தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திக்.. திக்... பங்களா! (17)

திக்.. திக்... பங்களா! (17)

திக்.. திக்... பங்களா! (17)


PUBLISHED ON : ஆக 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: விடுமுறையில் குற்றால மாளிகை வந்த வினுவும், மதுவும், அங்கு நிலவிய மர்மங்களை துப்பறிய முயன்றனர். திடீர் என நள்ளிரவில், பொதிகை மலை உச்சியில் பயங்கர சவால் விட்டு கர்ஜித்தது, ஒரு முகமூடி உருவம். இனி -

முகமூடியின் கர்ஜிப்பு காட்டையே உலுக்கியது. மரக் கிளைகளில் அரைக்கண் மூடியிருந்த பறவைகள் அரண்டு, 'கீச்... கீச்...' என சத்தம் எழுப்பி பறந்து அடங்கி, மீண்டும் அரைத்துாக்கத்தில் ஆழ்ந்தன.

வாகைமரக் கிளைகளில் பதுங்கி, முகமூடி உருவத்தை சிரத்தையாய் கண்காணித்தன ஆந்தைகள். வவ்வால்கள் மொய்த்தன. வெட்டுண்டு கிடந்த, கரடி தலையை வாளால் குத்தி துாக்கி சுழற்றியபடி, ஆங்காரமாக சிரித்தது முகமூடி உருவம்.

நொடிக்கு நொடி, அதன் ரவுத்திரம் அதிகமானது.

காட்டை கால்களால் அளந்தபடி, 'கொளஞ்சி... கோழைப் பயலே வெளியே வா... இனி பழையக் குற்றாலத்தில் உன் ஆட்சி செல்லாது. உன் ஆயுளைத் தந்துவிடு...' என்றது.

ராஜாளி உருவத்தில், பாறை இடுக்கில் பதுங்கி இருந்தார் கொளஞ்சி. திடீர் என சடசடப்புடன் பறந்து முகமூடி முன் வந்து மனித உருவத்துக்கு மாறினார்.

வாளை, கைகளால் பிடித்து பூமியை வணங்கி நிமிந்தார். அவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை. வீரமும், நேர்மையும், கண்ணியமும், கடமையுணர்ச்சியும், போட்டி போட்டுக் கொண்டு பிரகாசிக்க, 'நள்ளிரவில் ஏன் காட்டுக் கூச்சல் போடுகிறாய்... சொந்த முகத்துடன் வந்திருக்கிறேன். நீயோ, இரவல் முகத்துடன் வீரம் பேசுகிறாய். இப்போது, உனக்கு என்ன வேண்டும்...' என்றார்.

'உன் தலை கொளஞ்சி...'

'முடிந்தால் மோதிப்பார்... எது வேண்டுமோ எடுத்துக்கொள்...'

வாள்களின் மோதலில் நெருப்பு பொறிகள் பறந்தன. வாட்கள் உரசும் சத்தம் கேட்டு மலைவாழ் மக்கள் வந்து விட கூடாது என்பதற்காக, ஒரு மாய தடுப்பு விரித்தபடி, 'ஏய் முகமூடி... நீ யாரின் கையாள் என்பது எனக்கு தெரியும். உங்க தீய எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது. நான் அழிந்தால் கூட, உங்களுக்கு வெற்றி கிட்டாது...' என்றார் கொளஞ்சி.

பதில் அளிக்கவில்லை முகமூடி உருவம். கொளஞ்சியின் தாக்குதல் வேகம் மேலும் தீவிரமடைந்தது; வித்தியாசமான வீச்சில், முகமூடி உருவத்தின் வாள் சிதறி தெறித்தது. நிராயுதபாணியாகி மலைத்து நின்றது. வாளை உக்கிரமாக வீசி, முகமூடி உருவத்தின் நெஞ்சில் நிறுத்தி, கம்பீரமாக நின்றார் கொளஞ்சி.

'இப்போது தெரிகிறதா யார் வீரம் என்று...' பதில் சொல்லாமல் மவுனமாக விழித்தது.

'முகமூடியைக் கழற்று...'

உருவம் முரண்டு பிடித்தது. குனிந்து, அதன் முகமூடியை அகற்ற முயன்றார் கொளஞ்சி. அப்போது, பின்னால் வந்த புதிய உருவம் திடீர் என, வாயிலிருந்த சிறிய குழலை ஊதியது; அதில் இருந்து, கண்ணுக்கு புலப்படாத மெல்லிய ஊசிகள் பாய்ந்தன. அவை, கொளஞ்சியின் தலையை துளைத்து நெற்றியில் வெளியேறின.

முதுகுக்குப் பின்னிருந்து தாக்கிய உருவத்தை பார்க்க முயன்றார் கொளஞ்சி; முடியவில்லை. நொடியில் மயங்கி சரிந்தார்.

