PUBLISHED ON : மே 18, 2018

மதுரையில், அரசு உதவிபெறும் பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றினேன். தினமும், வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.
அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, வகுப்பறைக்கு வெளியே அழுது கொண்டிருந்தாள். அவளை சமாதானப்படுத்தி, வகுப்பறைக்குள் நுழைந்து, 'ஏன் இவள் அழுகிறாள்...' என பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியையிடம் கேட்டேன்.
அவர், 'ஐயா... ஒரு கவிதையை, கரும்பலகையில் நேற்று எழுதி, விளக்கினேன்; மறுநாள் அனைவரையும் விளக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படி, வகுப்பில், கவிதையை விளக்க சொன்னேன்...
'இந்த மாணவி ரோஜா, ஒரு விளக்குமாற்றை எடுத்து வந்து காட்டினாள். கவிதையை, விளக்கி சொல்லச்சொன்னதை, 'விளக்குமாறு' என்று தவறாக புரிந்து, வீட்டில், தரையை சுத்தம் செய்யும் விளக்குமாறை எடுத்து வந்திருக்கிறாள். 'இதை, ஏன் எடுத்து வந்தாய்... வகுப்பில் கூறியதை சரியாக புரிந்து கொள்ளமாட்டாயா' என கண்டித்தேன் என்றார்.
இதைக் கேட்டதும், குபீர் என சிரித்து விட்டேன்; வகுப்பறையில் மற்ற மாணவியரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இப்போது, என் வயது, 79. விளக்குமாற்றை காணும் போதெல்லாம், மாணவி ரோஜாவை நினைத்து சிரித்து விடுவேன்.
- எம்.பாலகிருஷ்ணன், மதுரை.
