PUBLISHED ON : மே 23, 2020

தகதகப்பு!
ஆசிய நாடான மியான்மரில், 'சுவே டாகோன் பகோடா' என்ற புத்த சமய வழிபாட்டு மையம் உள்ளது. யங்கூன் நகர் அருகே சிங்குட் தரா என்ற குன்று மீது கட்டப்பட்டுள்ளது.
தேராவாத புத்த மத பிரிவினரின் முதன்மை வழிபாட்டு இடம். மணி போன்ற அடுக்கு ஸ்துாபிகளைக் கொண்டது. நுட்பமாக வார்த்த செங்கலால் கட்டப்பட்டது. இதில், 326 அடி உயர ஸ்துாபியில், தங்க தகடு பதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் பண்பாட்டு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. இதை கட்டிய காலம் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர்கள், 2000 ஆண்டுக்கு முற்பட்டது என கணித்துள்ளனர்.
புத்தரின், எட்டு முடி இழைகள் இங்கு உள்ளதாக நம்பப்படுகிறது. தங்க ஸ்துாபி மீது, சூரிய ஒளி விழும்போது ஜொலிக்கும். இந்த வழிபாட்டிடம், கி.பி.,14ம் நுாற்றாண்டில் பராமரிப்பின்றி சிதைந்து கிடந்தது.
கி.பி., 14ம் நுாற்றாண்டின் இறுதியில் பர்மாவை ஆண்ட மன்னர் பின்னியா யூ
இதை சீரமைத்தார். அந்த நாட்டு ராணி பின்னியா தவூ, ஸ்துாபியை பராமரிக்க நிலமும், அடிமைகளையும் தானமாக வழங்கினார்.
அவர், அந்த ஸ்துாபியை நோக்கி அமர்ந்து உயிர் விட்டதாக வரலாறு கூறுகிறது.
தேடுபொறி!
அமெரிக்காவில் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், லாரி பேஜ், செர்ஜி பிரின். இணைய தேடல் மேம்பாடு பற்றிய ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பதில் ஈடுபட்டு இருந்தனர். தொழில் முனைவோராகும் கனவோ, சொந்த நிறுவனம் துவங்கும் லட்சியமோ அவர்களிடம் இல்லை.
ஆய்வுக் கட்டுரை சிறப்பாக இருக்கவே, வணிகமாக்க முடிவு செய்தனர். ஆய்வின் அடிப்படையில் தேடுபொறி ஒன்றை உருவாக்கினர். அது, 1998ல் நிறுவனமானது. அதற்கு, 'கூகுள்' என பெயர் சூட்டப்பட்டது. இன்று மாபெரும் வளர்ச்சி பெற்று, இணைய சாம்ராஜ்யமாக உள்ளது.
மின்னஞ்சல், அலைபேசி இயங்குதளம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு என, பல சேவைகளை வழங்குகிறது.
தனி நபர்களுக்கு தேடலை மட்டுமே வழங்கும் பொறியாக கூகுள் அறிமுகமானது. அதை துவங்குவதற்கு முன் எத்தனையோ தேடுபொறிகள் இருந்தன. அனைத்தும் அலுப்பையும், அதிருப்தியையும் தந்தன. இணையம் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பார்த்த தகவலை தேடி கண்டு பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது.
இணையதளங்களின் இணைப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேஜ், தளங்களைப் பட்டியலிட்டால் மேம்பட்ட தேடலை அடையலாம் என்று நம்பினார். செர்ஜி பிரின்னுடன் இணைந்து வலைப்பக்கங்களைச் சேமித்தார்.
இந்த சேமிப்பிலிருந்து தர அடிப்படையில், கச்சிதமான முடிவுகளை அளிக்க முடியும் என இருவரும் நம்பினர். இதுவே, கூகுள் தேடு பொறியின் முதுகெலும்பாக அமைந்தது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
