
அமிர்தபுரம் நாட்டை ஆட்சி செய்தான் மன்னன் அமரகேது. மாவீரன் என்று பெயரெடுத்தவன்; அண்டை நாடுகளை படையெடுத்து வெற்றி கொண்டான். அந்த நாடுகளின் கஜானாவில் இருந்தவற்றை கொள்ளையடித்தான். சில ஆண்டுகளில் அளவற்ற செல்வம் சேர்த்து விட்டான்.
அப்போது, புத்த துறவி சந்திரநாதன், அந்த நாட்டுக்கு வந்தார். பெரும் ஞானியான அவரை, அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான் மன்னன். அவரது அறிவுரைகளை கவனமாக கேட்டான்.
அன்று அரண்மனைக்கு ஒரு திருடனை பிடித்து வந்திருந்தனர் காவலர்கள்.
பிடிபட்டிருந்தவன் மிகவும் ஏழை. பட்டினியால் வாடியது தெரிந்தது.
தலைமை காவலன், 'மன்னா... இவன், பிரபு வீட்டில் புகுந்து, ஆபரணங்களை திருடியுள்ளான். அவற்றை விற்க முயன்ற போது அகப்பட்டான்...' என்றான்.
'அப்படியா, 10 ஆண்டுகள் சிறையில் அடையுங்கள்...'
கோபத்தில் உத்தரவிட்டான் மன்னன்.
அதை கேட்டதும் கலங்கியபடி, 'பணி கிடைக்காமல் பல நாட்கள் பட்டினி கிடந்தேன்; ஏதேனும் பொருள் கிடைத்தால் விற்று, பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்து, செல்வந்தர் வீட்டில் திருடினேன்; என்னை மன்னித்து விடுங்கள்...' என அழுதான் திருடன்.
நிகழ்வை பார்த்த புத்த துறவி, 'அவனை மன்னித்து விட்டு விடுங்கள். அதே நேரம், இது போன்ற குற்றங்கள் செய்துள்ள மன்னராகிய உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்...' என்று கேட்டார்.
அதிர்ச்சி அடைந்த மன்னன், 'துறவியே... நான் குற்றவாளியா... எனக்கு தண்டனையா...' என்றான்.
'எத்தனையோ நாடுகளை படை பலத்தால் ஆக்கிரமித்து, மக்களை அடிமைப்படுத்துள்ளீர்...
'சொத்துக்களை கொள்ளையடித்தீர்; அதிகாரத்தில் இருப்பதால் இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறீர்; ஆனால், பட்டினியால் திருடிய ஏழைக்கு தண்டனை கொடுக்க நினைக்கிறீர்; இதில் என்ன நீதி இருக்கிறது...'
துறவியின் கேள்வியால் மனம் திருந்தினான் மன்னன். ஏழையை விடுதலை செய்து, பொற்காசுகள் வெகுமதியாக தந்து அனுப்பினான். இனி, அந்நிய நாடுகளை ஆக்கிரமிப்பதில்லை என முடிவு செய்தான். அவனை வாழ்த்தினார் துறவி.
குழந்தைகளே... நீதியை போற்றி நடந்தால், எந்த தவறையும் செய்ய மனம் ஒப்பு கொள்ளாது!
மீராப்ரியன்