PUBLISHED ON : ஆக 23, 2019

அமெரிக்காவுக்கு கடல் வழி கண்டு பிடித்ததும், ஐரோப்பிய நாடுகளில் புதிய எழுச்சி ஏற்பட்டது. புதிய நிலப்பரப்புகளை தேடியவர்கள், கடல் வழிகளை பயன்படுத்தினர். ஆப்பிரிக்காவைச் சுற்றி, ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா, சீனாவில் வியாபாரம் செய்துவந்த வணிகர்கள், கடலில் மாற்று வழி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியில், முழு மூச்சாக ஈடுபட்ட ஒரு மாலுமி, ஐரோப்பாவின் வட பகுதி கடலில், சீனாவுக்கு வழி தேடினார்; நான்கு முறை முயன்று, கடலிலேயே மறைந்தார். அவர் பெயர், ஹென்றி ஹட்ஸன்; ஐரோப்பா கண்டம், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
இங்கிலாந்து கடல் வாணிபக் கழகமான, மஸ்கோவி என்ற நிறுவனம், ஆசியா கண்டத்தில் சீனா, கிழக்கிந்திய தீவுகளுக்கு செல்ல, ரஷ்யாவின் வட பகுதி வழியே, புதிய கடல் மார்க்கத்தைக் கண்டறிய முயன்றது. அந்த பொறுப்பு, மாலுமி ஹென்றி ஹட்ஸனிடம் தரப்பட்டது.
அந்த காலத்தில், ஐரோப்பிய மாலுமிகளான மெகல்லன், டிரேக் ஆகியோரின் பயணங்கள், கடல் வழியாக உலகைச் சுற்றி வர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன.
ஐரோப்பாவில் ஸ்பெயின் நாடு, மத்திய, தென் அமெரிக்க பகுதிகளில், காலனிகளை உருவாக்கி வந்தது.
வட அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் சதுப்புநிலப்பகுதியை கடந்தால், சீனாவை அடையாலம் என்று, மாலுமிகள் நம்பினர். அதன்படி திட்டம் வகுத்து, 1607ல் கடல் பயணம் மேற்கொண்டார் ஹட்ஸன்.
உறைந்த கடலும், பனிப்பாளங்களும், அவரை திணற வைத்தன. தாங்க முடியாத குளிர், அவரது நம்பிக்கையை தகர்த்தது. அவரது குழுவினர், பயணத்தைக் கைவிட வலியுறுத்தினர்.
வேறு வழியின்றி, பயணத்தை நிறுத்தி ஐரோப்பா திரும்பினார். பயண வழியில் கண்டுபிடித்த தீவுகளைப் பற்றி, வியக்க வைக்கும் தகவல்களை விவரித்தார். அவர் பயணம் செய்த கடல் பகுதியில், திமிங்கலங்கள் அதிகம் இருந்ததை விவரித்தார்.
அவரது தகவல் அடிப்படையில், மஸ்கோவி நிறுவனம், உறைபனி பகுதியில் திமிங்கல வேட்டை நடத்தி, ஏராளமாக பணம் சம்பாதித்தது.
ஓராண்டுக்குப் பின், அடுத்த பயணத்தை மேற்கொண்டார் ஹட்ஸன். இந்த பணயம், ஐரோப்பா கண்டத்தின் வடக்குப் பகுதியைச் சுற்றி போவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பனி பாறைகள், கப்பலின் போக்கை தடுத்து, திணற வைத்தன. கப்பல் பணியாளர்கள் சோர்வுற்று, பாதையை மாற்றக் கோரினர். வேறுவழியின்றி, வட அமெரிக்காவின் மையப்பகுதியை நோக்கிக் கப்பலை செலுத்தினார், ஹட்ஸன்.
அப்போது, கடும் புயல் வீசி, அலைக்கழித்தது. வேறு வழியின்றி, பயணத்தை கை விட்டு, தாயகம் திரும்பினார். முயற்சிகள் தோல்வி அடையவே, பயணத்துக்கு பொருளுதவி செய்வதை, மஸ்கோவி நிறுவனம் நிறுத்தியது.
முயற்சியை கைவிடவில்லை ஹட்ஸன். ஒரு டச்சு வியாபார நிறுவனத்தை அணுகி, பயணத் திட்டத்தை விவரித்தார். அந்த நிறுவன உதவியுடன், 'ஹாப்மூன்' என்ற கப்பலில், 1609ல், மூன்றாவது பயணத்தை துவக்கினார்.
உறைபனியில் கப்பல் சிக்கியதால், அவரது பயண திட்டம் ஆட்டம் கண்டது. பாதையை மாற்றி அமெரிக்காவின் நடுப்பகுதிக்கு சென்ற போது, கப்பல் உடைந்தது; வேறு வழியின்றி, விரிகுடா பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தினார். காட்டில் மரங்களை வெட்டி, உடைந்த கப்பலை சரி செய்தனர் பணியாளர்கள்.
அப்போது, அமெரிக்க பூர்வீக குடிகளான செவ்விந்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. செவ்விந்திய வீரன் விட்ட அம்பு, ஹட்ஸன் குழுவில், ஒருவர் உயிரைப் பறித்தது. உடனே அங்கிருந்து தப்பி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் துறைமுகத்துக்கு வந்தது கப்பல்.
சீனாவுக்கான வடமேற்கு கடல் வழி அதுதான் என, நம்பினார் ஹட்ஸன். தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் மகாண இன்றைய தலைநகர் வரை சென்றார். திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல், பயணம் தோல்வி அடைந்ததால், இங்கிலாந்து திரும்பினார்.
டச்சு வியாபாரிகள், நியூயார்க் நகரை உருவாக்கவும், தோல் வியாபார கேந்திரங்களை ஏற்படுத்தவும், இந்த பயணம் வழி வகுத்தது.
இங்கிலாந்து அரசு, ஹட்ஸனை கைது செய்து, கப்பலை கைப்பற்றியது. அவர், இங்கிலாந்து நாட்டுக்கு மட்டுமே பணி செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது.
நம்பிக்கை இழக்காத ஹட்ஸன், வடமேற்கில் கடல்வழி காண, 'டிஸ்கவரி' என்ற கப்பலில், அமெரிக்காவின் கிழக்கு கரை நோக்கி சென்றார். ஒரு விரிகுடாவை அடைந்தார். அது, அவர் பெயராலேயே, 'ஹட்ஸன் விரிகுடா' என, அழைக்கப்படுகிறது.
வரைபடமோ, வழிகாட்டும் கருவியோ இல்லாத காலத்தில் புது வழி காண கிளம்பிய ஹட்ஸன், திக்குத் திசை தெரியாமல், அந்த விரிகுடாவிலேயே சுற்றி அலைந்தார். மிகவும் சோர்வடைந்த கப்பல் பணியாளர்கள், கலகம் செய்தனர்.
ஹட்ஸன் உட்பட, ஒன்பது பேரை, ஒரு படகில் ஏற்றிய கலகக்காரர்கள், கடலில் தனியாக விட்டு திரும்பி சென்றனர். தத்தளித்த அந்த படகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
கலகக்காரர்களில், மூன்று பேர் மட்டும், தாயகம் திரும்பினர். அவர்களை, இங்கிலாந்து அரசு சிறையிலடைத்தது.
மாலுமி ஹட்ஸன், நிலப்பரப்புகளை கண்டுபிடித்திருந்தாலும், கடல் பயணங்களில் தோல்வி கண்டவராகவே, வரலாறு மதிப்பிடுகிறது.
- வாண்டுமாமா
