தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பரிகாரம் தேடி!

பரிகாரம் தேடி!

பரிகாரம் தேடி!


PUBLISHED ON : ஆக 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியாழ நாட்டு மன்னர் அறிவழகர்; கவர்ச்சியான தோற்றமும், நற்குணமும் கொண்டவர். மக்கள் மகிழ்ச்சியை லட்சியமாக கொண்டு ஆட்சி செய்துவந்தார்.

அவரது ஒரே மகன் பரதன்; அவன் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருந்தான். பிள்ளைப் பாசம் யாரை விட்டது.

ஒரே மகன் என்பதால், நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்த மன்னர், 'ஆண்டவன் தான், திருத்த வேண்டும்' என்று, மனம் உருக வேண்டிவந்தார்.

பரதனின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் அவனை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினர். ஒற்றன் மூலம் இதை அறிந்து, மனம் வெதும்பி, செய்வதறியாது திகைத்தார் மன்னர்.

ஒரு நாள் -

வேட்டையாட, வீரர்களுடன் காட்டுக்கு சென்றான் பரதன்; அப்போது, தனியே பிரிந்து விட்டான். வழி தெரியாமல் தவித்து அலைந்த போது, ஒரு ஆசிரமத்தை கண்டான்.

அங்கு, யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார் சாது. அவர் கையில் இருந்த தண்டத்தைத் தட்டி விட்டான் பரதன். திடுக்கிட்டு விழித்தவர், கடுங்கோபம் கொண்டார்.

'ஏ துஷ்டா... இதுவரை செய்த அக்கிரமங்களுக்கும், என்னை அவமதித்ததற்கும் தண்டனையாக அவலட்சணமாக மாறி, எல்லா துன்பங்களையும் அனுபவிப்பாய்...' என்று சாபமிட்டார்.

அடுத்த நிமிடம், அருவருக்கத்தக்க உருவத்தை அடைந்த பரதன், சாதுவின் காலில் விழுந்து கெஞ்சி, 'மன்னிக்க வேண்டும்' என்று கதறினான்.

அவன் வேண்டுகோளை நிராகரிக்க இயலாமல், 'உன் பழைய உருவத்தை பெற, ஒரே வழி தான் உள்ளது. அதாவது, கங்கை, யமுனை, சரஸ்வதி, என்ற நதி தேவதைகள், தினமும், காசி மாநகரில் உள்ள புண்ணிய குளத்தில் நீராட வருவர். அவர்கள் நீராடிய பின், அக்குளத்தில் குதித்தால், சுயரூபத்தை அடைவாய்; தேவதைகளின் ஆசியும் கிட்டும்...' என்றார்.

சாதுவை வணங்கி விடைபெற்றான் பரதன்.

'தந்தையை சந்தித்து, விஷயத்தை கூறலாம்' என்று, நாட்டுக்கு புறப்பட்டான். அரண்மனையை நெருங்கியதும், 'சூனியக்காரன் வந்து விட்டான்' என்று, அவனை கல்லால் அடித்தனர் மக்கள்.

'இளவரசன் தான் இந்த ரூபமாகி விட்டேன்' என்று அவன் கூறியதை நம்பாமல், மேலும் தாக்கினர்.

பிழைத்தால் போதும் என்று, காட்டை நோக்கி ஓடினான். சாதுவை சந்தித்து, தனக்கு ஏற்பட்ட இன்னல்களை கூறி, உதவி கேட்டு கதறினான். அமைதியாக இருந்தார் சாது.

பரதன் செய்த பாவங்கள் எல்லாம் அவன் கண் முன் வந்தன; தீயசெயல்களால் வந்த விளைவுகளை எண்ணி அழுதபடியே காசிக்கு நடந்தான்.

பல நாட்கள் அலைந்தான். நதி தேவதைகள் நீராடும் குளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மனமுருகி சாதுவை வேண்டியபடி, ஒரு குளக்கரை மரத்தடியில் படுத்து நன்றாக துாங்கிவிட்டான்.

அப்போது, சலங்கை ஒலி கேட்டது. திடுக்கிட்டு எழுந்தவன், ஒலி வந்த திக்கை நோக்கினான். சாது கூறியபடி, குளத்தில் நீராடி கரையேறும் தேவதைகளை கண்டான். மறுகணம், அக்குளத்தில் குதித்தான்.

என்ன ஆச்சரியம்... மீண்டும் சுயரூபத்தை அடைந்தான் பரதன். நதி தேவதைகளின் ஆசியும் கிடைத்தன. மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, ஆசிரமத்தில் சாதுவை வணங்கி ஆசி பெற்றான். பின், அவரையும் அழைத்து நாடு திரும்பினான். மகன், ஒரு சாதுவுடன் வந்துள்ளது கண்டு, இன்ப அதிர்ச்சி அடைந்தார் மன்னர்.

'மக்கள் போற்றும்படி உன் மகன் ஆட்சி செய்வான்...' என்று ஆசி வழங்கினார் சாது. மகிழ்ச்சி அடைந்த மன்னர், பரதனுக்கு முடி சூட்டினார். பின் துறவு பூண விரும்பி, சாதுவுடன் புறப்பட்டார்.

தந்தை வழியில், நல்லாட்சி செய்தான் பரதன்.

குட்டீஸ்... தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. தவறுகளை எண்ணி மனம் வருந்தி திருந்தினால், வாழ்வில் வளம் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us