PUBLISHED ON : மார் 10, 2017

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில், மும்பை, கோல்கத்தா, புனே, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.
பெரும்பாலான பள்ளிகள், பிரபலமான தனியார் பள்ளிகள் என்பதால், அந்த மாணவர்களின், பேச்சிலும், உணவிலும், உடையிலும் வளமை கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
வயருடன் அல்லது வயர் இல்லாமல், ரிமோட் வைத்து விற்கப்படும் கார் வாங்கி ஓட்டாத சிறுவர்கள் இருக்க முடியாது. மாணவர்கள் அதை அடிப்படையாக வைத்து, தாங்களே, எலக்ட்ரிகல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் உதவியுடன் உருவாக்கியவை தான் இந்த ரோபோ.
இவர்கள் உருவாக்கிய ரோபோக்கள், சொல்லும் திசையில் செல்கின்றன; காபி டம்ளரை கொண்டு போய் கொடுக்கின்றன; குழுவாக இணைந்து கால்பந்து விளையாடு கின்றன; அவ்வளவு ஏன்... ஜல்லிக்கட்டு கூட நடத்துகின்றன. ஒரு சந்தோஷம் என்ன வென்றால், ஜல்லிக்கட்டு விளையாடும் ரோபோக்கள் காயம் அடைவதில்லை.
இவர்களுக்கு மத்தியில் தான், இந்த கட்டுரையின் கதாநாயகர்களை சந்தித்தேன்...
சென்னை, சின்னமலை அரசு உயர்நிலை பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் லோகு, கார்த்திகேயன், பிரேம்குமார், கோகுல், கவுதம், ரவிகுமார் மற்றும் ரித்குமார் ஆகியோர் தான் கதாநாயகர்கள். அரசு பள்ளி சார்பாக பங்கு பெற்றவர்கள் இவர்கள் மட்டுமே.
இவர்களது கண்டுபிடிப்பு, ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகன ரோபோ.
மாணவன் பிரேம்குமாரின் அப்பா, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர். அவர், தன் மகனிடம், 'முக்கியமான வேலை என்னுடையது. ஆனால், நேரம் காலம் இல்லாமல் காத்துகிடப்பதாலும், அவசரமாக செயல்படுவதாலும் ரொம்பவே சோர்ந்து போய்விடுகிறோம். யார் கூப்பிட்டாலும், போக்குவரத்தில் தானாக போய்வரக்கூடிய ஆம்புலன்ஸ் வந்தால் நல்லது' என்று வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.
இதை, பிரேம்குமார் தன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள, அதையே ஐடியாவாக வைத்து, ஆள் இல்லாமல் இயங்கும் ஆம்புலன்ஸ் ரோபோவை கண்டுபிடித்து விட்டனர். ஒரு போன் செய்தால் போதும், அருகில் இருக்கும் ஆம்புலன்ஸ், வீட்டில் வந்து நிற்கும்.
ஓட்டுனர் இல்லாத இந்த ஆம்புலன்ஸில் உதவியாளர்கள் இருப்பார்களா... சென்னை போக்குவரத்தில் இது சாத்தியமா... எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்... இதெல்லாவற்றுக்கும் விடையுடன், 'வருங்காலத்தில் இது சாத்தியமாகலாம், எங்களைப் பொறுத்தவரை இது சமூகத்திற்கான ஒரு கண்டுபிடிப்பு... அவ்வளவு தான்' என்றனர் மாணவர்கள்.
அவ்வளவுதானா... இது பெரிய விஷயமப்பா! ஆமாம், இந்த ரோபோவை உருவாக்குவதற்கு நிறைய செலவாகி யிருக்குமே என்ற போது, 'இல்லை சார்... எங்களிடம் இருந்ததே, 200 ரூபாய் தான். அதற்குள் செய்தது தான் இந்த ரோபோ!' என்றனர்.
'இவ்வளவு மலிவானதா என்று, எங்கள் ரோபோவை குறைத்து மதிப்பிடாதீர்கள்... இப்போது பாருங்கள், இதன் செயல்பாட்டை!' என்று இயக்கி காட்டினர். செயற்கையாக வைக்கப்பட்ட மேடு, பள்ளம், வளைவுகளில் அசாத்தியமாகவும், வேகமாகவும் இயங்கியது. பார்த்தவர்கள் எல்லாரும், கைதட்டி பாராட்டினர். அந்த கைதட்டல் ஓசையையும் மீறி, ஒரு குரல் எழுந்தது.
'டேய்... வண்டியை ரொம்ப ஓட்டாதீங்கடா... பேட்டரி தீர்ந்து போனா திரும்ப வாங்க காசில்லடா' என்பது தான் அந்த குரல்...
- எல்.முருகராஜ்.
