/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
வானொலியின் குரல் தாவரங்களின் உயிர்!
/
வானொலியின் குரல் தாவரங்களின் உயிர்!
PUBLISHED ON : ஜன 16, 2021

உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய அறிஞர்களில் ஒருவர் ஜெகதீஷ் சந்திர போஸ். இவரை, ஜெ.சி.போஸ் என்றும் அழைப்பர். இந்தியாவைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி.
அண்டை நாடான வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே, பிர்காம்பூர் கிராமத்தில், நவ., 30, 1858ல் பிறந்தார். அப்போது, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆங்கிலேய அரசில், வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றினார், தந்தை பகவான் சந்தர் போஸ். பின், கலெக்டராக உயர்ந்தார்.
உள்ளூர் பள்ளியில், வங்க மொழியில் கல்வி பயின்றார் ஜெ.சி.போஸ். உயர் கல்விக்கு, கோல்கட்டா சென்றார். ஆங்கிலேய மாணவர்களுடன் விடுதியில் தங்கிப் படித்தார். கிராமத்தை சேர்ந்தவர் என்பதால், கிண்டல், கேலிக்கு உள்ளாகி, மனம் நொந்தார்.
இந்த வலியை, படிப்பாக மாற்றி, முதல் மதிப்பெண் பெற்றார். அப்படியும் கிண்டல் பேச்சு தொடர்ந்தது. குத்துச்சண்டை வீரரான, ஆங்கிலேய மாணவர் மிகவும் கீழ்த்தரமாக கேலி செய்தார். அதைப் பொறுக்க முடியாமல், அவர் மீது பாய்ந்து விளாசி விட்டார். பின், கேலியும் கிண்டலும் நின்றது.
போஸ் வாழ்வில், 1880ல் திருப்புமுனை ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கிறிஸ்து கல்லுாரியில் சேர வாய்ப்பு கிடைத்தது. அங்கு பட்டம் பெற்றார். இயற்பியல் பேராசிரியராக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலே பணி அமர்த்தப்பட்டார்.
தந்தையின் உடல்நலம் குன்றியதால், 1885ல் நாடு திரும்பினார் போஸ். பின், கோல்கட்டா, பிரெசிடென்சி கல்லுாரியில், இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கு, ரேடியோ அலைக்கற்றை பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். வானொலி அலைவரிசையைக் கண்டுபிடித்தார். அந்த கண்டுபிடிப்பை, பரிசு கொடுத்து பாராட்டினார் அப்போதைய வங்காள கவர்னர் அலக்சாண்டர் மெக்கன்லீ.
இங்கிலாந்து, ராயல் கல்வியகத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. பேரறிஞர்கள் கூடியிருந்த அரங்கில், கம்பியில்லாமல் தகவல் கடத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
இந்த கண்டுபிடிப்பு, உலகில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. கப்பல்களில் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கங்களுக்கு மாற்றாக, கோஹரர் என்ற கருவி அறிமுகமாகியது.
ஆனால், வானொலியை கண்டுபிடித்ததாக, 1896ல், ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த மார்கோனிக்கு உரிமம் வழங்கப் பட்டது. இந்த சாதனையை, 1895ம் ஆண்டே நிகழ்த்தி விட்டார் போஸ். இதை அறிந்ததும், உரிமத்தை விட்டுத்தர முன் வந்தார் மார்கோனி; ஏற்க மறுத்துவிட்டார் போஸ்.
கல்லுாரி பேராசிரியர் பணியை துறந்து, சொந்தமாக ஆராய்ச்சி நிறுவனத்தை, 1915ல் துவங்கினார். தாவரவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
இயற்பியல் படித்த போஸ், தாவரவியல் பக்கம் தாவியதற்கு உரிய காரணம் இருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தபோது, தாவரவியல் நிபுணர் வைன்ஸ் என்பவருடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். அவரிடம் பாடங்கற்று தேர்ச்சியடைந்திருந்தார்.
விலங்குகளை போல, தாவரங்களுக்கும் உயிர் உண்டு என, நிரூபிக்க வழி தேடினார் போஸ். தாவர வளர்ச்சியைக் கணக்கிட, 'கிரெஸ்கோ கிராப்' என்ற கருவியை கண்டுபிடித்தார். தாவரம், விலங்குகள் எல்லாம் செல்களால் ஆனவை. அதை அடிப்படையாகக் கொண்டு, தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என நிரூபித்தார்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள ராயல் சங்கம், அவரை உறுப்பினராக ஏற்றது. உலக அறிவியல் மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1900ல் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்று சிறப்பித்தார்.
போஸ், அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களையும் நேசித்தார். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரபீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதையும் இவரது நண்பர்.
கோல்கட்டா, பிரெசிடென்சி கல்லுாரியில், அப்போது ஒரு அநியாயம் நடந்து வந்தது. பேராசிரியர்களாக பணியாற்றிய ஆங்கிலேயர், இந்தியர்களை விட, ஆறு மடங்கு அதிக சம்பளம் பெற்றனர்.
இதை கடுமையாக எதிர்த்தார் போஸ்.
சம்பளமே வாங்காமல், மூன்றாண்டுகள் பணி செய்து கோபத்தைக் காட்டினார். நிலைமை மாறியது. கல்வி தகுதிக்கேற்ற ஊதியம் சமமாக வழங்கப்பட்டது. தாவரங்களுடன் பேசிய விஞ்ஞானி போஸ், நவ., 23, 1937ல் பீகார் மாநில பகுதியில் காலமானார்.
போஸ் சாதனைகளுக்காக, 1928ல் ஒரு பாராட்டு விழா கோல்கட்டாவில் நடந்தது.
அதில், 'எல்லா உயிரினங்களுக்கும் உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; உயிரினங்கள் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகிய பண்புகளைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதனின் பங்கு மகத்தானது. பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்...' என்று பேசினார் போஸ்.
மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கினார் போஸ். கடும் உழைப்பால் பெரும் புகழ் ஈட்டியதன் வாயிலாக, இந்தியாவின் கவுரவத்தை உலகில் மிளிரச் செய்தார்.

