
நேரப் பிரிவினை!
ரயில் பயணச்சீட்டில் பகல் 1:00 மணியை, '13:00' என குறிப்பிட்டிருப்பர். அதற்கான காரணத்தை பார்ப்போம்.
ஒரு நாள், 24 மணி நேரமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதை, 12 மணி என்ற ரீதியில் கணக்கிடுவர். நள்ளிரவு 12:00 மணி முதல் பகல் 12:00 வரையுள்ள நேரத்தை, ஆங்கிலத்தில், 'ஏஎம்' என்பர். இது, 'ஆன்டி மெரிடியம்' என்ற லத்தீன் மொழி சொல்லின் சுருக்க வடிவம். பகல் 12:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரையுள்ள நேரத்தை, 'பிஎம்' என்பர். இது, 'போஸ்ட் மெரிடியம்' என்ற லத்தீன் சொல்லின் சுருக்க வடிவம்.
ரயில், விமான சேவைகளை, 24 மணி நேர அடிப்படையில் தான் குறிப்பிடுகின்றனர். அதாவது, பகல் 12:00 மணியை தாண்டி 1:00 மணியை, 13:00 மணி என குறிப்பிடுவர்.
ரயில் சேவையில்தான் முதன் முதலில், 24 மணி நேர அட்டவணை முறை கொண்டு வரப்பட்டது.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
ரயில்வே துறையும் துவக்கத்தில் 12 மணிநேர அட்டவணை முறையில் தான் செயல்பட்டது. அதை புரிந்து செயல்படுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. பிற்பகல் 2:00 மணி என்பதை அதிகாலை 2:00 மணி என தவறாக புரிய ஏதுவானது. இப்படி புரிந்து ரயிலை இயக்கியதால், எதிரில் வரும் ரயில் நேரம் தெரியாமல் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் முக்கிய பணியாக செல்லவிருந்த ரயில்வே உயர் அதிகாரி ஸான்போர்ட் பிளெமிங், ரயிலை தவறவிட்டார். அதற்கும், 12 மணி நேரக் கணக்கீடு குழப்பமே காரணம்.
இதன் பின்பே, நேர சுழற்சி முறையில் உள்ள குழப்பத்தை தீர்க்க அவர் முடிவு செய்தார். எல்லாருக்கும் புரியும் வகையில் நேர அட்டவணை தயாரிக்க முயன்றார். முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள நேரக்குறிப்பு அட்டவணை அமலுக்கு வந்தது.
உலகம் முழுவதும் ரயில்வே நேரக்குறிப்பில் எந்த சந்தேகமும், பிரச்னையும் ஏற்படாத வகையில், சுழி போட்டவர், பொறியாளர் ஸான்போர்ட் பிளெமிங் தான். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். வட அமெரிக்க நாடான கனடா, கனடியன் - பசிபிக் ரயில்வே துறையில் பணிபுரிந்தார்.
அப்போது, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் காலனியாக இருந்தது கனடா. அவர் வகுத்த, 24 மணி நேரக்குறிப்பு முறை, 1884ல் அமலுக்கு வந்தது. முக்கிய நாடுகள் இந்த முறையை உடனடியாக ஏற்க முன்வரவில்லை. நீண்ட ஆய்வுக்குபின், 1929ல் தான் பல நாடுகள் ரயில் சேவையில், 24 மணி நேர அட்டவணையை அமல்படுத்தின. பின், விமான சேவைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
மிகவும் துல்லியமாக நேரத்தை கடைபிடிக்க வேண்டிய துறைகளில் எல்லாம் 24 மணி நேர முறையே பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் இது, 'மிலிட்டரி டைம்' என அழைக்கப்படுகிறது.
நீண்ட ரோமக்கழுதை!
சாதாரணமாகப் பார்க்கும்போது, விசித்திர விலங்குபோலத் தெரியும். ஆனால், இது கழுதை இனம். பொதுவாக, கழுதையின் உடல் பகுதியில் பசு, எருமை, ஆடுகளுக்கு உள்ளது போல், லேசாக ரோமங்கள் இருக்கும்.
ஆனால், இந்தவகை கழுதையின் உடலில் நீண்ட ரோமங்கள் இருக்கும். இதன் பெயர், 'பாடட் டூ போய்டூ' என்பதாகும். இந்த கழுதை இனம், ஐரோப்பிய நாடான பிரான்சை பூர்வீகமாகக் கொண்டது. விவசாய பணிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

