
செயற்கை நுண்ணறிவு என்ற, 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' இன்று உலகின் சிந்தனை போக்கை மாற்றி அமைத்துள்ளது. மனித மூளை போன்றே செயல்படும், தொழில் நுட்பம் இது. இதற்கு, அடித்தளமிட்டவர் விஞ்ஞானி ஆலன் மாத்திசன் டூரிங்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டனில் ஜூன் 23, 1912ல் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் கணிதம், இயற்பியல், தத்துவம், உயிரியல் என, பல துறைகளில் கற்றார். எண் கணிதம், உயிரியல் பெருக்கம், வடிவாக்கம் மற்றும் பிணைப்பு வலையம் என, புதுமை துறைகளில் செயல்பட்டார்.
மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார். இவரது பெற்றோர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பணியாற்றியவர்கள்.
இவர், 1936ல் ஒரு இயந்திரம் கண்டுபிடித்தார். இதுவே, கம்யூட்டர் என்ற கணினி உருவாக அடிப்படையாக அமைந்தது.
தொழில் நுட்பத்தில் ரகசிய குறியீட்டு முறையை மேம்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு தான், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு பெரிதும் பயன்பட்டது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியை முறியடிக்க உதவியது.
மனித மூளை செயல்படுவதை போல், இயந்திரத்தையும் செயல்பட வைக்க முடியும் என்பதை, 'இன்டலிஜென்ட் மெஷின்' என்ற ஆய்வு வழியாக, 1950ல் தெரிவித்திருந்தார் டூரிங். இது தான், தொழில் நுட்பம் மிக நவீனமாக உருவாக அடித்தளமாக அமைந்தது.
கணினியில், 'புரோகிராம்' வடிவமைப்பு வாயிலாக, செயற்கை அறிவு இயந்திரத்தை உருவாக்க முடியும் என்ற விதியை உருவாக்கினார். இது தான், இப்போது மிகவும் பிரபலமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உருவாக வித்திட்டது.
அவர் வகுத்த, 'டூரிங் பெஸ்ட்' தான் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தரத்தை அளவிட உதவுகிறது. அறிவியல் உலகில் மாபெரும் புதிரை விடுவித்தார் ஆலன் டூரிங். அவரது உழைப்புக்கு பல கவுரவங்கள் கிடைத்துள்ளன.
இங்கிலாந்து பண நோட்டுகளில், ஒருபுறம் மன்னர் அல்லது ராணி படம் அச்சிடப்பட்டிருக்கும். மறுபுறம், இங்கிலாந்து வரலாற்றில் புகழ் பெற்றவரின் படம் இடம் பெற்றிருக்கும்.
இதில், விஞ்ஞானிகள் நியூட்டன், ஜேம்ஸ் வாட், டார்வின், மைக்கேல் பாரடே படங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்தில், 2021ல் வெளியிட்ட, 50 பவுண்டு பணத்தாளில், அறிஞர் ஆலன் டூரிங் படம் இடம் பெற்றுள்ளது.
இவரது வாழ்வை மையமாகக் கொண்டு, 'தி இமிடேட் கேம்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்துள்ளது. இது, சினிமா உலகில் மிகவும் உயர்ந்த, ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.
கணினி, கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பாக, ஆலன் டூரிங் எழுதிய டைரி குறிப்பு ஒன்று, 10 லட்சம் டாலர் மதிப்பில் அதாவது, 8.26 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
ஆலன் டூரிங் நினைவாக, கணினி அறிவியலில் ஆராய்ச்சி செய்வோருக்கு, ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த விருது வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அரசு.
- கோவீ.ராஜேந்திரன்