தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மந்திரப் பறவை! (2)

மந்திரப் பறவை! (2)

மந்திரப் பறவை! (2)


PUBLISHED ON : ஆக 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: வியாபாரி காலிக் கையில் சிக்காமல் தப்பி ஓடிய கடம்பன், சகோதரனை பிரிந்து, அழகியின் கோட்டைக்கு வந்தான். அவன் அணிந்திருந்த மந்திர பறவையின் கால் தாயத்தை பறித்த அழகி, அவனை காட்டில் வீசினாள். இனி -

காலையில் கண் விழித்த கடம்பன், மலைப்பகுதியில் விழுந்து கிடப்பதை உணர்ந்தான். வழக்கமாக கிடைக்கும் பொற்காசுகள் எதுவும் அன்று தென்படவில்லை. கால் போன போக்கில் நடந்தான். நன்றாக களைத்து இரவில் துாங்கிவிட்டான்.

மறுநாள் விழித்த போதும், தலைக்கு அடியில், பொற்காசுகள் தோன்றவில்லை. அப்போது தான், அணிந்திருந்த தாயத்து மாயமானதை கண்டு, மனம் உடைந்தான்.

பாலைவனத்தில் நடந்த போது, மூன்று இளைஞர்கள், சண்டையிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தான்; அவர்களிடம் விசாரித்தான் கடம்பன்.

'நாங்கள், காலிக் என்ற வியாபாரியின் மகன்கள்; எங்கள் தந்தை இறந்து விட்டார். அவரது செல்வம் முழுவதையும், செலவு செய்து அழித்து விட்டோம். மிஞ்சியிருப்பது, மூன்றே மூன்று மந்திரப் பொருட்கள்; அவற்றை பங்கிட்டுக் கொள்வதில் தான் சண்டை...' என்றனர்.

தன் அன்னையை ஏமாற்றி, வஞ்சித்து, தன்னையும், சகோதரனையும் கொல்ல எண்ணிய வியாபாரி காலிக்கின் மகன்கள் தான் என்பதை புரிந்து கொண்ட கடம்பன், 'நான் புகழ்பெற்ற நீதிபதி. உங்களுக்கு என்னால் உதவ முடியும்; சர்ச்சைக்குரிய பொருட்களின் முக்கியத்துவத்தை கூறுங்கள்...' என்றான்.

'இதோ... இந்த மந்திர பைக்குள் கை விட்டு, வேண்டியதை நினைத்தால், உடனே கிடைக்கும்...' என்றான் மூத்த மகன்.

'இந்த கம்பளத்தின் மீது அமர்ந்து, போக வேண்டிய இடத்தைக் கூறினால் அழைத்து செல்லும்; இதன் மகிமை இதுதான்...' என்றான், இரண்டாமவன்.

'இந்த குடுவையில் உள்ள தைலத்தைப் புருவத்தில் தடவிக்கொண்டால், பிறர் பார்வைக்கு புலப்படாமல் மறைந்து விடலாம்; இஷ்டப்படி, எங்கும் போகலாம்...' என்றான் மூன்றாமவன்.

'மிகவும் சிறப்பான பொருட்கள்...' என்ற கடம்பன், அவற்றை அடைவதற்கான வழியை யோசித்தான்.

'கனம் நீதிபதியவர்களே... இவற்றை எப்படி பங்கிடுவது என்று கூறுங்கள்; உங்கள் தீர்ப்பை, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்...' என்றனர் மூவரும்.

'ரொம்ப சுலபம்... இதோ என்னுடைய வில்; இதிலிருந்து ஒரு அம்பை எய்கிறேன். எய்த அம்பை எடுத்து வருபவருக்கு, மூன்று அற்புதப் பொருட்களையும் தந்து விடுகிறேன்...' என்று கூறி, அம்மூன்று பொருட்களையும் வாங்கிக்கொண்டான்.

கடம்பனின் திட்டத்துக்கு, மூவரும் ஒப்புக் கொண்டனர்.

வில்லில் நாண் ஏற்றி, அம்பு எய்தான். அம்பு, பாய்ந்து சென்ற திசை நோக்கி, மூவரும் ஓடினர்.

உடனே, மந்திரப் பை, எண்ணெய் குடுவையுடன், மந்திரக் கம்பளத்தில் அமர்ந்த கடம்பன், அழகியின் கோட்டைக்குப் போக ஆணையிட்டான்.

கோட்டைக்கு அருகே மலையடிவாரத்தில் மந்திரப் பொருட்களை மறைத்து வைத்தான். பின், கோட்டை வாசலுக்குப் போனான்; தன் வரவை அழகிக்கு அறிவித்தான்.

அவனை வரவேற்றாள் அழகி. அவளிடம் மிகவும் சாதுாரியமாக, 'அற்புத புதையலை உனக்காக எடுத்து வந்துள்ளேன்; மலையடிவாரத்துக்கு வந்தால் அதை காட்டுவேன்...' என்றான், கடம்பன்.

அழகிக்கு ஆவல் பிறந்தது; மலையடிவாரத்துக்கு வந்தாள். மந்திர பொருட்களை எடுத்த கடம்பன், கம்பளத்தில் அவளுடன் அமர்ந்து, 'பூதத்தீவுக்குப் போ...' என்று, கட்டளையிட்டான்.

இருவரும் பூதத்தீவுக்கு வந்தனர். அழகியை, மணந்த கடம்பன், அவளுக்கு வேண்டியதை, மந்திரப் பைக்குள் கையை விட்டு வரவழைத்தான்.

