தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா! (25)

வயலின் வனிதா! (25)

வயலின் வனிதா! (25)


PUBLISHED ON : ஆக 16, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: வயலினை சாதகம் செய்ய முடியாமல் தவித்தாள் வனிதா. அவளை புரிந்து கொள்ளாமல் வெறுத்தார் சங்கர்லால். இனி -

சங்கர்லாலின் முகம் சிவந்தது. அந்தப் பழைய நினைவு அவர் கோபத்தை விசிறி விட்டது.

''சோம்பேறிப் பெண்!'' என்று கடிந்துக் கொண்டார்.

''நீ என் பொறுமையை சோதிக்கிறாய். ஆரம்பத்தில் நன்றாக வயலின் வாசித்தாயே... என்று உன் மீது அக்கறை காட்டினேன். அதில், தலைகுனிவு ஏற்படும்படி செய்து விட்டாய். அதை மறந்து, மறுபடி உனக்கு இந்த இசைக்குழுவில் இடமளித்தேன். ஆனால், நீ மாற வில்லை. அடுத்தமுறை வரும்போதும் உன் நிலை இதுவேயானால், நீ இந்தக் குழுவிலிருந்து நீக்கப்படுவாய்,'' என்று கடுமையாகக் கூறி விட்டுக் கிளம்பினார் சங்கர்லால்.

வனிதாவிற்கு எப்படி இருக்கும்? இசைக் குழு விலிருந்த மற்ற பெண் களெல்லாம் தன்னையே பார்ப்பது அவளுக்கு அவமானமாக இருந்தது. கூனிக் குறுகிப் போனாள். 'துரதிர்ஷ்டம் தன்னை விட்டு விலகி, தூரப் போகாதா...?' என்று ஏங்கிற்று.

நான் எங்கு போய் வயலின் பயிற்சி செய்வது, என்று தவித்தது அவள் உள்ளம். காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகளைச் செய்யவே அவளுக்குப் பொழுது சரியாகி விடுகிறது. அத்தை காமாட்சி இப்போது அவளிடம் பல பொறுப்புகளை ஒப்படைத் திருந்தாள். பாத்திரம் தேய்த்து, வீடு முழுவதும் பெருக்கித் துடைத்து, துணிகளுக்கு சோப்பு போட்டுத் துவைப்பதைத் தவிர, காலையில் காபி போட்டு அத்தையை எழுப்புவதும் வனிதாதான். இதன் பிறகு தன் பாடங்களைப் படிக்கவே நேரமிருப்பதில்லை அவளுக்கு.

பரக்கப் பரக்கச் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போகவே நேரம் சரியாக இருக்கும். பள்ளிக்கு நடந்தேதான் போனாள்.

அன்று காபி போட்டு எடுத்துக் கொண்டு அத்தையை எழுப்பப் போனாள் வனிதா. கண் விழித்த காமாட்சி, வனிதாவிடமிருந்து காபி டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

''லீலாவை எழுப்பினாயா? காபி கொடுத்தாயா அவளுக்கு?'' என்று கேட்டாள்.

''இதோ போறேன் அத்தை. உங்களுக்குக் கொடுத்து விட்டு, லீலாவுக்கு தரலாம்னு...'' வேகமாக வெளியேறினாள் வனிதா.

''சீக்கிரம், விடிந்து இவ்வளவு நேரமாச்சே? நீ என்ன பண்ணினே? தூங்கிட்டியா? மசமசன்னு காரியம் பண்ணாதே. சீக்கிரம் போ... அவளை எழுப்பு!'' என்று அதிகாரம் பண்ணினாள் படுக்கையிலிருந்தபடியே காமாட்சி.

காபியுடன் லீலாவின் அறைக்குப் போய் அவளை எழுப்பினாள் வனிதா.

தூக்கம் கலைக்கப் பட்ட லீலா, ''ஏய்! என்னை ஏன் எழுப்பினே?'' என்று எரிந்து விழுந்தாள்.

'மணி எட்டாகப் போறது லீலா. அம்மா தான் எழுப்பச் சொன்னாங்க...'' என்றாள் வனிதா பணிவாக.

''பள்ளிக்கூடம் போக நேரமாகலியா, எழுந்திரு!''

