தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திக்... திக்... பங்களா! (13)

திக்... திக்... பங்களா! (13)

திக்... திக்... பங்களா! (13)


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும் மர்மங்களை கண்டு துப்பறிய முயன்றனர். வண்டிக்காரன் சுப்பையனை பின் தொடர்ந்து சுடுகாட்டுக்கு சென்ற வினுவின் முன், நாகப்பாம்பு சீறியபடி எழுந்தது. இனி -

வினு முன் சீறி நின்ற நாக பாம்பின் தலையை பிடித்து துாக்கி ஏறிந்தது ஒரு கை. அண்ணந்து பார்த்தான். கொளஞ்சி நின்றிருந்தார். முகத்தில் மந்தகாசப் புன்னகை; ஏதோ பேச வாயெடுத்தான்.

ஆடி முடித்திருந்த சுப்பையனை சுட்டி, 'எதுவும் பேசாதே' என சமிக்ஞை செய்தார். தோண்டியிருந்த கல்லறையை மூடி, பூஜை சாமான்களை பெட்டியில் பூட்டி, வண்டியில் ஏறி பறந்து மறைந்தான் சுப்பையன்.

'ஐயா கொளஞ்சி...'

'என்ன...'

'உங்க கிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு...'

'வெளியில போவோம்...'

சாலையில் ஆளரவம் இல்லை. ஒரு மாதிரி குதித்து குதித்து நடந்தார் கொளஞ்சி. அவரைப் பற்றி, கொள்ளு தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது.

'என்ன கேட்க வேண்டும்...'

'உங்க முழுப்பெயர்...'

'கொளஞ்சி நாதன்...'

'உங்க சொந்த ஊர் எது...'

'குற்றாலமே தான்...'

'திருமணம் ஆகியிருந்ததா...'

'இறக்கும் வரை பிரம்மச்சாரியாகவே இருந்தேன் வினு...'

'வயது என்ன...'

'இறந்தபின் வயது எண்ணும் வேலை இல்லை...'

'எங்களை எப்படி தெரியும்...'

'தெரியும்... அவ்வளவு தான்...'

'எங்களை பார்க்கும் போதெல்லாம், சென்னைக்கு திரும்பிடுங்கன்னு எச்சரிக்கிறீங்க... என்ன நடக்குது பழையக் குற்றாலத்துல...'

'கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு அனுமதி இல்லை...'

'ஆபத்தின் போதெல்லாம் காப்பாத்றீங்க... அப்புறம் ஏன் நாங்க பயப்படணும்...'

'எல்லா ஆபத்து நேரத்துலயும் என்னால காப்பாத்த முடியாது...'

'நீங்க மோசமான ஆவின்னு சொல்றாரே எங்க தாத்தா... உதவுற மாதிரி நடிச்சு கழுத்தைக் கடிச்சு ரத்தத்தை குடிச்சிருவீங்களாமே... உண்மையா...'

'அனைத்தையும் அறியும் நேரம் விரைவில் வரும்...'

பெருமூச்சு விட்டார் கொளஞ்சி.

தலையாட்டியபடி நின்றான் வினு. பார்த்துக் கொண்டிருக்கும் போதே பச்சை நிறமானார் கொளஞ்சி. சிறு சிறு துண்டுகளாய் பிரிந்து பறந்து மறைந்தார்.

சாலையில் ஓட ஆரம்பித்தான் வினு. அங்கு ஒன்றும் இங்குமாய் படுத்திருந்த தெருநாய்கள் குரைத்தன; சில துரத்தி வந்தன.

மலை மாளிகை காம்பவுண்டுக்குள் பிரவேசித்தான். கொல்லைப் பக்கம் வந்தான்; சவாரி போய் வந்த தடயமே இன்றி கறுப்புக் குதிரை லாயத்தில் நின்றிருந்தது. குப்புறப்படுத்து அட்டகாசமாக குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான் சுப்பையன்.

சகதி நிலத்தில், கண்ணை உறுத்தும் காட்சி எதுவுமில்லை.

மெதுவாக சமையலறைக்கு சென்றான்.

செண்பா படுத்திருந்தாள்; அவள் அருகே, சுடுகாட்டில் சுப்பையன் ஆவி பூஜை நடத்திய துணிப் பொம்மை கிடந்தது. இதற்கென்ன அர்த்தம். செண்பாவும் ஆவி தான்! சந்தேகமே இல்லை. தாத்தா, பாட்டியை சுற்றி கெட்ட ஆவிகளும், சகதி பூதங்களும் நிறைந்திருக்கின்றன.

படுக்கையறைக்கு வந்தான் வினு. சில நிமிடங்களில் துாங்கிப் போனான்.

கிழக்குத் திசையில் ஆரஞ்சு பழமாய் மிளிர்ந்தது சூரியன்.

