PUBLISHED ON : ஆக 02, 2019

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, பெத்தாள் ஆச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 11ம் வகுப்பு படித்தேன். பொதுத்தேர்வில், வரலாறு பாடத்தில் தோற்றேன்.
'படித்தது போதும்...' என, கூறி விட்டார் அப்பா.
'மீண்டும் படிக்கிறேன்...' என, பிடிவாதம் செய்ததால், அதே பள்ளிக்கு அழைத்துச் சென்றார் அம்மா. தலைமை ஆசிரியை பெரியாள் அறிவுரை கூறி சேர்த்துக் கொண்டார். நன்றாக படித்து தேர்ச்சி பெற்றேன்.
உடன், திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்ததும், என் ஒரு கண் பார்வை பறிபோனது. வருவாய் துறையில் வேலை கிடைத்தது. பின், ஒரு மகளும், மகனும் பிறந்தனர்.
என், 26 வயதில், கணவரை இழந்தேன். உழைப்பே வாழ்வானது; நம்பிக்கையுடன் உழைத்து, மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தேன்.
என் மகள் பிஎச்.டி., பட்டம் பெற்று, ஒரு பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். இரண்டாவது மகன் ஆடிட்டர்; மூன்றாவது மகன், நிருபராக பணிபுரிகிறான்.
பணித் திறமையால், பல விருதுகள் பெற்றேன். பதவி உயர்வுகள் பெற்று, வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.
அன்று, தோல்வியில் துவண்டு போயிருந்தால், என் பிள்ளைகளை சிறப்பாக வளர்த்திருக்க முடியாது; நானும் உயர்ந்திருக்க மாட்டேன். படிப்பே பலன் தந்தது.
தற்போது, 61 வயதாகிறது; எனக்கு பேருதவி செய்த தலைமை ஆசிரியையை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
- கே.லட்சுமி, சிவகங்கை.