''எப்ப எழுந்திருக்கணும், எப்பப் பள்ளிக் கூடம் போகணும்னு எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேண்டாம். கெட் அவுட்!'' என்று போர்வையைச் சுருட்டி வனிதா மீது எறிந்து அவளை விரட்டினாள் லீலா.

இப்படி அல்லல்பட்டு அவமானப் படும் அவளுக்கு வயலின் வாசிக்கப் பொழுதேது? நிம்மதிதான் ஏது? வேதனைப் பட்டுப் போனாள் வனிதா.

அன்று கடைசி பீரியட். பாடம் நடத்தும் டீச்சர் லீவானதினால் அவர்களுக்கும் லீவு வழங்கப்பட்டது. சீக்கிரமே வீடு திரும்பினாள் வனிதா. ஆகவே, வீட்டில் இருக்கப் பிடிக் காமல், காலாற நடக்கலாம் என்று கிளம்பினாள்.

'இப்போது வயலின் வீட்டில் இருந்தால் சாதகம் பண்ணலாம். அது பரசுராம் கடையில் இருக்கிறது. சனிக்கிழமைதான் அங்கு போக முடியும். தினமும் அங்கு நான் போனால், அவர் அதைத் தொந்தரவாக நினைப்பார்...' இப்படி எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தாள்.

'தினமும் வயலின் பிராக்டிஸ் செய்யும் படியான ஒரு சூழ்நிலையும், வாய்ப்பும் கிடைக்காதா?' என்று ஏங்கியது அவள் மனம். அப்போது-

இரண்டு, மூன்று தெருக்களைக் கடந்து வந்திருந்தாள் வனிதா. அந்தத் தெருவில் ஒரு கோவில். அங்கு அன்று ஏதோ விசேஷம் போலிருக்கிறது. யாராவது பெரிய அபிஷேகம் செய்கிறார்களோ வேண்டுதலை நிறைவேற்ற? கூட்டமாக இருந்தது. யாரோ கச்சேரி செய்து கொண்டிருந்தனர். வயலின் இசை அவளை 'வா, வா' என்று அழைத்தது.

ஆவலுடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு போய்ப் பார்த்தாள். ஒரு மண்டபத்தில் இவள் வயதுள்ள மூன்று பெண்கள் கச்சேரி செய்து கொண்டிருந்தனர். ஒரு பெண் பாடினாள். ஒருவள் வயலினும். மற்றொரு பெண் மிருதங்கமும் வாசித்தனர். வனிதாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று பெருமைப்பட்டது அவள் மனது. வயலின் வாசிக்கும் பெண்ணை பார்த்தாள். பொறாமை யாக இருந்தது. 'அதிர்ஷ்டக்காரி! இந்த வயதில் கச்சேரி செய்ய வந்து விட்டாளே!' என்று நினைத்துக் கொண்டாள்.

கூட்டத்தினர் அந்தச் சிறுமிகளின் கச்சேரியில் அதிக கவனம் செலுத்தவில்லை. அபிஷேகத்தைப் பார்ப்பதிலும், வம்பு பேசுவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அந்த சிறுமிகள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். வனிதாதான் பெரிய ரசிகையாக அவர் களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் குறிப்பாக, வயலின் வாசிக்கும் அந்தப் பெண்ணை!

தீபாராதனையோடு கச்சேரி முடிந்ததும். அந்த மூன்று பெண்களும் கிளம்பினர்.

வனிதா வயலின் வாசித்த அந்தப் பெண்ணிடம் போனாள்.

''ரொம்ப நல்லா வயலின் வாசிச்சே? உன் பேரென்ன? யார்கிட்டே வயலின் கத்துண்டே?'' என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

தன்னைப் பாராட்டும் வனிதாவை கண்ட அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'தன் அப்பா இதைக் கேட்டால் சந்தோஷப் படு வார்' என்று எண்ணிக் கொண்டாள். ஏனென்றால், அவளுக்கு வயலின் கற்றுக் கொள்ளவே விருப்பமில்லை. அப்பாவின் வற்புறுத்தலினால்தான் அதை கற்றுக் கொண்டாள்.

