PUBLISHED ON : மே 23, 2020

சென்றவாரம்: கோடை விடுமுறைக்காக, குற்றாலம் கொள்ளு தாத்தா பங்களாவிற்கு வந்தனர் மதுவும், வினுவும். அங்கு, மாய சக்திகள் இருப்பதாக உணர்ந்தனர். இனி -
துடிதுடித்தாள் மது. சட்டென்று விழிப்பு வந்தது. கனவின் இழை அறுந்தது. கழுத்தைக் கடிக்க பாய்ந்த நரி கரைந்தது. சோளக்காட்டுப் பொம்மையும் மறைந்தது.
எழுந்து அமர்ந்தாள். வியர்த்துக்கொட்டியது; குளிர்ந்த நீர் குடித்தாள். பதட்டம் தணியவில்லை. குழப்பத்தில் தத்தளித்தாள்.
அறைக்கதவைத் திறந்தாள்.
வராண்டாவில் மசமசப்பாய் இருட்டு; வினுவின் அறை கதவை தட்டப் போனாள். தொட்டதும் திறந்தது. வினு அருகே யாரோ படுத்திருந்து எழுந்து ஓடியது போல தோன்றியது.
குப்புற கிடந்தான் வினு; போர்வையால் போர்த்தியிருந்தான்; அழைத்தும் எழாததால் தட்டி எழுப்பினாள்.
'என்ன... என்ன...'
'ஸ்... நான்தான்டா...'
உமிழ் நீரை விழுங்கி முகத்தை அழுந்த துடைத்தான்.
சுவர்கடிகாரம் நள்ளிரவு, 1:00 மணி என அறிவித்தது.
'என்ன சொல்ல வந்தன்னு எனக்கு தெரியும் மது...'
'என்ன சொல்ல வந்தேன்...'
'கெட்டக் கனவு கண்டிருப்ப...'
'ஆமாண்டா...'
'நானும் தான் கெட்ட கனவு கண்டேன். இந்த நேரத்துல ஒருத்தர் கண்ட கனவை ஒருத்தர் பரிமாறிக்கிறது திகிலையும், பயத்தையும் கூட்டும். காலையில் பேசிப்போம்; இப்ப என் கூடவே படு; துணையா இருக்கும்...'
கைகளை பற்றி, இருவரும் படுத்துக்கொண்டனர்.
கிழக்கில் ஆரஞ்சுப்பழமாய் எழுந்தது சூரியன்.
நாரை, கொக்குகள் கூட்டம் கூட்டமாய் பறந்து போயின.
மதுவும், வினுவும் எழுந்தனர். செண்பா முடுக்கி விட்டது போல், காபி கொண்டு வந்தாள். கண் இமைக்கவில்லை.
காபியை உறிஞ்சியபடி, 'அக்கா... நீங்க காபி குடிச்சீங்களா...' என்றான் வினு.
செண்பாவிடம் பதில் வரவில்லை.
'உங்க சொந்த ஊர் எது...'
பதில் இல்லை.
மீண்டும் கேள்விகளை வீசும் முன், 'கேள்விகளை கேட்டு நேரத்தை வீணாக்காதீங்க; அதிகம் பேச கூடாதென்று எனக்கு கட்டளை...' என்றாள் செண்பா.
'கட்டளை பிறப்பித்தது யார்...'
பதில் சொல்லாமல் காலிகோப்பைகளுடன் கிளம்பினாள்.
திகைத்து அமர்ந்திருந்த இருவரும், சில நொடிகளுக்குப் பின் எழுந்தனர். மாடிப்படிகளில் இறங்கினர்.
படிகள் தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. படிக்கட்டுகளில் நுணுக்கமான பூவேலைகள் செதுக்கப்பட்டிருந்தன.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் தாத்தா. அவரது துப்பாக்கிக்கு, எண்ணெய் போட்டு, பழுது நீக்கிக் கொண்டிருந்தான் சுப்பையன். நரைத்தலையை வாரிக் கொண்டிருந்தார் பாட்டி.
'வணக்கம் தாத்தா...'
'வணக்கம் குழந்தைகளா...'
'நாங்க குளிக்கணும்...'
'அருவிக்குப்போய் குளிக்கிறீங்களா... சுப்பையன் கூட்டிட்டுப் போவான்...'
'சரி தாத்தா...'
நீளக்கம்பியால் துப்பாக்கியைக் சுத்தம் செய்து, சுவரில் மாட்டிய பின், 'போகலாம்... வாங்க...' என்றான் சுப்பையன்.
மதுவும், வினுவும் கழுத்தில் மப்ளர் போல துண்டை சுற்றிக் கொண்டு, துள்ளலாய் நடந்தனர்.
சோளக்காட்டுப் பொம்மை குறுக்கிட்டது. முந்தின நாள் நின்ற இடத்திலிருந்து, 50 மீட்டர் தள்ளி நின்றது. பானை முகம் இகழ்ச்சியாய் சிரிப்பது போலிருந்தது.
பொம்மையின் கால் பகுதிக்கு மதுவின் பார்வை ஓடியது; குதிகால் உயர்த்தி இரு கை உயர்த்தி பொம்மையை தொட்டுப் பார்த்தாள்.
