PUBLISHED ON : மே 02, 2014

ஒரு அரசருக்கு மூன்று குமாரிகள் இருந்தனர். அவர்களுக்குத் தாயார் இல்லை. ஆகவே, ராஜகுமாரிகளிடம் மன்னர் உயிரையே வைத்திருந்தார். அரண்மனைத் தோட்டத்தில் ஏராளமான மலர்ச்செடிகளும், பழமரங்களும் இருந்தன. அரசகுமாரிகள் ஆடிப்பாடி மகிழ்வர். பல நேரங்களில் அவர்களோடு மன்னரும் கலந்து கொள்ளுவார். அரச குமாரிகள் வளர்ந்து பெரியவர்களாயினர்.
ஒருநாள் அரசர் அவர்களிடம், ''நீங்கள் அரண்மனைத் தோட்டத் தில் எங்கு வேண்டு மானாலும் போகலாம். எந்தப் பழங்களை வேண்டுமானாலும் பறித்துச் சாப்பிடலாம். ஆனால், வடக்குக் கோடியிலுள்ள ஒரு பெரிய மாமரத்தின் பழங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள். சாப்பிட்டால் அவர் களைப் பூமி பிளந்து பாதாள உலகுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்,'' என்று எச்சரித்தார். குமாரிகளும் அதன்படியே நடப்பதாக ஒப்புக் கொண்டனர்.
அடுத்த வருடம் மாம்பழக் காலம் வந்தது. மரங்களில் பழங்கள் காய்த்துப் பழுத்துக் குலுங்கின. ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது என்னும் போதுதான், அதில் ஒரு தனி ஈடுபாடும், ஆசையும் ஏற்படும். இது மனித இயல்பு.
அரச குமாரிகள் அவர்களின் தந்தை குறிப்பிட்ட மரத்தைப் போய்ப் பார்த்தனர். அற்புதமான அழகோடு பெரிய, பெரிய மாம்பழங்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. இளவரசி களுக்கு நாக்கில் நீர் சுரந்தது. ஆனால், தந்தையின் எச்சரிக்கை நினைவுக்கு வரவே ஏக்கத்துடன் திரும்பினர். ஆனால், தினமும் அந்த மரத்தைப் போய்ப் பார்ப்பதை மட்டும் விடவில்லை. ஏதாவது ஒரு பழம் காற்றில் கீழே விழுந்திருக்காதா என்று தேடுவர். ஆனால், பலன் ஏமாற்றம்தான்.
ஒருநாள் கடைக்குட்டி இளவரசி, ''நம் தந்தை நம்மீது உயிரையே வைத்திருக்கிறார். அப்படி இருக்க அவர் நம்மைப் பாதாள லோகத்தில் இழக்க நினைப்பாரா? இந்த எச்சரிக்கை நமக்காக இருக்காது. மற்றவர்களுக்காகத் தான் இருக்கும். ஆகவே, இம்மரத்தின் பழங்களை நாம் சுவைத்து மகிழலாம்,'' என்று கூறவே, ஆசையை அடக்க மாட்டாத அக்காமார்களும் அதற்கு இணங்கினர். ஆளுக்கொரு மாம்பழத்தைப் பறித்து உண்டனர். அதே சமயம் பூமி பிளக்க, மூவரும் அதற்குள் மூழ்கி மறைந்தும் போயினர்.
தம் அருமைக் குழந்தைகளைக் காணாத மன்னர் தவித்துப் போனார். நாடெங்கும் வீரர்களைக் கொண்டு தேடச் செய்தார். பலன் இல்லை.
''என் குமாரத்திகளை யார் தேடிக் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு அவர்களையே மனைவியாக்கி வைப்பேன்,'' என்று நாடு நகரமெங்கும் பறை சாற்றினார். ஏராளமான வீரர்கள் இளவரசிகளைத் தேடிக் கிளம்பினர்.
இப்படிக் கிளம்பியவர்களில் மூன்று சகோதரர்களும் இருந்தனர். இவர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். இளவரசி களையும், அதிர்ஷ்டத்தையும் தேடிக்கொண்டு வந்த இவர்கள் எட்டு நாட்கள் பயணத்திற்கு பிறகு ஒரு பெரிய கோட்டைக்கு வந்தனர். அதனுள்ளிருந்த அரண்மனை அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையின் நடுவே விதவிதமான உணவுப் பண்டங்கள். அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கியவை போன்று அத்தனை சூட்டுடன் கமகமவென்று வாசனை வீசிக்கொண்டி ருந்தன. ஆனால், மனித சஞ்சாரமே இல்லை.
