PUBLISHED ON : ஏப் 22, 2016

சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம்தான். ஒவ்வொரு வருடமும் இதைப் பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகின்றனர்.
சீனாவின் கிழக்கு, மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது. இந்தச் சுவர் மலைகள், பாலைவனங்கள், பீடபூமிகள், புல்வெளிகள் என்று பலவிதமான பகுதிகளைத் தாண்டிச் செல்கிறது.
கட்டடக் கலை அற்புதம் என்பது ஒருபுறம், இதன் பல பகுதிகளிலிருந்து அற்புதமான இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன என்பது மறுபுறம்.
இதை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு. அது அந்தச் சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.
கி.மு.2014ல் கின் சக்கரவர்த்தி சீனாவை இணைத்தபோது இந்தச் சுவரை எழுப்ப உத்தர விட்டார். அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைக்குள் ஆக்கிரமிப்பதை தொடரக் கூடாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
நாளடைவில் இந்தச் சுவர் ஆக்கிரமிப்பைத் தடுத்தது மட்டுமல்ல, மன்னர் ஆட்சியின் பெருமையின் சின்னமாகவும் விளங்கியது.
சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தை தாண்டியும் நிற்கிறது என்ற கேள்வி கேட்க தோன்றுகிறதா?
இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும். சீனாவில் உள்ள ஜெ ஜியாங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்துதான் சுவரின் கற்களை இணைத்துள்ளார்.
சீனப் பெருஞ்சுவர் குறித்த வேறு சில முக்கிய விவரங்கள் இதோ.
முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல. அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.
சுவரை எழுப்புகையில் 10 லட்சம் பேர் இறந்தனர். (இதன் காரணமாகவே உலகின் மிக நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது).
சீனப் பெருஞ்சுவரின் நடுநடுவே சில இடைவெளிகள் உண்டு. இதன் காரணமாகத்தான் செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியர்கள் வட சீனாவின் மீது படையெடுத்து, கி.பி.1211லிருந்து 1223 வரை ஆட்சி செய்ய முடிந்தது.
நிலவிலிருந்து பார்த்தால் பூமியில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.
சீனாவைப் பொருத்தவரை இந்தப் பெருஞ்சுவரை அவர்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஐரோப்பியர்கள் இதைப் பற்றி மிகவும் பாராட்டியதைத் தொடர்ந்துதான், இருபதாம் நூற்றாண்டு சீன ஓவியங்களில் மெல்ல, மெல்ல பெருஞ்சுவரும் இடம் பெற்றது.
1966-ல் தொடங்கிய சீனக் கலாச்சாரப் புரட்சியின் போது, பெருஞ்சுவர் அரசாங்க அடக்குமுறையின் சின்னமாகக் கருதப்பட்டது. இந்தச் சுவரிலிருந்து செங்கற்களை எடுத்துச் சென்று வீடு கட்டிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
பெருஞ்சுவர் பகுதியில் நடைபெற்ற கடைசி யுத்தம் 1938-ல். இது சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்குமான யுத்தம். அப்போது உண்டான துப்பாக்கிக் குண்டுக் குறிகளை இப்போதும் சீனப் பெருஞ்சுவரில் காணலாம். போர்க் கடவுளுக்காக பல ஆலயங்கள் பெருஞ்சுவரை ஒட்டி எழுப்பப்பட்டன.
இந்தச் சுவர் மிக உச்ச உயரத்தைக் கொண்டிருப்பது பெய்ஜிங்கில்தான். அங்கே இதன் உயரம் 5333 அடி. சீனப் பெருஞ்சுவர் பற்றி பல கதைகள் உண்டு. கட்டுக்கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாதபடி அவை அழுத்தமாகப் பேசப்படுகின்றன.
சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அந்தப் பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது. அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் 'மெங் ஜியாங்' என்பவர். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் 'பான் குயிலியாங்' என்பவன்.
காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம். சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் இந்த இளைஞன்.
கணவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி. குளிர் காலம் வரப்போகிறது என்பதற்காக அவனுக்காக இரு ஸ்வட்டர்களையும் தன் கைப்பட பின்னியிருந்தாள்.
கணவன் வருவதாகத் தெரியவில்லை. காத்திருந்து பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தை அடைந்தாள். ஆனால், அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும், அவள் கணவன் கிடைக்கவில்லை.
அப்போது சில கட்டுமானக் கலைஞர்கள் அவளை அணுகினர்.
''யாரைத் தேடுகிறாய் பெண்ணே?'' என்று கேட்டனர்.
''என் காதல் கணவன் பான் குயிலியாங்கைத் தேடுகிறேன்,'' என்றாள்.
அணுகியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பிறகு, சுற்றுமுற்றும் பார்த்தபடி ரகசியமான குரலில், ''உன் கணவன் இறந்து விட்டான். இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில், இதயம் வெடித்தே இறந்து விட்டான்,'' என்றனர்.
மெங் ஜியாங் கதறினாள்.
வெகு நேரம் அழுதபின், ''என் கணவரின் உடல் எங்கே?'' என்று கேட்டாள்.
சிறிது நேரம் மவுனமாயிளர் சக உழைப்பாளிகள். பிறகு மெல்ல, ''அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டி விட்டனர்,'' என்றபடி மெல்ல நகர்ந்தனர்.
இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்துப் பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.
இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள். பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.
தன் கைகளை சுவரில் மோதினாள். அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின்மீது பட்டது. அதுவே, தன் கணவனின் எலும்பு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். இந்த நிகழ்வு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழ்பெற்றது.
இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு, கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?