தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிக உயர்ந்த தேசியக் கொடி !

மிக உயர்ந்த தேசியக் கொடி !

மிக உயர்ந்த தேசியக் கொடி !


PUBLISHED ON : ஜன 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் முதலாக...

ஆகஸ்டு7,1906-ம் தேதி, கல்கத்தாவில் உள்ள பார்சி பகன் ஸ்கொயர் என்னும் பூங்காவில் தான் முதன் முதலாக, இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

மற்ற கொடிகள் எதற்கு?

1971-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் சமஸ்தான கொடிகள் அனைத்தையும் கைவிடுமாறு அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லா கொடிகளும் நடைமுறையிலிருந்து மறைந்தன. அரசியல் சட்டம் 370-ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் தேசியக் கொடியுடன் அம்மாநில கொடியும் பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பிற நாட்டு கொடிகள்!

இந்திய தேசியக் கொடியை பிற நாட்டுக் கொடிகளுடன் ஏற்றினால், முதலில் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி கடைசியில் தான், கீழே இறக்க வேண்டும். பிறநாட்டு கொடிகள் பறக்கும்போது இந்திய தேசிய கொடியை எக்காரணம் கொண்டும் கீழே இறக்கக்கூடாது.

ஏழு வரும் பறந்த அன்னிய கொடி!

லட்சத்தீவுகளும், மினிக்காய் தீவுகளும் இந்தியாவை சேர்ந்தவை.அங்குள்ள கலங்கரை விளக்கத்தில் 1954-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது. அங்கு உள்ளவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற தகவல் இதுவரை தெரியாமல் இருந்ததே, இதற்கு காரணம்.

கொடிக்கான நிர்ணயங்கள்!

நமது தேசியக்கொடி ஜூலை 22, 1947-ல் நிர்ணயிக்கப்பட்டு, ஆகஸ்டு 14, 1947 நள்ளிரவில் கூடிய சபையில் வழங்கப்பட்டது. தேசியக் கொடியானது, இந்தியத் தர நிர்ணய கழகம் நிர்ணயித்திருக்கிற தரங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். தேசியக் கொடியை பொதுக்கூட்டங்களில் பறக்க விடுவாதல், பருவ நிலை எப்படி இருந்தாலும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை, அது பறந்து கொண்டிருக்க வேண்டும். தேசியக் கொடியை ஏற்றும் போது விரைவாக ஏற்ற வேண்டும். இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். ஊர்வலம் அல்லது அணி வகுப்பில் கொடியை ஏந்தி செல்லும்போது வலது பக்கத்தில் ஏந்தி செல்ல வேண்டும்.

கொடியை பணிவோம், புகழ்வோம்!

தாயின் மணிக்கொடி பாரீர்; அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்று, மகாகவி பாரதியார் பாடினார். அவரது அழைப்பு நமது கொடியை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு நம் சிந்தனையை தூண்டுகிறது. நாட்டு உணர்வே தேசியம் எனப்படும். நாட்டுணர்வை, புலப்படுத்தும் முறையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே கொடியும், சின்னமும், மலரும், விலங்கும், பறவையும், குறிக்கோளும் உள்ளன. நமது பாரதப் பெருநாட்டின் தேசிய கொடி மூவண்ணங்களால் அமைந்தது.

கொடியின் அமைப்பு!

