
திருப்பத்துார் மாவட்டம், ஆதியூர் கிராம பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், 1968ல், 7ம் வகுப்பு படித்தேன்.
வகுப்பு ஆசிரியை சவுந்தரவல்லி கனிவாக பாடம் நடத்துவார். மாணவ, மாணவியருக்கு புத்துணர்ச்சி தரும் வகையில், ஆம்பூர் சர்க்கரை ஆலைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். கரும்பிலிருந்து சாறு பிழிந்து சர்க்கரை தயாராகும் விதத்தை விளக்கினார்.
இயந்திரத்தில் இருந்து மாவு போல, சர்க்கரைக் கொட்டிக் கொண்டிருந்தது. உடன்படித்த முத்து, எடுத்து வந்திருந்த மஞ்சள் பையில், சிறிது சர்க்கரையை நிரப்பினான். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தான்.
இதை எப்படியோ கண்டுபிடித்து விட்டார் ஆசிரியை. அவனை அழைத்து, அன்புடன் கண்டித்து, சர்க்கரையை திரும்ப ஒப்படைத்தார்.
ஆலையை சுற்றிப் பார்த்து திரும்பினோம். பிரதான வாயிலில் மாணவர்களை நன்றாக சோதித்த பின்னரே வெளியே அனுப்பினர் காவலர்கள்.
நண்பன் மறைத்திருந்த சர்க்கரையை திருப்பிக் கொடுக்காதிருந்தால், அவனுக்கு மட்டுமல்ல, பள்ளியின் மானமும் சேர்ந்தே போயிருக்கும்.
ஆலையை விட்டு கிளம்பிய போது, சிறிது சர்க்கரையை சொந்த பணத்தில் வாங்கி, நண்பனிடம் தந்து திருப்தி படுத்தினார் ஆசிரியை.
தற்போது, என் வயது, 65; அந்த ஆசிரியை வழி காட்டியபடி, எந்த இடத்திலும் அனுமதியின்றி யார் உடமையையும் தொடுவதில்லை. இந்த பண்பை, தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.
- டி.கே.சுகுமார், கோவை.
தொடர்புக்கு: 0422 - 2250682

