PUBLISHED ON : ஆக 23, 2019

கல்லுப்பட்டி என்ற கிராமத்தில், வாழ்ந்து வந்தான் விவசாயி சரவணன். மழை பொய்த்ததால், கடும் பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்கு வழியின்றி, மக்கள் தவித்தனர். கருவேல மரங்களை வெட்டி விற்று பிழைத்தனர் ஊர் மக்கள். காட்டு மிருகங்கள் உணவுக்காக ஊருக்குள் வந்தன.
மரம் வெட்டுவதில், பக்கத்து கிராமத்தவருடன் தகராறு ஏற்பட்டது. அது கலவரமாக மாறி, காயமடைந்து இறந்தான் சரவணன்.
அவனது மகன் கணேசனுக்கு அப்போது, வயது, 10. அவனை வளர்க்க முடியாமல், மிகவும் கஷ்டப் பட்டாள் அம்மா. கடும் சிரமங்களுடன் பள்ளிக்கு அனுப்பினாள். சிறு தொழில்களும் அவன் கற்றுக் கொண்டான்.
ஆண்டுகள் பல கடந்தன -
வாலிப பருவத்தை அடைந்த கணேசன், 'காட்டில், விறகு வெட்டி வர்றேன்...' என்றான்.
'பக்கத்து ஊரைத் தாண்டி தானே காட்டுக்கு போகணும்...' என்று பயத்துடன் கேட்டாள் அம்மா.
'ஆம் அம்மா... ஏன், பயப்படுறீங்க...'
'அந்த ஊர்காரங்க நமக்கு எதிரிகள் ஆயிற்றே... கவனமா போ... யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்ளாதே... வீண் வம்பு ஏற்படும்...'
'சரி... கவனமா இருப்பேன்; மாட்டு வண்டியில் தான் செல்கிறேன்; திரும்பி வர, இரண்டு நாட்கள் ஆகும்...'
அம்மாவிடம், விடைபெற்று புறப்பட்டான் கணேசன்.
பக்கத்து ஊர் காடு அருகே, ஒரு குளம் இருந்தது. அதன் அருகே ஒரு மரத்தில் ஏறி வெட்டினான். களைப்படைந்தவன், கையை நன்றாக சுத்தம் செய்து, சாப்பிட அமர்ந்தான். குளக்கரை புதரில் ஏதோ அசைவது தெரிந்தது. உற்றுப்பார்த்தான். புலி ஒன்று பதுங்கியிருந்தது.
உடனே, அந்த ஊருக்குள் சென்று, குளக்கரையில் புலி நடமாடுவதை ஊர் பெரியவர்களிடம் எடுத்து கூறி எச்சரித்தான்.
அப்போது ஒருவன் கிண்டலாக, 'புலியை பார்த்தாயா... பூனையை பார்த்தாயோ என்னவோ... புலிக்கு வால் இருந்ததா...' என, கேட்டான்.
மற்றொரு வாலிபன், 'டேய்... இவன் நம்ம எதிரி ஊரை சேர்ந்தவன்; ஏதோ வம்பு செய்யுறதுக்காக வந்துருக்கான்; இவன் சொல்லுறத நம்பாதீங்க...' என்றான்.
அவர்களின் ஏளன வார்த்தைகளை பொறுமையுடன் கேட்ட கணேசன், 'உள்நோக்கம் எதுவும் இல்லை; புலி நடமாடுவது குறித்து எச்சரிக்கத்தான் வந்தேன்... அப்புறம் உங்க விருப்பம்; ஆனாலும், ஜாக்கிரதையா இருங்க...' என்று நிதானமாக கூறி, புறப்பட்டான்.
அவன் பேச்சை அலட்சியப்படுத்திய வாலிபர்கள், குளத்துக்கு சென்றனர். அங்கிருந்த புலி உறுமி விரட்டியது; தப்பித்தோம் பிழைத்தோம் என்று பதட்டத்துடன் ஓடினர்.
புலி பயம், ஊரில் பரவியது. கிராமமக்கள் விரட்ட வழி தெரியாமல் அஞ்சி நடுங்கினர். கணேசனை சந்தித்து, அவன் தந்த தகவலை அலட்சியப் படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டனர்.
அவர்களை நட்புடன் வரவேற்ற கணேசன், 'இரண்டு ஊர்களுக்கும் பகைமை இருந்ததால், நான் சொன்ன உண்மையை, நீங்கள் நம்பவில்லை... புலியால் வரும் ஆபத்தை விட, பகையால் ஏற்பட்ட விளைவு, எவ்வளவு மோசமானது பார்த்தீர்களா...' என்றான்.
அதை ஆமோதித்த மக்கள், புலியை விரட்டுவது பற்றி ஆலோசித்தனர்.
'புலி நடமாடுவது குறித்து, வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும். அதைப்பிடித்து, அடர்ந்த காட்டில் விடுவர். அதுதான் நமக்கு பாதுகாப்பு...' என்ற கணேசனின் அறிவுரையை ஏற்று, அதன்படி நடந்தனர். பகைமையை மறைந்து, நட்புடன் வாழ்ந்தனர்.
குட்டீஸ்... ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழந்தமிழ் புலவர் அவ்வையாரின் அமுதமொழி. இதை மனதில் கொண்டு பகைமையற்ற உலகை படைப்போம்; நட்புடன் வாழ பழகுவோம்.