நமது தேசியக் கொடி மூன்று வண்ணங்களுடன் அமைந்தது. மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்டது. மூன்று வண்ணங்களும் சம அளவில் பட்டையாக நீளவாக்கில் அமைந்து இருக்கும். மேற்புறம் காவி நிறமும், இடையில் தூய வெண்மை நிறமும், அடியில் பசுமை நிறமும் அமைந்து இருக்கும். இடையில் உள்ள வெள்ளை நிறத்தின் நடுவில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். கொடியின் மேற்பகுதியில் உள்ள காவி நிறம் நம் நாட்டின் விடுதலைக்காக தம் உடல், உயிர், உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து செய்ய வேண்டிய தியாகத்தை உணர்த்துகிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் தூய்மையை உணர்த்துகிறது. நாட்டு மக்கள் உள்ளத் தூய்மையும் வாய்மையும் பண்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாக திகழ வேண்டும், என்னும் கருத்தை விளக்கும் வகையில், வெண்மை நிறம் அமைந்துள்ளது. கீழே உள்ள பசுமை நிறம் நம் நாட்டின் வளத்தை உணர்த்துகிறது. நீர்வளமும், நீலவளமும், மலை வளமும், கடல் வளமும், தொழில் வளமும் நிறைந்து வறுமையற்ற நாடே உயர்ந்த நாடாகும். வளமற்ற நாட்டில் ஒழுக்கம் நிலவாது என்னும் உண்மையை உணர்த்தும் வகையிலேயே கீழ்ப்பகுதியில் பச்சை நிறம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தின் நடுவில் இருபத்து நான்கு தர்மங்களை குறிக்கும் வகையில் 24 ஆரங்களை கொண்ட அசோகச் சக்கரம் நீல நிறத்தில் அமைந்துள்ளது.அறம் நிறைந்த அரசாட்சியில் தான் தியாகமும் தூய்மையும் வளமும் நிலவும் என்னும் உண்மையை உணர்த்தும் வகையில், அறத்தின் சின்னமாகிய தர்மச் சக்கரம் நடுநாயகமாக அமைந்துள்ளது.

கொடியை போற்றுவோம்!

தேசியக்கொடியை எல்லா இடங்களிலும் பறக்க விடக்கூடாது. அரசு அலுவலங்களிலும், அமைச்சர்களின் இருப்பிடங்களிலும் மட்டுமே, பறக்கவிட வேண்டும். விடுதலை நாள், குடியரசு நாள் ஆகிய தேசிய விழா நாள்களில் மட்டுமே, பொது இடங்களில் கொடியை ஏற்றி பறக்க விடலாம்.காலையில் சூரியன் உதித்தவுடன் கொடியை ஏற்றி மாலையில் சூரியன் மறையும் முன், கொடியை இறக்கி விட வேண்டும். ஊர்வலத்தின் போது முன் வரிசையில் கொடியை வலதுத்தோள் பக்கமாக உயர்த்தி பிடித்து செல்ல வேண்டும். கொடியை ஏற்றும்போதும், இறக்கும்போதும் நாம் அசையாமல் நிமிர்ந்து நின்று, கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடக்கூடாது. அது துக்கத்தின் அடையாளம். தேசத் தலைவர்கள் மறைந்த நாள்களில் மட்டுமே, அரைக்கம்பத்தில் பறக்க விடலாம். மழையில் நனைய விடக்கூடாது. காற்றில் கிழிய விடக் கூடாது. கொடியை மேசை விரிப்பாகவோ, ஆடைகளில் நெய்தோ பயன்படுத்தக்கூடாது.

உயிரினும் மேலான கொடி!

அடிமை அரசாக இருந்த இந்தியா தானும் ஒரு விடுதலை அரசு என, தலை நிமிர்ந்தபடி நின்ற திருநாள்தான் குடியரசு தினமான ஜனவரி-26. குடியரசின் சின்னம் நாம் சுதந்திர மக்கள் உலகில் யாருக்கும் அடிமை அல்ல; என்பதின் சின்னம் நமது பெருமைக்குரிய தேசியக்கொடி. இந்தியர்களாகிய நாம், கொடி உணர்த்தும் தத்துவங்களை கருத்தில் கொண்டு இன்னுயிர் தந்தேனும் தேசியக்கொடியை காப்போம். நாட்டுப்பற்றை வளர்ப்போம். நாட்டின் வளம் பெருக உழைப்போம். நாட்டின் நலனுக்காக தியாகம் செய்வோம். அன்னை நாட்டை காப்போம். எந்நெந்த நிலையில் இருக்கிறோமோ, அந்தந்த நிலையில் மிக சிறப்பாய் பணி புரிவோம். எந்தெந்த நிலையில் இருக்கிறோமோ அந்தந்த நிலையிலிருந்து முன்னேறுவோம்.

வாழ்க தேசியக்கொடி! வாழ்க பாரதம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us