PUBLISHED ON : அக் 25, 2019

அன்பு மெடோஸ்...
உன் வித்தியாசமான பெயர், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
என் வயது, 45; கணவருக்கு வயது, 49; நாங்கள், முதுகலை மருந்தியல் பட்டதாரிகள். சென்னையில் உயிர் காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் வருடாந்திர வரவு செலவு கணக்கு, பல கோடிகளை தாண்டும்.
திருமணமாகி, எட்டு ஆண்டுகளுக்கு பின், மகள் பிறந்தாள். இப்போது, 12 வயது; 7ம் வகுப்பு படிக்கிறாள்; படிப்பில் படுசுட்டி; பழைய நடிகை பானுப்பிரியா மாதிரி இருப்பாள்.
சென்ற மாதம் ஒரு நாள் இரவு, 'வரப்போகிற பிறந்த நாளைக்கு என்ன பரிசு வேண்டும் என கேட்டிருந்தீர்கள். எனக்கு ஒரு பன்றிக்குட்டியை வளர்க்க ஆசை. பிறந்து, 40 நாட்களே ஆன, கறுப்பு பன்றிக் குட்டி தான் வேண்டும்...' என்றாள் மகள்.
'ஏம்மா திடீர்ன்னு பன்றிக்குட்டி வளர்க்க ஆசைப்படுற...' என கேட்டோம்.
'உலகத்திலே எல்லா உயிரினங்களும் சமம் தானே... பன்றிக்குட்டிகளை மட்டும் ஏன் இழிவாக பார்க்கிறீர்கள்... அதற்கும் ஒரு மரியாதையை பெற்றுத்தரப் போகிறேன். என் ஆசையை நிறைவேற்றுங்கள்...' என்றாள்.
'நாய்க்குட்டியோ, பூனைக்குட்டியோ வாங்கி தரோம்...' என்றோம்.
பிடிவாதமாக மறுத்து, தொடர்ந்து அடம் பிடிக்கிறாள்.
மகள் கேட்டபடி, பன்றிக்குட்டி வாங்கி கொடுக்கலாமா... ஒரு நல்ல முடிவை சொல்.
மகளின் விபரீத ஆசையால், பரிதவிக்கும் சகோதரிக்கு...
இதை படித்த பின், மகளிடம் படித்து காட்டு.
பூக்குட்டி... பொதுவாக, வெளிநாட்டினர் தான், ஓணான், மலைப்பாம்பு, ஆந்தை, சிம்பன்சி குரங்கு போன்றவற்றை, வளர்ப்பு பிராணியாக வீட்டில் வளர்ப்பர். அது பிறரின் கவனத்தை கவரவும், தங்கள் தனித்தன்மையைக் காட்டவும்...
பன்றிகள் நரகலைத் தின்று, சாக்கடையில் புரண்டு வாழும். அவற்றால் பல நோய்கள் பரவுகின்றன.
இறைவன் பார்வையில், உயிரினங்கள் எல்லாம் சமம் தான்; மனிதருக்கு அனுசரணையாக இருக்கிறதா அல்லது ஆபத்தாக இருக்கிறதா என்பதை பொறுத்து தான், அதை நேசிக்கவோ, வெறுக்கவோ செய்கிறோம்.
ஒரு நாகப்பாம்பை, நட்புடன் முத்தமிட முடியுமா; ஒரு முதலையை கட்டி அணைத்து கொஞ்சி படுக்கையில் வைத்துக் கொள்ள முடியுமா...
செல்லக்குட்டி... ஊருடன் ஒத்து வாழ வேண்டும் அம்மா. என்ன தான் நீ பன்றிக்குட்டியை சுத்தமாக வளர்த்தாலும், அது அசுத்தத்தை தேடி தான் ஓடும். உன் வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களும், நண்பர்களும் அதை அசூயையாக பார்ப்பர்.
பன்றி மிக வேகமாக வளரும் இயல்பு உடையது; ஆறே மாதத்தில், 150 கிலோ எடை வரை பெருக்கும்.
வளர்ந்த பன்றிக்கு ஜோடி தேடுவாயா... அவ்வாறு ஜோடியாக வளர்த்தால், அடுத்த, ஆறே மாதத்தில், வீடு முழுக்க குட்டிகளாகி நாறும்; அவை, 'பர்க்... பர்க்...' என, நாரசமாய் சப்தமிட்டு சூழலைக் கெடுக்கும்.
நாய், பூனை வளர்ப்பதால், அவற்றின் ரோமம் உதிர்ந்து ஒவ்வாமை ஏற்படும். வளர்ப்பு பிராணி வைத்திருந்தால், ஆண்டு முழுக்க கவனித்து பராமரிக்க வேண்டும். வெளியூருக்கு சென்றால், கவனிக்க தகுந்த வேலையாளை நியமிப்பது அவசியம்.
எனவே, பன்றிக்குட்டி வளர்க்கும் ஆசையை விட்டு, படிப்பில் கவனம் செலுத்து... வளர்ப்பு பிராணிகளுக்கு மரியாதையை ஏற்படுத்துவது பற்றி, பின்னர் சிந்திக்கலாம். அதற்கு முன், சக மனிதர்கள் மீது அன்பு செலுத்த கற்றுக்கொள்.
ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றி பார்த்து, பிராணி வளர்க்கும் ஆசையை தணித்துக் கொள்.
ஒரு விஷயத்தை செய்யும் போது, உன் சவுகரியத்தை மட்டும் பார்க்காதே; பெற்றோரின் சவுகரியங்களையும் எண்ணிப் பார் கண்மணி.
கண்டிப்பாக, ஒரு உயிரினத்தை வளர்க்க வேண்டும் என்றால், தங்க மீன்களை, கண்ணாடி தொட்டியில் பராமரிக்கலாம்.
தங்கமே... உன் பிறந்த நாளைக்கு தாமதமான வாழ்த்துகள்!
- அன்புடன், மெடோஸ்