காலை 7:00 மணிக்கு பக்கத்து அறையிலிருந்து ஓடி வந்தாள் மது.

'என்னடா இது... கண் செக்கச் செவேல்ன்னு சிவந்திருக்கு...'

இரவு நடந்ததைக் கூறி கலவரப்படுத்த விரும்பவில்லை வினு.

'தெரியல மது; ஒருவேளை துாசி விழுந்திருக்குமோ என்னவோ...'

காபி எடுத்து வந்து நீட்டினாள் செண்பா. அவளை ஆராய்ந்தான். தடயம் ஏதும் இல்லை.

மதுவும், வினுவும் குளித்து புத்தாடைக்கு மாறினர். ஈசிசேரில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் தாத்தா.

'இரவு நல்ல துாங்குனீங்களா...'

'ஓ...'

காலை உணவை சாப்பிட்டு முடித்தனர்.

'இன்னைக்கி எங்க போறீங்க...'

'மலை மேல...' என்றான் வினு.

'ரொம்ப ஆபத்து ஆச்சே, துணைக்கு சுப்பையனை கூட்டிட்டு போங்க...'

'வேணாம் தாத்தா...'

'ஏன்...'

'பாவம்... அவனால் நடப்பது கஷ்டம்; மலையேற வைக்க கூடாது...'

'நீங்க நினைக்கிற மாதிரி பொதிகை மலை ஏறுறது எளிதான காரியமல்ல. ஒண்ணு மந்திரவாதி ஜெய்சீலிமாவால ஆபத்து வரலாம். பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் ஆபத்து வரலாம். மறுபரிசீலனை செய்ங்க...'

'எங்க வீரத்தை குறைச்சு மதிப்பிடாதீங்க; பத்திரமா போய்ட்டு வந்திடுவோம்...'

'இருட்டுறதுக்குள்ள திரும்பிடுங்க...'

'சரி தாத்தா...'

வெளியே வந்தனர்.

சமைலறையில் அசைவ வாசனை நாசியை தாக்கியது; குதிரைக்கு கொள்ளு போட்டுக் கொண்டிருந்தான் சுப்பையன்.

'ராத்திரி நல்ல துாக்கமா...' நக்கலா கேட்டான் வினு.

'ஆமா...'

இரவு அறுத்து, ரத்தம் சொட்டிய விரலில் துணிக்கட்டு போட்டிருந்தான் சுப்பையன்.

'கைல என்ன காயம் சுப்பையன்...'

சமாளித்தவன், 'குதிரைக்கு உணவு போடும் போது கடிச்சிருச்சு...' என்றான்.

'விஷமாச்சே... கிளம்பு... டாக்டர்கிட்ட போ...'

'தேவையில்லை... மூலிகைச் சாறு போட்டிருக்கேன்; சரியா போகும்... எங்க புறப்பட்டீங்க...'

'பொதிகை மலை மேல ரொம்ப துாரம்...'

'தாத்தாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரே...'

'அனுமதி வாங்கிட்டோம்...'

'ஆபத்தை விலை கொடுத்து வாங்குறீங்க...'

'பரவாயில்லை; நல்ல விலைக்கு அதை வித்திடுவோம்...'

சுப்பையன் மவுனித்தான்.

மதுவும், வினுவும் மலையில் ஏற ஆரம்பித்தனர். மந்திரவாதி ஜெய்சீலிமா இருக்கிற குடில் பக்கம் போகாமல் மாற்றுப் பாதையில் சென்றனர். மதுவின் பயம் விலகி ஓடியிருந்தது. கண்ணில் பட்ட பூக்களை எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தாள்.

மலை உச்சிக்கு வந்துவிட்டனர்; திரும்பி இறங்காமல், மறுமுனைக்கு நடக்க ஆரம்பித்தனர். அழகிய நீர் சுனைகள், தெள்ளிய நீர் ஓடிக் கொண்டிருந்தது. அள்ளி பருகினர். கோவைப் பழங்களை பறித்து தின்றனர். துாரத்தில் இசை சத்தம்கேட்டது. நடந்த போது, இசையின் ஒலியளவு கூடியது.

நிறைய குடிசைகள் தென்பட்டன; வினுவைச் சொரண்டினாள் மது.

'என்னடி...'

'மலைவாசிகளை பற்றி தாத்தா எச்சரிக்கை விட்டு இருக்காரு; சிக்கிட்டா மசாலா போட்டு தின்னுடப்போறாங்க...''

'அதெல்லாம் செய்ய மாட்டாங்க...'

உச்சரித்தபோதே, 'கீர்... கீர்...' என சத்தங்கள் சீறிப் பாய்ந்தன. விஷம் தடவிய அம்புகள். மதுவும், வினுவும் மரத்தோடு மரமாய் ஒடுங்கி நின்றனர்!

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us