
பந்திபூரில் தாயாருடன் வசித்து வந்தான் பொன்ராசு; படிப்பறிவில்லாதவன். அரசு அதிகாரியிடம் சமையல்காரனாக சேர்ந்தான். கஷ்டப்பட்டு படித்து உயர்ந்திருந்தார் அதிகாரி.
நதியின் மறுகரையில் இருந்தது அவரது பங்களா.
தினமும் நதியைக் கடந்து வந்து சமையல் வேலையை பணிவுடன் செய்தான் பொன்ராசு. வீட்டில் பெரியவர்களிடமும், குழந்தைகளிடமும் அன்பாக பழகி, உணவை பணிவுடன் பரிமாறுவான்.
அங்கு சமையல் வேலை செய்தாலும், அந்த உணவை அவன் சாப்பிடுவதில்லை. வீட்டிற்கு சென்று, தாய் சமைத்த, எளிய உணவையே உண்பான்.
அதிகாரிக்கு, இது தெரிய வர, ''இங்கேயே சாப்பிடப்பா...'' என்றார்.
மறுத்தான் பொன்ராசு.
''எங்கள் வீட்டில் சாப்பிட்டால் ஆசாரம் கெட்டு விடுமோ... நீ சமைப்பதை, நாங்கள் உண்ணவில்லையா...''
''தவறாக கருத வேண்டாம் ஐயா; நான், வெளியில் எங்கும் உண்பதில்லை; என் தாய், அப்படி வளர்த்துள்ளார். அவர் பேச்சை மீறியதில்லை...''
பணிவுடன் கூறினான் பொன்ராசு.
அதிகாரிக்கு கடும் கோபம்.
'கஞ்சிக்கு வழி இல்லையென்றாலும், வரட்டு கவுரவத்திற்கு மட்டும் குறைவில்லை' என, எண்ணி கடுகடுத்தார்.
மறுநாள் -
பொன்ராசுவின் தாயாரை அழைத்து, அரிசியை சுத்தம் செய்து கொடுக்கும்படி கூறினார் அதிகாரி. அதன்படி செய்தார். சாப்பிடும்படி கூறி உபசரித்தார் அதிகாரி.
மூதாட்டி மறுத்துவிட்டார்.
''உங்க மகன் தானே சமைக்கிறான்; சாப்பிட்டால் என்ன...'' என்றார்.
''நாங்க வெளியில் எங்கும் சாப்பிடுவது இல்லை ஐயா; உழைப்பால் கிடைப்பதில் உண்ணுவதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறோம். வேலை செய்கிறோம்; அதற்கான சம்பளத்தை கொடுக்கிறீர்; அதற்கு மேல் உரிமை எடுத்து சாப்பிடுவது நியாயமாகப் படவில்லை...'' என்றார்.
அந்த தாயின் நேர்மை குணமும், நியாயமான கருத்தும், அவரை வியக்கச் செய்தன. இப்படி, ஒரு சமையல்காரரை பெற்றிருப்பது பெருமை என எண்ணினார்.
சம்பளத்துக்கேற்ப பணியாற்றி, லஞ்சம், ஊழல் என பேராசைப்படாமல், நேர்மையாக வாழ உறுதி எடுத்தார்.
செல்லங்களே... உழைப்பில் கிடைப்பதை கொண்டு முறையுடன் வாழ்ந்தால் தான், திட்டமிட்டு முன்னேறலாம்.