புதிய உருவம் சிரித்து, முகத்தை மறைத்தது.

'நான் செலுத்தியிருக்கும் ஊசித்திரவம் கொளஞ்சியை சில மணிநேரம் மயக்கத்தில் வைத்திருக்கும்... தெளிந்து எழுவதற்குள், பணியை முடிக்க வேண்டும்...'

'நரம்பு நுால்கண்டை கொடு...' என்றது முகமூடி.

நீண்ட நரம்பை எடுத்த புதிய உருவம், 'இதை அறுத்தெறிய, ஆயிரம் யானை பலம் வேண்டும்...' என்று சிரித்தபடி கொடுத்தது.

ஊசியில், நரம்பு கோர்க்கப்பட்டது. மயங்கிக்கிடந்த கொளஞ்சியின் வாய் முதலில் தைக்கபட்டது. பின், கண்கள் இமையுடன் சேர்த்து தைக்கப்பட்டன. அனைத்துப் பாகங்களையும் தைத்து, பொம்மை போல கிடத்தி எழுந்தது புதிய உருவம்.

அகண்ட நெடிய மரம் ஒன்றை பிளந்தது; அதற்குள், கொளஞ்சி உடலை நிற்க வைத்து, பிளந்த மரத்தை மூடி, நரம்புகளால் தையல் போட்டது. மரத்துக்குள் புதைக்கப்பட்டார் கொளஞ்சி.

இப்போது, காடு அதிர சிரித்தது புதிய உருவம்.

'மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு போல, மரத்துக்குள் நிற்கிறார் கொளஞ்சி. முடிந்தது அவர் கதை. இனி, நம்மை தடுக்க எவராலும் முடியாது...'

பெருங்கூச்சலுடன் புதிய உருவம் மமதையில் கூறியதை ஆமோதித்தது முகமூடி.

அயர்ந்து துாங்கிக்கொண்டிருந்தனர் மலைவாசிகள்; குடிசைகளின் நடுவே பாதுகாப்புக்கு நெருப்பு பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.

திடீர் என ஊளையிட ஆரம்பித்தன நாய்கள்.

பதறியபடி எழுந்து அதட்டினான் மலைவாசி தலைவன்.

எப்போதும் கட்டளைக்கு அடிபணியும் நாய்கள் திமிறின; தொடர்ந்து ஊளையிட்டன. உஷாரானான் தலைவன். குடிசைகளிலிருந்த மலைவாசிகளும் வந்தனர்.

'ஏதோ அபசகுனத்தை அறிவிக்கின்றன நாய்கள்...'

'அவை சொல்ல விழையும் விஷயத்தை யூகிக்க முயற்சிக்கிறேன்; முடியவில்லை...'

'என்ன செய்யலாம்...'

'வாருங்கள் குலதெய்வம் கொளஞ்சிநாதரிடம் முறையிடுவோம்...'

கொளஞ்சி நாதரின் பீடத்துக்கு சென்றனர்.

முழு சிலையும் கறுத்திருந்தது.

'நாய்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன...'

மவுனம்; மீண்டும் கேள்வி.

மீண்டும் மவுனம்.

அப்போது ஒரு மலைவாசி கூவினான்.

'நம்ம குலதெய்வத்தோட கண்ணை பாருங்க...'

ஆழமாக பார்த்தான் மலைாவசிகளின் தலைவன். கொளஞ்சி நாதரின் கண்களிலிருந்து, கண்ணீராய் வழிந்தோடியது சிவப்பு ரத்தம்.

பதறிய தலைவன் பீடத்தில் ஏறி துடைத்தான். ரத்தம் பொங்கி பாய்ந்தது; ஆற்றாமை தாங்காமல் விழுந்தான். முழங்காலிட்டு முகத்தில் அறைந்தபடி, 'பொதிகை மலைக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே கேடு காலம் தான்...' என்றான்.

எல்லாரும் தண்டனிட்டு உலக நலனுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தனர். துாரத்தில் ஒரு மரத்தின் பின், உருவம் ஒளிந்திருந்து, மலைமக்கள் அழுகையை வேடிக்கை பார்த்தது. அதன் உதடுகளில் ஏளனப் புன்னகை சறுக்கியது.

மரத்தின் பின்னாலிருந்த உருவம் தீப்பந்த வெளிச்சத்தில் முகம் காட்டியது.

ஊவ்! மந்திரவாதி ஜெய்சீலிமா. அவள் கையில் மந்திர முகமூடி.

குற்றாலத்தின் பிரதான வில்லியே இவள் தான். மது, வினு தேவையில்லாமல் சாதாரணவர்களை மோப்பம் பிடித்து அலைகின்றனர்.

கையிலிருந்த முகமூடியை, விரல்களில் கழற்றியபடி குடிலுக்கு நடந்தாள் ஜெய்சீலிமா!

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us