தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வழி பிறந்தது!

வழி பிறந்தது!

வழி பிறந்தது!


PUBLISHED ON : அக் 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பச்சை பசேர் என்று காட்சி தந்தது மங்கலப்புதுார் கிராமம். நல்ல ஏரிப்பாசனம். நெற்பயிர் பரப்பும், நீண்ட ஓடைகளும் நிறைந்தது.

அங்குள்ள சந்தையில் அன்று நல்ல கூட்டம். ஆடு, மாடுகள் கூட விற்பனைக்கு வந்திருந்தன.

சில மாடுகளை ஒரு மரத்தடியில் கட்டியிருந்தனர். வயதான சில மாடுகள், மைதானத்தில் மர நிழல்களில் ஒதுங்கி நின்றன.

அவற்றில் ஒன்று லட்சுமி என்ற மாடு. அது திடீரென, 'ஏய்... எங்கடா வந்த...' என்றது. சற்று துாரத்தில் நின்ற மாடு ராமு, குரல் வந்த திசையை பார்த்தது. வயதாகிவிட்டதால் பார்வை குறைபாட்டால், 'யார் நீ...' என்றது.

'என்ன தெரியல... மணிமங்கலத்தில், சின்ன வயசுல ஒரே தொழுவத்தில் இருந்தோமே...'

'ஓ... தெரியுது... எப்படி இருக்க லட்சுமி... உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு...

'வா... தனியே போய் பேசுவோம்...' என அழைத்து, லட்சுமி அருகே வந்தது.

சற்று தொலைவில், ஒரு மர நிழலில் ஒதுங்கின.

'என்னை விட்டுட்டு செங்கல்பட்டுக்கு போனியே... இப்ப எப்படி இருக்க...' என்றது ராமு.

'என்னத்த சொல்வேன்... எலும்பும் தோலுமா ஆயிட்டத நீ தான் பாக்குறியே...' என்றது லட்சுமி.

'குட்டியா இருந்தப்போ, நீ எவ்வளவு அழகா இருந்தே... கழுத்துல அழகான மணி கட்டி தெருவில நீ துள்ளிக்குதிக்கும் போது, குழந்தைங்க குதுாகலிப்பாங்க... உன்னையே சுத்தி சுத்தி வருவாங்க... அப்படி வாழ்ந்த நீ, இப்படி ஆயிட்டியே...'

'எல்லாம் என்னோட விதி... சரி, நீ எப்படி இருக்க; பார்வை சரியாக தெரியலயா... என்னையே, அடையாளம் கண்டுபிடிக்காம திணறுனியே... நீ வேலை செஞ்ச இடத்தில சவுகரியம் எப்படி...'

'அத ஏன் கேக்குற... நான் வேலை செய்தது, ரயிலிலேயிருந்து லோடு எறக்குற கம்பெனி; அங்க எல்லா பாரத்தையும் நாந்தான் சுமக்கணும்... கட்டை வண்டியில கட்டி இழுத்து இழுத்து என் திமிழ் தேஞ்சது தான் மிச்சம்... எங்க மொதலாளி பேராசைக்காரரு; கடுமையாக வேலை வாங்கினாரே தவிர, நல்ல தீனி போடல. பாதுகாப்பான தொழுவம் கூட கெடையாது; நடைபாதையில தான் படுக்கணும். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு...' என்றது ராமு.

'ஓ... அவ்ளவு கஷ்டமா... கேக்கவே சங்கடமாயிருக்கு... அது சரி இப்ப நீ ஏன், இங்க வந்த...'

'எனக்கென்ன தெரியும்; அந்த மொதலாளி தான், என்னை அடிச்சு, இழுத்து, லாரியில் ஏத்தி கொண்டு வந்திருக்காரு. அடிமாட்டுக்கு விக்க போறது மாதிரி தெரியுது. அதோ பாரு... மொதலாளி, ஏதோ பேரம் பேசற மாதிரி இருக்கு; வயசு ஆயிடுச்சுல்லா; இனி உயிரோட விட மாட்டாங்க...'

'கவலைப்படாதே... ஒரு வழியிருக்கு... இந்த பக்கத்துல ஒரு பெரியவர் இருக்காரு; அவரு, நம்மை மாதிரி, வயசான மாடுகள காப்பாத்தறதுக்கு ஒரு காப்பகம் அமைச்சிருக்காரு... நாம முயற்சி செஞ்சா, அங்க போயி தங்கிக்கலாம்...'

'ஓ... அப்படியா... என்னையும் சேர்த்துப்பாரா...'

'அவரு பெரிய மகான்; கருணை நிறைந்த மனதுடன் தான் இத அமச்சிருக்காரு... நம்மை போல வாயில்லா ஜீவன்களை எல்லாம் காப்பாத்துறாரு... மொதலாளி வரதுக்குள்ள, நாமளும் அங்க போயிடலாம் வா...' என்ற படி நடக்க ஆரம்பித்தது லட்சுமி; ராமுவும் தொடர்ந்தது.

இரண்டும், அந்த கோசாலையில் அடைக்கலம் தேடின.

குழந்தைகளே... விவசாய பணியில் உதவி, பால் தந்து உதவும் கன்று, காளைகள் எல்லாம் நம் செல்வங்கள்... அவற்றை பாதுகாத்து பராமரிப்பது நம் கடமை.

ஆர்.சேஷாத்திரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us