
அழகிய வனத்தில், எளிய விலங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. புற்களையும், சிறு செடி கொடிகளையும் உண்டு வாழ்ந்தன. அங்கு, புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது; அவை சிறுவிலங்குகளை வேட்டையாடி தின்றன.
இதனால், மான், முயல் போன்ற விலங்குகள் பயந்து நடுங்கின. அவை, 'பயத்தை தீர்க்க, கடவுள் போல, யாரும் வர மாட்டார்களா' என பிரார்த்தித்து காத்திருந்தன.
ஒரு நாள் -
மேய்ச்சலில் இருந்து தப்பிய ஆடு, வழிமாறி அந்த காட்டிற்கு வந்தது. மான், முயல் போன்ற சிறு விலங்குகளை சந்தித்து, 'பசிக்குது... உணவு கிடைக்குமா...' என கேட்டது.
அவை காட்டிய இடங்களில் மேய்ந்து பசியாறியது ஆடு.
தாவர உண்ணி விலங்குகள் எல்லாம் சோகமாக இருப்பதை கண்டது ஆடு. அதற்கு காரணம் புலிகளின் அச்சுறுத்தல் என்பதை தெரிந்து கொண்டது.
அன்று இரவு, விலங்குகள் துாங்கிய பின், கடும் தவம் மேற்கொண்டது ஆடு. அப்போது, 'உதவிய விலங்குகளின் பயத்தை தீர்க்க முயல வேண்டும்' என முடிவு செய்தது. அதற்காக தீவிரமாக சிந்தித்தது.
மறுநாள், அதிகாலை பலத்த இடியுடன், கனமழை பெய்தது.
விடிந்ததும் வெளியே சென்ற ஆட்டிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது; சிறிது துாரத்தில், மின்னல் பாய்ந்து புலி ஒன்று இறந்து கிடந்தது.
அதைக் கண்டதும், ஒரு திட்டம் மனதில் பிறந்தது.
மற்ற விலங்குகளை அழைத்து, ரகசியமாக அந்த திட்டத்தை கூறியது ஆடு.
அவை மகிழ்ந்த ஒத்துழைப்பதாக கூறின.
உடனே, புலி போன்ற மாமிச உண்ணி விலங்குகள் வேட்டையாட வரும் வழியில் புலியின் உடலை போட்டது. அந்த உடலை தின்பது போல தாவர உண்ணி விலங்குகள் நடித்துக் கொண்டிருந்தன.
வேட்டையாட வந்த புலிகள், இதைக் கண்டதும் பயத்தில் உறைந்து நின்றன. மிரண்டபடி, 'என்னடா இது' என திகைத்தன.
அப்போது கொடூரமான குரலில், 'புலிகளே... உங்களைக் கொல்லும், யுக்தியை கண்டுபிடித்து விட்டோம்; இனி, எங்களை நெருங்க முடியாது; மீறினால், இந்த புலிக்கு ஏற்பட்ட நிலமை தான் உங்களுக்கும்...' என்று சத்தமிட்டது ஆடு.
அதை கேட்ட புலிகள் பயந்து அலறியபடி ஓடின.
தாவர உண்ணி விலங்குகள், நெகிழ்வுடன் ஆட்டுக்கு நன்றி தெரிவித்தன.
குழந்தைகளே... தற்செயலாக நடந்ததை, சாதகமாக பயன்படுத்திய ஆட்டின் புத்திசாலி தனத்தை மனதில் கொள்ளுங்கள்.
- கே.மகாலட்சுமி

