தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி வீரன் (1)

புரட்சி வீரன் (1)

புரட்சி வீரன் (1)


PUBLISHED ON : ஆக 16, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சாபில், 1906ம் ஆண்டு, 'ஏகாதி பத்தியம் ஒழிக' என்று ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சியை தோற்றுவித்தார், 'பாஞ்சாலச் சிங்கம்' என்று பெயர் பெற்ற லாலாலஜபதி ராய். அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் அஜித்சிம்மன்.

அவர்களிருவரையும் நாடு கடத்தி, பர்மாவில் காவலில் வைத்தது ஆங்கிலேய அரசு. அக்காவலில் இருந்தபோதே அஜித்சிம்மன் இறந்து விட்டார். அண்ணன் சிறையிலிருந்தவாறே இறந்து விட்டதை அறிந்த அஜித் சிம்மனின் தம்பி கிருஷ்ணசிம்மன் கொதித்தெழுந்தார்.

ஆங்கிலேயருக்கு எதிராகக் கோஷமிட்டார். அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. 'நாட்டின் விடுதலைக்காக உயிரை விடவும் தயங்க மாட்டேன்' என்று வீர முழக்கமிட்டவாறு சிறைக்குச் சென்றார்.

அச்சமயம், அவரது மனைவி வித்யாவதிதேவி, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். 'தன் கணவரைப் போன்றே ஒரு தியாகக் குழந்தை எனக்குப் பிறக்க அருள்புரிய வேண்டும்' என வேண்டிக் கொண்டார்.

அவரது வேண்டுதல் வீண்போகாதவாறு, 1907ம் ஆண்டு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. அழகு முகமும், கூர்மையான கண்களுடன் பொன்மேனியாக பிறந்த குழந்தையைக் கண்டு வித்யாவின் உள்ளம் குளிர்ந்தது. குழந்தை பிறந்த செய்தியறிந்த கிருஷ்ணசிம்மன், பெரிதும் உள்ளம் மகிழ்ந்தார்.

'என் மகன், பாரத அன்னையின் மலரடியில் பூட்டப்பட்ட விலங்கை வெட்டி எறிவானாக!' என்னும் வீரச் செய்தியை அனுப்பி வைத்தார்.

சில மாதங்களில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த கிருஷ்ணசிம்மன், தமது குழந்தையை வாரியணைத்து, 'பகத்சிங்' என்னும் பெயர் சூட்டிப் பெருமகிழ்ச்சி கொண்டார்.

பகத்சிங்குடன் பலநாள் உடன் இருந்து முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அடிக்கடி சிறைச்சாலைக்கு சென்று வந்தார். சிறைக்குச் சென்றாலும், மகனது கல்வியில் அக்கறை காட்டி வந்தார்.

உரிய வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பகத்சிங், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வந்தார். உடன் பயிலும் மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் அடக்கத்துடன் இருந்து வந்தார். மற்ற மாணவர்கள் திட்டினாலும் பொறுத்துக் கொள்வார். அதனால் இவரை, 'சாது' என்றே அழைத்து வந்தனர்.

பள்ளியில் அனைத்துப் பாடங்களையும் மிகவும் கவனமாகப் படித்தாலும், நாட்டு வரலாற்றில் மிகுந்த நாட்டம் காட்டி வந்தார். அயர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள் சுதந்திரம் அடைந்த வரலாற்றை நன்கு ஊன்றிப் படித்து வந்தார்.

இந்நிலையில், காந்தியடிகள் 1920ம் ஆண்டு, ஒத்துழையாமைப் போரைத் தொடங்கியதை அறிந்தார். 'கல்லூரிகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியே வரவேண்டும்' என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, பகத்சிங்கும் தமது பதிமூன்றாவது வயதில் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.

அன்றிலிருந்து, விடுதலைப் போராட்டத்தில் முழுக்கவனம் செலுத்தத் தொடங்கினார். வாலிபப் பருவத்தை எட்டியவுடன், இவருக்கு மணமுடித்து வைக்க பெற்றோர் விரும்பினர். 'அம்மா! ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருக்கும் நம் பாரத நாடு விடுதலை அடைய வேண்டுமானால், என் போன்ற பல்லாயிரம் இளைஞர்களின் தியாகத்தால் தான் முடியும். அத்தகைய தியாகத்தை மேற்கொள்ளவிருப்பதால், எனக்கு கல்யாணம் வேண்டாம்' என்று மறுத்துக் கூறினார். அதன்பின்பு, திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தவில்லை.

