PUBLISHED ON : ஜூன் 27, 2020

காட்டில், குட்டி முயல் ஒன்று தத்தி தத்தி சென்று கொண்டிருந்தது. தாவிக் குதித்து பசும் புல்லைத் தேடியது. அப்போது, 'உதவி... உதவி... என்னைக் காப்பாற்றுங்களேன்...' என்ற பரிதாப குரல் கேட்டது.
இரக்க சுபாவமுள்ள முயல் நின்று நிதானித்தது. குரல் வரும் திசையை நோக்கி, 'யார் வேதனைக் குரல் எழுப்புறது... இதோ வருகிறேன்...' என்றபடி ஓடியது.
புதரின் அருகே கண்ட காட்சியால், திடுக்கிட்டது முயல்; பெரிய பாறையின் அடியில் சிக்கி திணறி, முனகிக் கொண்டிருந்தது, ஓநாய்.
முயலைக் கண்டதும், 'காப்பாத்து... என் மேலிருக்கும் பாறையை நகர்ந்தேன்... மூச்சு விட முடியவில்லை...' என, திக்கித் திணறியது ஓநாய்.
அதைப் பார்க்க, பரிதாபமாக இருந்தது. துஷ்டப் பயலான ஓநாய்க்கு உதவ முயன்றது குட்டி முயல்; பாறையை நகர்த்தும் பணியில் முழு மூச்சுடன் முயன்றது.
அப்போது-
காதைப் பிடித்து, யாரோ துாக்குவதை உணர்ந்தது; கலவரத்துடன் கண்ணை திறந்த போது, பாறையின் அடியில், மூச்சு திணற அவஸ்தைப் பட்டு மீண்ட ஓநாயின் கையில் இருப்பதை கண்டது.
ஏளனமாக சிரித்தபடி, 'உன்னை, உணவாக்கி கொள்ளப் போகிறேன்...' என, நாக்கைச் சப்புக் கொட்டியது ஓநாய்.
நடுங்கியபடி கண்ணீருடன், 'தயவுசெய்து, என்னை சாப்பிட்டு விடாதே... உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினேனே... அதற்கு இதுவா கைமாறு...' என, குழறியது குட்டி முயல்.
'இந்த நியாயமெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை; பசிக்கும் போது, கிடைப்பதை தின்பது தான் என் பண்பாடு; தெரிந்ததா...' என்றது, கெட்ட புத்தி ஓநாய்.
'தயவுசெய்து அந்த குட்டையில் வசிக்கும் வாத்திடம் கேட்டுப் பார். உதவிய என்னையே, உன் பசிக்கு இறையாக்குவது நியாயமா என கேட்போம். அது சொல்லும் தீர்ப்பை கேள்...'
அதிசயமாக, அதற்கு உடன் பட்ட ஓநாய், 'சரி... சரி... வா... சீக்கிரம் முடிக்கணும்; எனக்கு நல்ல பசியாயிருக்கு...' என்று கூறியபடி, குட்டையில் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்த வாத்திடம் போனது.
விவகாரத்தை கேட்டதும், 'நீங்கள் இருவரும் கூறுவது எதுவும் புரியவில்லை... ஓநாயை, எந்த சூழ்நிலையில் நீ பார்த்தாய்...' என்றது வாத்து.
'உதவி கேட்டு குரல் கேட்டது. அப்போது ஓநாய் தரையில் கிடக்க, அதன் மேல் பெரிய பாறை விழுந்து, அழுத்திக் கொண்டிருந்தது...'
முயல், திக்கி திணறி விவரிப்பதைக் கேட்க, பொறுமை இல்லாத ஓநாய், 'இந்தா வாத்தம்மா! உன் வக்கணையெல்லாம் வேண்டாம். சட்டுப்புட்டுன்னு தீர்ப்பைக் கூறு. இல்லாட்டி, உன்னையும் விழுங்கி ஏப்பம் விட்டுடுவேன்...' என சிடுசிடுத்தது.
ஓநாயின் பேச்சை லட்சியம் செய்யாத வாத்து, 'இவ்வளவு பெரிய பாறையா... இதை, நீ புரட்டி, ஓநாயைக் காப்பாத்தினாயா... என்ன கதை இது! நான் நம்ப மாட்டேன். உன்னாலே இவ்வளவு பளுவான பாறையை நகர்த்தி இருக்கவே முடியாது. நகர்த்தியிருந்தால், என் கண்ணாலே பார்த்தால் தான், நம்புவேன்...' என்று கறாராக கூறியது.
ஓநாய்க்கு மகிழ்ச்சி. 'முயலின் பேச்சை வாத்து நம்பவில்லை' என எண்ணியது. எனவே வாத்தின் பேச்சுக்கு மறுப்புச் சொல்லாத ஒநாய், மறுபடியும் அந்த பாறை அருகே படுத்தது.
'எங்கே... இப்போ அந்த கல்லைப் புரட்டி, ஓநாய் மாமாவின் முதுகின் மீது நகர்த்து பார்க்கலாம்; உன்னால் செய்ய முடிந்தால், உதவியதை நம்புகிறேன்...' என்றது வாத்து.
முயலை சுவைத்து சாப்பிட கற்பனை செய்தபடி, கண் மூடி படுத்துக் கிடந்தது ஓநாய்.
உயிர் ஆசை உந்தி தள்ள, பலத்தை எல்லாம் திரட்டி, பாறையைப் புரட்டி, ஓநாயின் மீது ஏற்றியது, கெட்டிக்கார குட்டி முயல்.
'அப்பாடா... வேலை முடிந்தது...' என பெருமூச்சு விட்டது.
பாறை அழுத்த மூச்சு விட முடியாமல் திணறிய ஓநாய், 'என்னது... மறுபடியும் பாறை என் மீதா... அதை உருட்டி அப்பால் தள்ளு முயலே...' என, கெஞ்சியது.
மிக நிதானமாக, 'அவசரப்படாதே ஓநாய் மாமா... உன் நிலை கண்டு இரக்கப்பட்டு, உதவிய முயலை, கொன்று தின்ன ஆசைப்பட்டாயே... அது அநியாயம்; இனி இப்படியே கிட... யாராவது உதவிக்கு வந்தால், அவர்களிடமும் உன் நன்றிக் கெட்ட தனத்தைக் காட்டாதே...' என்றது.
வாத்தின் சமயோசித உதவியால் நெகிழ்ந்த குட்டி முயல், 'நன்றி...' என்று கண்ணீர் மல்கியது.
'தம்பி... இரக்கத்துடன் உதவி செய்வது நல்ல பண்பு தான். ஆனால் யாருக்கு உதவலாம் என யோசித்து செயல்பட வேண்டும்; தெரிந்ததா... ஓடு... ஓடு...' என, விரட்டியது வாத்து.
'தப்பினேன்... பிழைத்தேன்' என, தாவி குதித்து ஓடியது குட்டி முயல். பரிதாபமாக ஓலமிட்டது ஓநாய்; நீரைக் கிழித்தபடி எதிர்க்கரை நோக்கி நீந்தியது வாத்து.
அன்பு பூக்களே... எப்போதும் சமயோசிதமாக செயல்பட பழகுங்கள்.
- வாண்டுமாமா
