
''ஆ! மாட்டிக் கொண்டாயா? இரு இரு, நாளைக்கு என் பிறந்த நாள். உன்னைச் சமைத்து வைப்பாள் என் மனைவி. நான் வேட்டையாடி விட்டு வந்து உன்னைச் சுவைப்பேன்,'' என்று கூறி, சர்மாவைக் கயிற்றால் நன்றாகக் கட்டி, பரண்மீது போட்டு விட்டு, மறுபடியும் தூங்கப் போயிற்று டிராகன்.
இரவு முழுதும் சர்மா தன் கட்டுக்களை யெல்லாம் மெல்ல மெல்லத் தளர்த்தி அவிழ்த்து விட்டான். ஆனால், தான் விடுதலை ஆனதை வெளிப்படுத்தாமல், கட்டிய நிலையில் இருப்பது போல அங்கேயே அசையாமல் கிடந்தான்.
காலையில் ஆண் டிராகன் வேட்டைக்கு போய் விட்டது. பெண் டிராகன் தன் அலுவல்களை முடித்து விட்டு, மனிதனைச் சமைப்பதற்காக சர்மாவின் அருகே வந்தது. அவன் கட்டப்பட்டுதான் இருக்கிறான் என்று நினைத்து அலட்சியமாக கயிற்றைப் பிடித்து இழுத்தது.
அடுத்த நிமிடம் கயிறு அதன் கையோடு வர, இழுத்த வேகத்துக்கு அங்கு எதிர்ப்பு இல்லாததால், தடாலென்று தலைகுப்புறப் போய் எட்ட விழுந்தது.
சர்மா இதைத்தானே எதிர்பார்த்தான். குபீரென்று அதன்மீது பாய்ந்து, அமுக்கி அதே கயிற்றால் நன்றாகக் கட்டினான். பிறகு, சமையலுக்காக தயாராக இருந்த கணப்பின் மீது, அது தயார்படுத்தி வைத்திருந்த பாத்திரத்தில் பெண் டிராகனை தூக்கிப் போட்டான். பக்குவமாக அதைப் பதார்த்தங்களிட்டுச் சமைத்து, ஆண் டிராகன் சாப்பிடுவதற்கு ஏற்றபடி மேஜை மீது வைத்தான். படுக்கையறையிலிருந்து அதிசயப் போர்வையை எடுத்தபடி உல்லாசமாக புறப்பட்டான்.
அரண்மனை அரியாசனத்தில் அமர்ந்திருந்த அரசனின் முன் மணிகள் கட்டிய போர்வையை அலட்சியமாக விரித்து நின்றான் சர்மா.
மன்னருக்கு திக்கென்றது.
''படுக்கை விரிப்புத்தானே? டிராகன் தூங்கிக் கொண்டிருக்கும்போது சுலபமாகக் கவர்ந்து வந்துவிடலாமே? உன்னுடைய நிஜமான திறமையை வெளிப்படுத்த அந்த மிருகத்தையே இங்கு கொண்டு வந்தால்தான் நீ பிழைக்கலாம். இல்லாவிட்டால்...''
''என் உயிர் பறிபோகும் என்பீர்கள். அது தானே என்று இடைமறித்த சர்மா, உங்கள் விருப்பப்படியே அந்தக் கொடிய மிருகத்தை இங்கு கொண்டு வருகிறேன். ஆனால், அதற்கு எனக்கு இரண்டு வருட அவகாசம் தேவை,'' என்றான்.
''தாராளமாக எடுத்துக்கொள். ஆனால், இரண்டாம் ஆண்டின் முடிவில் அந்த மிருகத்தை உயிரோடு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்,'' என்றார் மன்னர்.
சர்மா இரண்டாண்டுகள் அவகாசம் கேட்டது எதற்காக தெரியுமா? தாடி வளர்த்துத் தன்னை உருமாற்றிக் கொள்ளத்தான். ஒரு தடவை, அந்த மிருகம் அவனைப் பார்த்திருக்கிறதே!
மறுபடியும் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ளாதா? இரண்டு ஆண்டுகளில் சர்மா கொழுத்த வாலிபனானான். கருகருவென்று முகத்தில் தாடி மண்டியது. மிருகத்தின் கோட்டையை நோக்கி புறப்பட்டான். வழியில் ஒரு பிச்சைக்காரனின் உடைகளை வாங்கி அணிந்து, தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டான்.
டிராகனின் கோட்டைக்குப் போன போது, மும்முரமாக, ஒரு பெரிய பெட்டியைச் செய்து கொண்டிருந்தது. நிறைய இரும்புப் பட்டைகள் எல்லாம் வைத்து ரொம்பப் பாதுகாப்பான பெட்டி அது.
''வணக்கம்! வணக்கம்! பராக்கிரமம் மிக்க டிராகனே! இந்த ஏழையின் பசிக்கு ஏதாவது வழங்க முடியுமா?'' என்று பணிவுடன் கேட்டான் சர்மா.
அன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது டிராகன்.