பகத்சிங்கின் சிந்தனையெல்லாம், நாட்டைப் பற்றியதாகவே இருந்தது. ஆங்கிலேயரை இந்நாட்டை விட்டு எந்த வழியில் வெளியேற்றுவது என்று சிந்தித்தார். நண்பர்களுடன் டில்லி சென்று கொண்டிருக்கும் போது, செங்கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலக் கொடியைக் கண்டவுடன் ஆத்திரம் கொண்டார்.

'ஏ ஆங்கிலக் கொடியே! நீ எனது நாட்டு கொடிக்கம்பத்தில் இறுமாப்பாக பறக்கிறாயா? ஒருநாள் நீ இறக்கப்படுவாய். என் தாய் நாட்டுக்கொடி, நீ இருக்கும் இடத்திலிருந்து தலை நிமிர்ந்து பறக்கும்' என்று கூறினார்.

பகத்சிங்கின் நாட்டுப்பற்று, மென்மேலும் வளர்ச்சி பெற்று வந்தது. நாட்டுப்பற்று மட்டுமின்றி, நாட்டு மக்களிடத்திலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். உதவிகள் பல புரிந்து வந்தார்.

ஒரு சமயம், டில்லியில் பெய்த பெரும் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள மக்களில் பலர் வீடுகளை இழந்தும், உடைகளை இழந்தும், உணவின்றியும் வருந்தினர்.

உணவு, உடையின்றி தவித்த ஏழை, எளியோருக்கு உதவிடும் பொருட்டு, தமது நண்பர்களுடன் அவ்விடத்திற்குச் சென்றார். வசதி படைத்த பலரிடத்தில் உணவு, உடைகளைப் பெற்று, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். ஓடியாடி உதவி புரிந்த பகத்சிங்கின் செயல்பாடுகள்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைப் பெரிதும் கவர்ந்தது.

'உதவி செய்துவரும் இந்த இளைஞன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்' என்று, பகத்சிங்கைப் போற்றிப் பாராட்டினர். அத்தகைய மக்களை, சிற்சில சமயங்களில், 'ராஜத் துரோகிகள்' என்று குற்றம் சாட்டி, தடியடி நடத்தி, சிறைச் சாலைகளில் அடைத்தனர்.

அடிக்கடி ஆங்கில அரசுக்கு இடையூறு கொடுத்து வந்த மக்களைக் கட்டுப்படுத்தவும், நாட்டை தொடர்ந்து ஆட்சி நடத்த தந்திரம் ஒன்றையும் கைக் கொண்டனர். அதாவது, 'சைமன் கமிஷன்' என்னும் பெயரில் ஒரு குழுவினரை, அரசியல் சீர்திருத்தம் செய்வதாகக் கொண்டு வந்தனர். அக்குழுவில் இந்தியர் இடம் பெறாதது கண்டு, லாலா லஜபதிராய் போன்றோர் கொதித்தெழுந்தனர்.

லாலா லஜபதி தலைமையில் ஊர்வலம் ஒன்று புறப்பட்டு, 'சைமன் குழுவே திரும்பிப் போ!' என்று கோஷமிட்டுச் சென்றனர். அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த, தமது பணியாட்களை ஏவித் தாக்குமாறு, ஆங்கிலேயர்கள் தமது காவலர்களை ஏவினர்.

காவலர்களின் தாக்குதலால், நூற்றுக்கணக்கான போராட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். ஊர்வலத் தலைவர் லாலா லஜபதிராயின் வயிற்றில் பலமான அடி விழுந்தது. அவர் அடிவாங்கியும், முன் வைத்த காலைப் பின்வைக்க மறுத்தார்.

மீண்டும் மீண்டும் அடி விழுந்ததால், அடி தாங்காது துவண்டு விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி 1928ம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் இறந்து விட்டார்.

அச்செய்தியைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் கண்ணீர் வடித்தனர். கடைகள், தொழிற்சாலைகளை மூடித் துக்கங்களை அனுஷ்டித்தனர்.

அது ஒரு பக்கமிருக்க, மறுபக்கம், தத்தர், இராசகுரு, சுகதேவ் போன்ற வீர இளைஞர்களுடன் இணைந்து, ரகசியத் திட்டம் ஒன்றைத் தீட்டினார் பகத்சிங். அத்திட்டத்தின்படி, 1929ம் ஆண்டு ஏப்ரல் 8ம் நாளில், பகத்சிங் மற்றும் தத்தர், டில்லி சட்டசபைக்குள் திடீரென்று நுழைந்தனர்.

