sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மானின் மதிநுட்பம்

/

மானின் மதிநுட்பம்

மானின் மதிநுட்பம்

மானின் மதிநுட்பம்


PUBLISHED ON : நவ 28, 2020

Google News

PUBLISHED ON : நவ 28, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றுகள் நிறைந்த அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது ஓநாய்; காட்டில், ராஜா என எதுவும் இல்லை. எனவே ஓநாயை கண்டால், எல்லா மிருகங்களும் அஞ்சி நடுங்கின. பல விலங்குகள் அதற்கு இரையாகின.

அந்த காட்டுக்கு புதிதாக ஒரு மான் வந்தது. அதன் கொம்புகளும், உருவமும் அச்சத்தை ஏற்படுத்தியது. புல் மேயும் மிருகம் என்பதால், மானின் கம்பீரத்தை கண்டு மகிழ்ந்தன விலங்குகள். அதை துணையாகக் கொண்டு, ஓநாயை விரட்ட முடிவு செய்தன.

ஓநாய் செய்யும் அட்டகாசத்தையும், அதை வெற்றி கொள்வதில் உள்ள சிரமத்தையும் மானிடம் விளக்கின; உரிய நடவடிக்கை எடுக்க கோரின.

ஓநாயை அடிமையாக்கி, பயமின்றி வாழ வழி செய்வதாக உறுதியளித்தது மான்.

பின், ஓநாய் இருக்கும் இடம் தேடிச் சென்றது.

துாரத்தில், படர்ந்த கொம்புள்ள விலங்கு வருவதைப் பார்த்ததும் சற்று நடுங்கியது ஓநாய். அதற்கு அச்சம் ஏற்பட்டது. அருகில் வந்ததும் மான் என்பதை அறிந்து, பயம் தெளிந்தது. நல்ல வேட்டை கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தது.

ஓநாயை நெருங்கியதும், நடுங்கத் துவங்கியது மான்.

அதை, வெளியே காட்டாமல், ''காட்டில் விலங்குகளை எல்லாம் பயமுறுத்துவது நீ தானா...'' என அலட்சிய குரலில் கேட்டது.

கோபமுடன், ''என்னிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் எப்படி வந்தது. அலட்சியமாக வேறு பேசுகிறாய்... கேவலம் நீ ஒரு மான்... என்னுடன் சண்டையிட்டு உயிரை விடாதே... ஓடி பிழைத்து போ... பலசாலிகளோடு போட்டி, போட்டு தான் எனக்கு பழக்கம்; நீயெல்லாம் துாசு...'' என்றது ஓநாய்.

அலட்சிய வார்த்தை கேட்டு மோதலுக்கு தயாரானது மான்.

பயங்கர மோதல் துவங்கியது. சற்று நேரத்தில் இரண்டும் களைப்பு அடைந்தன. வெற்றி, தோல்வி இன்றி முடிந்தது முதல் மோதல்.

ஓநாயை வெற்றி கொள்வது கடினம் என உணர்ந்தது மான். எனவே, தந்திரத்தால் வீழ்த்த முடிவு செய்து, ''உண்மையிலே நீ பலசாலிதான்; உன்னுடன் மோத எண்ணியது தப்புதான்; என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்...'' என்றது.

ஓநாய்க்கு பெருமை தாங்கவில்லை.

சண்டையை வேடிக்கை பார்த்த விலங்குகளுக்கு பெரும் ஏமாற்றம்.

திடீர் என, ''தோற்றதால் உங்களுக்கு இரையாக போகிறேன்; என் கடைசி ஆசை ஒன்று உள்ளது; அதை நிறைவேற்றுவீரா தலைவரே...'' என்றது மான்.

ஆணவத்தின் உச்சியில் நின்ற ஓநாய், ''நிறைவேற்றுகிறேன்... உன் ஆசையை கூறு...'' என்றது.

''குட்டியாக இருந்த போது, தாய், தந்தையுடன் இந்த காட்டிற்கு வந்தேன்; அப்போது, அதோ... தெரிகிறதே அந்த மலை உச்சியில் புல் மேய்ந்தோம்; திடீரென்று, தாய், கால் வழுக்கி விழுந்து விட, காப்பற்ற சென்ற, தந்தையும் இறந்து விட்டார். அவர்கள், உயிர் பிரிந்த இடத்திற்கு என்னை கூட்டி செல்... அங்கு தான் உயிர் விட விரும்புகிறேன்...'' என்றது.

''ப்பூ... இவ்வளவு தானே... வா...'' என, மலை உச்சிக்கு அழைத்து சென்றது ஓநாய்.

உச்சியிலிருந்து, ''ஆஹா அதோ என் தாய், தந்தை ஆவிகள்... என்னை வரவேற்க காத்திருக்கின்றன...'' என கதை விட்டது, மான்.

''எங்கே... பார்க்கலாமா...'' என கேட்டபடி மலைமுகட்டின் விளிம்புக்கு வந்து, பள்ளத்தை எட்டி பார்த்தது ஓநாய்.

இதுதான் சரியான நேரம் என பலத்தை திரட்டியது மான். கொம்புகளால் வேகமாக முட்டி மோதியது. நிலை தடுமாறி, பாதாளத்தில் சாய்ந்தது ஓநாய்.

விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியில் குதித்தன.

அப்புறம் என்ன... சந்தோஷத்தில் ஆட்டமும், பாட்டும் களைகட்டியது.

செல்லங்களே... உருவத்தைக் கண்டு பயப்படாமல், எந்த சூழ்நிலையிலும், சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம்.



- வி. கற்பகவல்லி







      Dinamalar
      Follow us