''கொஞ்சம் பொறு. இந்தப் பெட்டியில் சிறிது வேலையுள்ளது. இதை முடித்து விட்டு வீட்டினுள் போய் உனக்குத் தர ஏதாவது இருக்கிறதா என பார்க்கிறேன்,'' என்றது.
''இந்தப் பெட்டியை எதற்காகச் செய்கிறீர்?'' என்று கேட்டான் சர்மா.
''இதுவா? என் மனைவியை கொன்று, என்னுடைய பறக்கும் குதிரையையும் கவர்ந்து சென்ற ஒரு பக்காத் திருடனை இதற்குள் போட்டு மூடி அடைக்கத்தான்,'' என்றது டிராகன்.
''அப்படியா? அந்தப் பலே திருடனுக்கு ஏற்ற தண்டனைதான். ஆனால், இந்தப் பெட்டி ரொம்பச் சின்னதாக இருக்கே? இதற்குள் அவனை அடைக்க முடியுமா? அவன் பெரிய ராட்சதன் போல் இருக்கிறானே!''
'' நான் ஒரு தடவை அவனைப் பார்த்திருக்கிறேன்! நீ தப்பாக கணக்குப் போடுகிறாய். இந்த பெட்டி எத்தனை பெரிசு. என்னையே இதற்குள் அடைக்கலாமே?''
''நியாயம்தான். கிட்டத்தட்ட அந்தப் பயல் உங்கள் உயரம்தான் இருப்பான். நீங்கள் இதனுள் அடங்க முடியுமானால் அவனையும் இதற்குள் அடைக்கலாம். ஆனால்... உங்களுக்கு இந்தப் பெட்டி ரொம்பச் சின்னதென்று நினைக்கிறேன்,'' என்றான்.
''முட்டாள்தனமாக உளறாதே. எவ்வளவு பெரிய பெட்டி இது? எத்தனை நாட்களாகச் இதை செய்து வருகிறேன் தெரியுமா? இதோ பார்!'' என்று கூறி பெட்டியினுள் தன் உடலைச் சுருட்டி மடக்கி உட்கார்ந்து காண்பித்தது.
அடுத்த வினாடி படீரென்று பெட்டியின் கதவை மூடி, தாழ்ப்பாள்களை அழுத்திப் பூட்டினான் சர்மா.
''எங்கே உன் பலமெல்லாம் பயன்படுத்தி முண்டிப் பெட்டியைத் திறக்க முயன்று பார்,'' என்றான் வெளியிலிருந்தபடியே. அதுவும் முக்கி முனகி மூச்சுகட்டிப் பெட்டியை உடைத்தபடி வெளிவர முயன்றது. முடியவே இல்லை!
''அற்புதமாகத் தயாரித்திருக்கிறாய் பெட்டியை!'' என்று குதூகலப்பட்டான் சர்மா.
'' பாராட்டு போதும். பூட்டை திறந்து விடு; நான் வெளியே வரவேண்டும்'' என்று உறுமியது டிராகன். ஆனால், அதற்கு எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
சர்மா அதைப் பிடிக்கத்தானே வந்தான்? விடுவிக்க இல்லையே! தன் வேஷத்தைக் கலைத்துவிட்டு, மறைவில் நிறுத்தியிருந்த வண்டியில் பெட்டியை ஏற்றியபடி நகரத்துக்கு விரைந்தான்.
மன்னர் முன் பெட்டியை இறக்கிய சர்மா, அதனுள் ராட்சத டிராகன் இருப்பதாகக் கூறினான். மன்னருக்கு வியப்பு தாங்கவில்லை.
''இதற்குள்ளா? அத்தனை பெரிய டிராகனை பிடித்து எப்படி இதற்குள் அடைத்தாய்? என்னால் நம்ப முடியவில்லையே?'' என்றவர் சிங்காசனத்திலிருந்து இறங்கி வந்து, சொன்னபடி உள்ளே அது இருக்கிறதா என்று பார்க்கப் பூட்டுக்களை திறந்தார்.
அடுத்த வினாடி அடைபட்டிருந்த டிராகனோ ஆத்திரத்துடன், அரசரைத் தன் நாக்கை நீட்டிச் சுருட்டி வாய்க்குள் இழுத்தது. பெட்டியின் பின்னால் தயாராக நின்றிருந்தான் சர்மா. பெட்டியின் கதவு அதிகம் திறந்துவிடாதபடி கவனித்துக் கொண்டு, பேராசை பிடித்த மன்னரை டிராகன் கபளீகரம் செய்ததும், அது முற்றிலுமாக வெளியே வராதபடி படீரென்று அடைத்து பூட்டுக்களை மாட்டியதோடு, பெரிய பெரிய ஆணிகளை அடித்து அதைத் திறக்க முடியாதபடியும் செய்தான்.
பிறகென்ன? இத்தனை திறமைசாலியான ஒரு ஆண்மகனை யார்தான் மணந்து கொள்ள விரும்பமாட்டார்கள்?
அரசரின் மகள், சர்மாவை விரும்பினாள். அவனும் அவளை திருமணம் செய்து, தன்னுடைய அறிவை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி நாட்டை சிறப்பான முறையில் ஆட்சி செய்தான்.
- முற்றும்.