வெடிகுண்டுகளை எறிந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவைக் கண்ட திவான் பகதூர்களும், ராவ் பகதூர்களும், மற்ற உறுப்பினர்களும், அலறியடித்துக் கொண்டு மூலைக்கொருவராக ஓடினர்.

அவர்களைக் கண்ட பகத்சிங், 'நீங்கள் ஓட வேண்டாம். உங்கள் உயிருக்கு ஆபத்து வராது. நானும், தத்தரும் தான் வெடிகுண்டுகளை எறிந்தோம். மற்ற நண்பர்கள் எறியவில்லை. ஏன் எறிந்தோம் என்றால், இந்த சட்டசபையால், 'சுயராஜ்யம்' என்பதைப் பெற்றுத்தர இயலாது. அதைக் காட்டுவதற்காக வெடிகுண்டுகளை எறிந்தோம். சுதந்திரம் தராமல் காலம் கடத்தினால், இதுபோன்ற நிகழ்வுகள் தான் இனி நடக்கும் என்பதை ஆங்கிலேயருக்கு அறிவிக்கவே வெடி குண்டுகளை எறிந்தோம்.

'ஒரு நாட்டின் உரிமையை மற்ற நாட்டினர் பறிப்பது ஒழிய வேண்டும். ஒழிக்கும் வரைப் போராடுவோம். அதற்காக நாங்கள் தூக்குமேடை ஏறவும் தயாராக இருக்கிறோம். புரட்சி ஓங்குக!' என்று வீராவேசமாகக் கூறிக் கொண்டிருக்கும் போது, போலீஸ்காரர்கள் விரைந்து வந்து இருவரையும் கைது செய்து காவலில் வைத்தனர். பின்பு விசாரணை செய்தனர்.

விசாரணையில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, 1929ம் ஆண்டு ஜூன் மாதம், பகத்சிங்குக்கும், தத்தருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார் நீதிபதி.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளைப் பார்த்து, 'நீங்கள் எங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, எங்களை சிறையிலடைத்து விடுவதால், எங்களது, 'புரட்சி இயக்கம்' ஒழிந்துவிடும் என்று எண்ணி விடாதீர்கள். அந்த எண்ணம் தப்புக் கணக்கைப் போன்றது. ஏனெனில், எங்களைப் போல் பல இளம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் பிரிட்டிஷாரின் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்!' என்று சிங்கம் போன்று கர்ஜித்து கூறினார்.

இவருடன் இணைந்து, சுகதேவ், ராஜகுரு, யதீந்திர தாசர் என்ற இளைஞர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

சிறையில் கொள்ளையர்களையும், கொலைகாரர்களையும் நடத்துவதைப் போன்று, பகத்சிங் கூட்டாளிகள் நடத்தப்பட்டனர். 'மற்ற குற்றவாளிகளைப் போல் எங்களை நடத்தக் கூடாது; அப்படி நடத்துவதாக இருந்தால், உண்ணாவிரதம் இருப்போம்!' என்றனர்.

அப்போதும் சிறைக் காவலர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால், உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்ததால், சில நாட்களிலே உடல் இளைத்தனர். இப்படியே உண்ணாவிரதமிருக்கவிட்டால், உயிர் துறந்தாலும் துறந்து விடுவர். அப்படி உயிர் துறந்தால், நாட்டில் புரட்சி உண்டாகும் என்ற அச்சம் அதிகாரிகளிடையே ஏற்பட்ட நிலையில், பகத்சிங் நண்பர்களிடம், போலீஸ் அதிகாரிகள் அன்பாகப் பேசி உணவு உண்ணும்படி கெஞ்சினர்.

கெஞ்சியும் உணவை உண்ணாததால், சிறை அதிகாரிகள் பலவந்தமாக அவர்களுக்கு உணவைச் செலுத்தினர். அப்படியிருந்தும், 63ம் நாள், யதீந்திர தாசர் சிறையிலேயே உயிர் துறந்தார். அதன்பின்பு, மனம் மாறிய ஆங்கிலேயர், அரசியல் கைதிகளை, அவரவர் தகுதிற்கேற்ப மூன்று வகுப்புகளாகப் பிரித்து நடத்தினர்.

யதீந்திர தாசர் போக மீதம் இருந்த பகத்சிங் நண்பர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. உண்ணாவிரதத்தால், பகத்சிங் உட்பட அனைவரும் உடல் இளைத்திருந்ததால், நீதிமன்றத்திற்குச் செல்லும் திறனற்றிருந்தனர். அதனால், வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us