ஒரு நாள் -

அழகி கொஞ்சியப்படியே, 'நான், உங்களுடையவளாகி விட்டேன்; இன்னுமா என்னிடம் நம்பிக்கை ஏற்படவில்லை... அதிசயப் பொருட்களைப் பற்றி தெரிவிக்கக் கூடாதா...' என்று கேட்டாள். அவளது பசப்பால் மதி இழந்த கடம்பன், மந்திரப் பொருட்களின் பண்புகளை கூறி விட்டான்.

அழகியின் கெட்ட குணம் மாறவில்லை. கடம்பன் ஏமாந்த போது, மந்திர பொருட்களுடன், கம்பளத்தில் ஏறி, கோட்டைக்கு சென்று விட்டாள்.

அவள், வானத்தில் பறந்து சென்ற போது, தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்த கடம்பன், தரையில் புரண்டு அழுது புலம்பினான்.

'இங்கிருந்து எப்படி வெளியேறுவேன்... உயிர் வாழ, உணவு கூட இல்லையே...' என்று கதறி, களைத்து துாங்கிப் போனான்.

கண் விழித்த போது, மரத்தில், இரு புறாக்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்; எழுந்திருக்காமல், அவை பேசுவதை கவனித்தான்.

ஒரு புறா, 'இதோ... படுத்திருப்பவன், நான் சொல்வதைக் கேட்டால், பிழைக்க முடியும்...' என்றது.

'நான் விழித்து தான் இருக்கிறேன் அருமைப் பறவையே; என்ன செய்ய வேண்டும், சொல்...' என்றபடி, எழுந்து உட்கார்ந்தான் கடம்பன்.

'இதோ... இந்த மரத்தின் பட்டைகளை, காலில் கட்டினால், நீரில் நடக்கலாம். பூமியில் சாதாரணமாக நடப்பது போல் போகலாம். மரத்தின் ஒரு கிளையை ஒடித்து, 'ஹாஷ்' என்று கூறி, யாரை அடித்தாலும், அடுத்த வினாடியே, கழுதையாக மாறி விடுவர். மறுபடியும், 'ஆதம்' என்று கூறி அடித்தால், பழைய உருவை அடைவர். மரத்தின் இலைகளைப் பார்வை இழந்தவர் கண்களில் வைத்தால், பார்வை திரும்ப வரும்...' என்று கூறிய பறவை, இணையுடன் பறந்தது.

கடம்பன் உடனடியாக செயலில் இறங்கினான். பறவை சொற்படி, எல்லாம் நடந்தன. நேராக கோட்டை அழகியான, மனைவியிடம் போனான். அவள் கோபத்துடன், 'விரட்டி அடியுங்கள்...' என்று ஆணையிட்டாள்.

அங்கு வந்த குண்டர்களை, மந்திர மரத்தின் குச்சியால் தட்டினான் கடம்பன். அனைவரும் கழுதையாகி குரல் எழுப்பினர். பின், அகம்பாவம் பிடித்த அழகியையும், குச்சியால் அடித்து, 'ஹாஷ்' என்றான்.

கழுதையான அவள் முதுகில், கூடைகளைக் கட்டி, மண்ணை நிரப்பிச் சுமக்க வைத்தான். இருட்டும் வேளையில், லாயத்தில் கட்டி, மக்கிய வைக்கோலை போட்டான். கழுதை வடிவிலிருந்த அழகி, கண்ணீர் வடித்தாள்.

'என் மந்திரப் பொருட்களை அடையும் வரை, உன்னை, கழுதை நிலையிலிருந்து மாற்ற மாட்டேன்...' என்றான், கடம்பன்.

கழுதை கழுத்தில், மந்திரப் பறவையின் கால் தாயத்து தொங்கியதைக் கண்ட கடம்பன், அதைக் கழற்றினான். பின், மனம் இரங்கி, கழுதையை மீண்டும் அழகிய பெண்ணாக்கினான். ஆணவம் அடங்கிய அழகி, அவன் கால்களில் விழுந்து, 'இனி எந்த சூழ்ச்சியும் செய்ய மாட்டேன்; மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று கெஞ்சினாள்.

கடம்பன் அவளை மன்னித்தான். இருவரும் மகிழ்ச்சியாக கோட்டையில் வாழ்ந்தனார்.

ஒரு நாள் -

பக்கத்து நாட்டு துாதுவன் வந்தான். அந்த நாட்டை, கடம்பனின் சகோதரன் வேந்தன் தான் ஆள்வதாக கூறினான். மந்திரப் பறவையின் தலையை வைத்திருந்ததால், அவன் மன்னராகியிருந்தான்.

கடம்பன், மனைவியுடன், வேந்தனின் அரண்மனைக்குச் சென்றான். ஆனந்தக் கண்ணீர் வழிய வரவேற்று உபசரித்தான் வேந்தன்.

'சகோதரனே... இந்த வேளையில், நம் பெற்றோரும் இங்கு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்...' என்றான் கடம்பன்.

பார்வை போன விறகு வெட்டியையும், அவன் மனைவியையும் வீரர்கள் கண்டுபிடித்து, அழைத்து வந்தனர்.

மந்திர இலையை, அவர்கள் கண்களில் கட்டினான் கடம்பன்; இருவருக்கும், பார்வை திரும்பியது. புதல்வர்களை கட்டித் தழுவி அவர்கள் மகிழ்ந்தனர்.

முற்றும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us