PUBLISHED ON : பிப் 05, 2022

ஸ்ரீவில்லிபுத்துார், கூமாப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 6ம் வகுப்பு சேர்ந்தபோது, நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார் என் தந்தை. விவசாயக் கூலி வேலை செய்து காப்பாற்றினார் தாய். உச்சக்கட்ட வறுமையில் வாடியது குடும்பம்.
வகுப்பில் முதல்நாள் வரலாறு பாடத்தை நோட்டில் எழுதச் சொன்னார், ஆசிரியர் சோமு. அனைவரும் பேனாவால் எழுதினர். நான் மட்டும், தடுமாறியபடி, மிகச் சிறிய பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தேன்.
என் ஏழ்மையை அறிந்தவர், மறுநாள் கறுப்பு வண்ண பேனா ஒன்றை வாங்கி கொடுத்தார். அவரது அன்பில் கரைந்தேன். அந்த பேனாவை உயிர் போல் பாதுகாத்து, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவும் பயன்படுத்தினேன்.
மேற்படிப்பு முடித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வென்று அரசுப் பணி உத்தரவை அவரிடம் காட்டினேன்; நெகிழ்ந்து வாழ்த்தினார்.
என் வயது, 55; பச்சை மையில் கையெழுத்திடும் வட்டாட்சியராக பணிபுரிகிறேன். இந்த வண்ண மை பேனாவை பயன்படுத்தும் பின்னணியில் உள்ள கறுப்பு வண்ண பேனா, அந்த ஆசிரியரை தினமும் நினைவு படுத்திக்கொண்டிருக்கிறது.
- க.மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார்.
தொடர்புக்கு: 98650 56155