''என் பெயர் பத்மா!'' என்றாள் அந்தப் பெண்.

''என் அப்பாகிட்டதான் வயலின் கத்துண்டேன். அவர் கச்சேரி எல்லாம் வாசிப்பார். உனக்கு வயலின் வாசிக்கத் தெரியுமா?'' என்று கேட்டாள் பத்மா.

''தெரியும்!'' என்றாள் வனிதா.

வயலின்தன் வாழ்வோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைச் சொல்ல வனிதாவுக்கு ஆசைதான். ஆனால், சொல்லவில்லை.

''எனக்கு வயலின் சொல்லித் தர யாருமில்லே!'' என்றாள் சோகமாக.

''அந்த கவலையே வேண்டாம் உனக்கு. எங்கப்பா உன் போல சங்கீதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆசையோடு கற்றுத்தருவார். என் வீட்டுக்கு வறியா? எங்கப்பா வீட்டிலே தான் இருப்பார். வீடும் பக்கத்திலேதான். உன்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்!'' என்றாள்.

பல நாள் பழகியவளைப் போல பத்மா பேசியது வனிதாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அன்பு காட்டும் தோழமையோடு பழுகுபவர்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாயிற்றே! வனிதா.

பத்மாவோடு அவள் வீட்டிற்கு வர சம்மதித்தாள்.

பத்மாவிடம் அவள் வீட்டுக்குப் போகும்போது, ''எனக்கு வயலின் வாசிக்கத் தெரியும். ஆனால், அதை வளர்த்துக்க தினம் சாதகம் செய்ய இடமில்லை. வழிகாட்ட குருவும் இல்லை!'' என்றாள் வனிதா.

''நீ அதிர்ஷ்டக்காரி. என் அப்பா, இப்படி ஆர்வமுள்ள சிஷ்யை கிடைக்காமல்தான் தினமும் மாலையில் என்னை சிரமப்படுத்தறார். எனக்கு இந்த வயலின் கத்துக்கவே விருப்ப மில்லை!'' என்றாள் பத்மா.

தன் நிலையையும், பத்மாவின் எண்ணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த வனிதாவுக்கு சிரிப்புதான் வந்தது. பத்மாவின் அப்பா வீட்டிலிருந்தார். நடுத்தர வயதுக்காரர் எதையோ தேடும் கண்கள். அதிர்ஷ்டமில்லாத வயலின் வித்வான். திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாதவர். சின்ன சின்னக் கக்சேரிகளில், பஜனைகளில் வயலின் வாசித்தும், குழந்தைகளுக்கு வயலின் சொல்லிக் கொடுத்தும் வாழ்க்கை நடத்தி வந்தார். வருவாயைப் பற்றிக் கவலைப்படாமல், வயலினிடம் பக்தி கொண்டிருப்பவர் பத்மாவின் அப்பா குருமூர்த்தி.

வனிதாவைப் பற்றி பத்மா கூறியதும், அன்போடு, பாசத்தோடு அவளை வரவேற்றார் குருமூர்த்தி. தன் வயலினை அவளிடம் கொடுத்து வாசித்துக்காட்டும்படி கூறினார்.

தன் தந்தை வயலினைக் கொடுத்து, ''வாசி!'' என்று கூறியது நினைவிற்கு வந்தது வனிதாவுக்கு. அப்பாவின் நினைவு, அன்பு, விழியோரங்களில் நீர் கட்டச் செய்தது.

வயலினை இடது தோளின் கீழே அழுத்திக் கொண்டாள். அதன் கம்பிகளில் வில்லை ஒரு இழுப்பு இழுத்தாள். சுநாதமான ஒலி எழுப்பிய வள் தன் கண்களை மூடிக் கொண்டாள். அவள் வலது கை விரலும், இடது கை விரல்களும் லாவகமாக இயங்கின. அந்த அமைதியான சிறிய வீட்டில் வனிதாவின் இனிய வயலின் நாதம் நிறையலாயிற்று. குருமூர்த்தி தன்னை மறந்த நிலையில் அந்த இசை வெள்ளத்தில் மூழ்கிப் போனார். வயலினில் ஈடுபாடில்லாத பத்மாவும் சிலையாக அமர்ந்திருந்தாள்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us