PUBLISHED ON : ஜூன் 28, 2019

காட்டில் சுதந்திரமாக பறந்து திரிந்த வண்ணத்துப் பூச்சி, மற்ற உரியினங்களின் கதையை கேட்க முடிவு செய்தது. அதற்காக, சிறு பூச்சி, வண்டுகளை அன்புடன் அழைத்தது.
அழைப்பை ஏற்று வந்த உயிரினங்களின் மாநாடு, ஒரு அழகிய அரசமரத்தடியில் நடந்தது. அங்கு வந்தவற்றை வரவேற்ற வண்ணத்துப்பூச்சி, 'சாப்பிட்டாச்சா...' என்று, அன்புடன் கேட்டது.
'சாப்பிட்டாச்சு... தினமும் வண்ண வண்ண மலர்களைத் தேடி திரியும் உங்க அனுபவம் ரொம்ப அற்புதமானது. அந்த அனுபவ கதையைக் கேட்க ஆவலா இருக்கோம்...' என்று உற்சாகமாக கூறின.
'சரி... அதுக்கு முன், எல்லாரும் உங்களைப் பத்தி சொல்லுங்க...' என்றது, வண்ணத்துப் பூச்சி.
உடனே, தயங்காமல் முன்வந்த தேனீ, 'சுறு சுறுப்புக்கு உதாரணம் நங்கதான். ராணி தேனீக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
'கடுமையா முயற்சி செய்து, சிறுக சிறுக தேனை சேகரிக்கிறோம். ஆனா, ஒரு நிமிஷத்துல மனுஷங்க எங்கக் கூட்டக் கலச்சு, தித்திக்கும் தேனை அபகரிச்சுடுறாங்க... நாங்களும் சும்மா விடுறதில்ல... அவங்கள, கடுமையா தாக்கி, உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்...' என்றது.
இதைக்கேட்டு உற்சாகம் அடைந்த எறும்பு, 'நாங்க, எல்லா இடத்திலும் வரிசையை கடைப்பிடிப்போம். எங்கள பாத்து தான், மனுஷங்க வரிசை ஒழுங்கை கத்துக்கிட்டாங்க. மழை காலம் வரும் முன், பாதுகாப்பான இடத்துல உணவுப்பொருட்களை சேமிச்சிடுவோம். சோம்பேறியா இருக்கிறவங்க எங்களப் பாத்து பாடம் கத்து திருந்தணும்! யாராவது எங்களைச் சீண்டினா, கடித்து பாடாய் படுத்திடுவோம்...' என்றது.
அடுத்து ரீங்காரமிட்டு வந்த ஈ, 'எங்களப் பாத்தாலே, மனுஷங்க அருவருப்பாயிடுறாங்க! சுத்தம், அசுத்தம் எல்லாம் பாக்கமாட்டோம்; ஆகவே, நாங்க மொய்த்த தின்பண்டங்களை சாப்பிட்டா நோய் வந்துரும்... எங்களுக்கு, ஆறு கால் இருக்குன்னு, குழைந்தங்க படிக்கிறது சந்தோஷமா இருக்கும்...' என்றது.
அடுத்து வந்த கொசு, 'சுத்தமில்லாம, சாக்கடை தேங்கியிருக்கிற பகுதியில நாங்க வசிக்கிறோம். எங்களுக்கு பிடிச்சது ரத்தம் தான். எங்களால தான் பல நோய்கள் மனுஷங்களுக்கு பரவுது. எங்களப் பாத்ததும், பயந்து நடுங்குவாங்க...' என்றது.
அடுத்து வந்த கரப்பான் பூச்சி, 'எங்களுக்கு செவ்வண்டுன்னும் ஒரு பேரு உண்டு. சாக்கடை, குப்பை கூளங்களில் தான் நாங்க வசிக்கிறோம். நாங்களும் நோய்கள பரப்புவோம்! அதனால, ஜாக்கிரதயா இருங்க... நீங்க வசிக்கிற பகுதிய சுத்தமா பராமரியுங்க...' என்று கூறி, ஓரமாக அமர்ந்தது.
மெல்லிய இழையில் தொங்கிய சிலந்தி, 'நாங்க கஷ்டப்பட்டு வலை பின்னுறோம். அத, மனுஷங்க அழிச்சிடுறாங்க... அதுக்காக கவலப்பட்டு சோர்ந்து போறதே இல்ல; உடனே, முயற்சி செய்து, புதுசா ஒரு வலைய பின்னிடுவோம்...
'எங்களுக்கு, எட்டு கால் இருக்குறதால, எட்டுக்கால் பூச்சின்னும் அழைக்கிறாங்க... நாங்க வலை பின்னுறதப் பாத்தா... நிறைய பாடம் கத்துக்கலாம்...' என்று வணங்கி முடித்தது.
இவற்றை எல்லாம் கேட்ட வண்ணத்துப்பூச்சி, 'எல்லாரும் ரொம்ப நல்லா பேசுனீங்க... உங்ககிட்ட இருந்து பெரிய பாடங்களக் கத்துக்கிட்டேன். எங்க பெயருக்கு ஏற்றாற் போல, எண்ணில்லா வண்ணங்கள இறகுல வச்சிருக்கோம்... எங்க அழகுல மயங்காதவங்களே இல்லை. பூவில் தேனை குடித்து, மகரந்த சேர்க்கைக்கு துணை போறோம்.
'நாம எல்லாரும் காரண காரியத்தோட தான் வாழுறோம். ஒருவருக்கொருவர் உதவியா இருந்தா, அன்பான, அழகான உலகத்த உருவாக்கலாம். இங்கு வந்த எல்லாருக்கும் நன்றி...' என்று முடித்தது. கூட்டம் முடிந்து அனைத்து உரியினங்களும் தங்கள் வசிப்பிடம் சென்றன.
குட்டீஸ்... உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் பாடங்களைக் கற்றுத் தருகின்றன. அவற்றை புரிந்து கொண்டால், மகிழ்ச்சியாக வாழலாம்!
- என்.மாதரசி