'பொம்மையை ஏன் தொட்டுப் பாக்குற...'
'பொம்மையா, மனுஷனான்னு ஊர்ஜிதம் பண்ணினேன்...'
'சந்தேகமென்ன... பொம்மை தான்...'
'ராத்திரில இந்த பொம்மையை கண்காணிச்சிருக்கியா...'
'எதுக்கு...'
'நடக்கும்... மலைமேல ஏறும்...'
'சாத்தியமே இல்லை...'
'இது ஏன் நின்ன இடம் மாறியிருக்கு...'
'எல்லாம் உன் கற்பனை...'
'தரைல காலடி தடயம்...'
'எதாவது காட்டு மிருகம் போயிருக்கும்... வாக்குவாதம் செய்யாதே... விடு...' என்றான் வினு.
காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
கிசுகிசுப்புடன், 'ராத்திரி கனவில இந்த இடம் தான்டா வந்தது...' என்றாள் மது.
'ஏதாவது சொல்லி பயமுறுத்தாதே... பேசாம வா...' அதட்டினான் வினு.
பச்சைப் பசேல் பின்னணி. தட்டான்களும் வகை வகையான பட்டாம்பூச்சிகளும் பறந்தன. ஓணான்கள் தலையாட்டின.
சாரலடித்ததால், டவலை முக்காடு போட்ட மது, 'மலை முகட்டுக்குப் போலாமா...' என்றாள்.
'முடியாது... ஐயாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு...' என்று குறுக்கிட்டான் சுப்பையன்.
'மலை முகட்டுல அப்படி என்ன இருக்கு...'
'ஒண்ணுமில்லை...'
அருவியை அடைந்தனர்.
வெள்ளியை காய்ச்சி கொட்டுவது போல இருந்தது. வினு டவுசருடன், மது நீச்சல் உடையுடன் குளிக்க தயாராயினர். பாறை மீது குத்துக்காலிட்டு அமர்ந்தான் சுப்பையன்.
குழந்தைகள் அருவிக்கு ஓடினர். நீர் பட்டதும் பற்கள் கிட்டித்தன. சில நிமிடங்களுக்குப்பின் பழகிப் போனது.
சுப்பையன், 'நேரமாச்சு... கிளம்புங்க... ஐயா தேடுவாரு...' என்று கத்தினான்.
உடல், தலை துவட்டி புறப்பட்டனர்.
மீண்டும் காட்டுப்பாதையில் நடந்தனர்; சாந்தமாக நடந்து வந்த மது, முச்சந்தி பாதையில் தயங்கி நின்றாள். எதிர்பாராத நொடியில் மலை உச்சி நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
'ஏய் மது ஓடாதே...'
'அங்க போகாதம்மா... நில்லு...'
வினுவும், சுப்பையனும் துரத்தினர். மின்னல் வேகத்தில் ஓடினாள் மது.
தொடர்ந்து வினு, 'உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுப்போச்சு... இப்படி தலைதெறிக்க ஓடுற... நில்லுடி...' என்று கத்தினான்.
'முடியாதுடா...'
சற்று நேரம் ஓடிய பின் எட்டினாள் மது. பள்ளத்தாக்கில் தாத்தா பங்களா.
மலை முகடு வந்து விட்டது. மது எதிர்பார்த்தாற் போலவே ஒரு குடிலும், அதை சுற்றிய உயிர்வேலியும் தெரிந்தன; மூச்சிரைக்க நின்றாள் மது.
சுப்பையன் நெற்றியில் அடித்தபடி, 'இங்க வரக்கூடாது குழந்தை...' என்றான்.
'இந்த குடிசை தான் என் கனவுல வந்துச்சு... இங்க ஒரு பெண் மந்திரவாதி இருக்கா சரிதானா...' என்று சுப்பையனிடம் கேட்டாள்.
'ஆமா...'
'பேரு ஜெய்சீலிமா வா...'
'உனக்கெப்படி தெரியும்... வாங்க இறங்கிப் போயிடலாம்...'
'எனக்கு அவளைக் காட்டு சுப்பையன்...'
'முடியாது... பெரியவருக்கு தெரிஞ்சா, சுட்டுக் கொன்னுடுவாரு; தயவுசெய்து வந்திடுங்க...'
'அவளை நான் பார்த்துட்டுத்தான் வருவேன்...' அடம்பிடித்தாள் மது.
இடைவெட்டி, ஒரு கர்ணக் கொடூர குரல் ஒலித்தது.
குரல்கேட்ட திசையில், மூவரும் திரும்பி பதை பதைத்தனர். மந்திரவாதி ஜெய்சீலிமா நின்றிருந்தாள். முதுகில் மூலிகை சேமித்த பையிருந்தது.
'பார்த்தாச்சுல கிளம்புங்க... ஏய் பொண்ணு... திரும்ப உன்ன இந்த பக்கம் பார்த்தேன்... என்ன செய்வேன் தெரியுமா... கோழியா போன்னு சபிச்சுடுவேன்...' என, காடே கிடுகிடுக்கச் சிரித்தாள்.
மூவரும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
- தொடரும்...
