைத்தார். இரண்டாவதாக என்னை அழைத்த போது, 'எனக்குத்தான், 'ரேங்க்' கிடையாதே' என, எண்ணி எழாமல் அசட்டையாக இருந்தேன்.
மீண்டும் என்னை அழைத்தார் தலைமை ஆசிரியை. மன்னிப்பு கோரியபடி ஓடிச்சென்றேன். நன்றி கூறி, மதிப்பெண் பட்டியலை குழப்பத்துடன் வாங்கினேன்.
சக மாணவியர், 'அறிவியல் தேர்வே எழுதாதவளுக்கு எப்படி ரேங்க் போட்டீங்க...' என, வகுப்பு ஆசிரியையிடம் கேட்டனர்.
அமைதிப்படுத்தி, 'எப்போதுமே முதல் மூன்று ரேங்க்குக்குள் வருகிறாள். ஒரு தேர்வு எழுதாததால், 'ரேங்க்' இழக்க வைக்க விரும்பில்லை. அதனால், தலைமை ஆசிரியையிடம் கலந்து ஆலோசித்து, அறிவியல் செய்முறை நோட்டைப் பார்த்தோம். கையெழுத்து அழகாக இருந்தது. வரை படமும் சிறப்பாக இருந்தது. அவற்றுக்கு மதிப்பெண் அளித்து, 'ரேங்க்' போட்டோம்...' என்றார்.
அனைவர் வாயும் அடைத்தது. கையெழுத்து மதிப்பெண் பெற்றுத் தந்ததை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.
இப்போது, என் வயது, 71; பல ஆண்டுகள் ஓடினாலும், இந்நிகழ்ச்சி, பசுமையாக நெஞ்சில் நிலைத்துள்ளது.
- எஸ்.விஜயலட்சுமி, சென்னை.

