
குழந்தையை, தொட்டிலில் போட்டு, பெயர் சூட்டும் விழா நிகழ்த்தி வாயார அழைப்பது பண்பாடாக உள்ளது. வண்ணமயமான குடும்ப விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
தொட்டிலில், குழந்தையை போடுவதற்கான காரணத்தை அறிவோம்...
பிறந்த குழந்தையை எந்நேரமும் கவனிப்பது அரிது. கண்காணிப்பாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கவனம் பிசகி விட வாய்ப்பு உண்டு.
துணியை விரித்து, குழந்தையை தரையில் போட்டால் எறும்பு, பூச்சி, பூரான் போன்றவற்றால் பாதிப்பு வரக்கூடும்; பாதிப்பு ஏற்பட்டால் குழந்தையால் கூற இயலாது. இம்மாதிரி பிரச்னைகளை தவிர்க்கவே, தொட்டில் அவசியம்.
குழந்தைக்கு, தொட்டில் கதகதப்பை தரும்; நல்ல வடிவத்தையும் உருவாக்கும். இதையெல்லாம் உத்தேசித்து தான், தொட்டில் அறிமுகமானது.
மரத்தொட்டில் தான் பிரபலமாக உள்ளது. இந்திய அளவில், மிக பிரபலமான மரத்தொட்டில்கள், கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில், கல்கட்சி கிராமத்தில் தயாராகிறது. அங்கு உருவாக்கும் தொட்டில் எழில் மயமானது; பார்த்தாலே பிடித்து விடும்.
பழங்காலத்தில், இந்த கிராமத்தில் சில குடும்பங்கள், அரச குடும்ப பயன்பாட்டுக்கு தொட்டில் செய்து கொடுத்து வந்தன; இப்போது, தேவை குறைந்ததால், இரண்டே குடும்பங்கள் தான் இதில் ஈடுப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளாக தேவை மிகவும் குறைந்து விட்டது; இதனால் இந்த குடும்பங்கள் பிழைப்புக்கே கஷ்டபட்டன. அப்போது, மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினர், தொட்டில் செய்து தர கேட்டனர். அழகிய தொட்டிலை அவர்கள் வாங்கிய போது, சமூக வலைத்தளங்களில் பிரபலமானது.
இதையடுத்து, அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், செல்வந்தர்கள் அந்த வகை தொட்டில் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்ணமயமாக செய்ய சொல்லி வாங்கி வருகின்றனர்; இதனால் தொட்டில் தேவை அதிகரித்து வருகிறது.
இங்கு, தேக்கு மரத்தில் தொட்டில் உருவாக்கப்படுகிறது. அதில் துாங்கும் குழந்தைக்கு, அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்படா வண்ணம், மிகவும் கவனமாக உருவாக்குகின்றனர். தொட்டிலில், அழகிய ஓவியங்களை வரைந்து மெருகேற்றுவர்.
முதலில், தொங்கும் வகை தொட்டிலை தான் உருவாக்கி வந்தனர். தற்போது, தரையில் நிற்க வைக்கும் விதமாக உருவாக்க துவங்கியுள்ளனர். அரக்கு, மெழுகு, மஞ்சள் போன்றவற்றில், மூலிகை வண்ணங்களை குழைத்து கம்பீரமாக ஓவியங்களை உருவாக்குகின்றனர்.
தொங்கு தொட்டில் ஒன்றை உருவாக்க, 15 நாட்கள் வரை ஆகும்; விலை, 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரையில் நிறுத்தும் வகையிலான தொட்டில் செய்ய, மூன்று மாதங்கள் வரை ஆகும்; இதற்கு, 1 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலங்கார தொட்டில் தவிர்த்து, சாதாரண வகை தொட்டில்களும், ஜென்மாஷ்டமி, மகாவீரர் ஜெயந்தி, அனுமந்த் ஜெயந்தி விழாக்களில் பயன்படுத்தும் விதமாக, எழில் மிகு ஊஞ்சல்களும் தயாரிக்கப்படுகின்றன.
கூடுதலாக, சோபாசெட், பல்லக்கு, விலங்கு, பறவை உருவங்கள் என, மரத்தால் ஆன கைவினைப்பொருட்களும் செதுக்கித் தருகின்றனர், இந்த ஊர் கலைஞர்கள்.
- பட்டு