மூவரும் வயிறார உண்டனர். பயண களைப்பு நீங்கியதும் மூவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். 'ஒவ்வொரு நாளும் மூவரில் ஒருவர் கோட்டையில் தங்க வேண்டியது. மற்ற இருவரும் இளவரசிகளை தேடி அலைய வேண்டியது. அடுத்த நாள் அடுத்தவன் கோட்டையில் தங்க, மற்ற இருவரும் வெளியே போக வேண்டியது' என்று ஏற்பாடு செய்து கொண்டனர். அதன்படி மூத்தவன் மறுநாள் கோட்டையில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
நண்பகல் வேளையில், ஒரு குள்ளன் கோட்டைக்கு வந்தான். அவனிடம் பக்குவப் படுத்தப்பட்ட மான் இறைச்சி இருந்தது. அதைத் தன்னிடமுள்ள கத்தியினால் துண்டு போட்டு மூத்த வேடனுக்கு அளித்தான். அப்போது ஒரு துண்டு இறைச்சி கீழே விழுந்துவிட்டது. அதை எடுக்கும்படி குள்ளன் கேட்டுக்கொண்டான் வேட்டைக் காரனிடம்.
''நீ கீழே போட்டதை நீயே எடுத்துக் கொள்,'' என்றான் அலட்சியமாக.
அது மட்டுமல்ல... குள்ளன் குனிந்து அதை எடுக்கும்போது அவனைக் காலால் எட்டி உதைத்து, ''வேலைக்காரன் யார், எஜமானன் யார் என்பதை இந்த உதை உனக்கு உணர்த்தும்,'' என்று கொக்கரித்தான். குள்ளன் மவுனமாக வெளியேறினான்.
மறுநாள் இரண்டாவது சகோதரன் கோட்டையில் இருந்தான். அன்றும் குள்ளன் இறைச்சியோடு வந்து அவனுக்கு உபசரித் தான். ஒரு துண்டு விழுந்தது. அவனும் அகம்பாவத்துடன் குள்ளனை உதாசீனப்படுத்தி அனுப்பினான்.
மூன்றாம் நாள் கடைசிச் சகோதரன் கோட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தான். இறைச்சியோடு வந்த குள்ளன் கையிலிருந்து ஒரு துண்டு நழுவியது. அதை எடுத்துத் தரும்படி கேட்டான் குள்ளன்.
''எங்களுக்கு உண்ண உணவும், தங்க இடமும் கொடுத்துப் பணிபுரியும் உனக்கு இந்த உதவிகூடவா செய்யமாட்டேன்? மகிழ்ச்சியோடு எடுத்துத் தருகிறேன்,'' என்று குனிந்து இறைச்சித் துண்டை எடுத்துக் கொடுத்தான். இதனால், மகிழ்ச்சி அடைந்த குள்ளன், அவனுக்கு இதுவரையில் யாருக்குமே அளிக்காத தரமான உணவை அளித்தான்.
''நீ எனக்கு உதவினாய். நானும் உனக்கு அரசகுமாரிகளைக் கண்டுபிடிக்க உதவப் போகிறேன். பாதாள உலகில் வாழும் மனிதன் நான். என்னைப் போன்ற குள்ளர்கள் பூமிக்கடியில் ஏராளமாக இருக்கின்றனர். உன் சகோதரர்கள் உன்னை ஏமாற்றப் பார்ப்பர். ஆகவே, அரசகுமாரிகளைக் காண நீ மட்டும் தனியாகச் செல்ல வேண்டும். இந்தக் கோட்டைக்கு இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அதன் உச்சியில் ஒரு கிணறு உண்டு. அதற்குள் ஒரு கூடை மூலமாக இறங்கினால், கிணற்றின் கீழே ஒரு விசாலமான இடம் தெரியும். அங்குதான் அரசகுமாரிகள் இருக்கின்றனர். அங்கு மூன்று அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு ராஜகுமாரி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். ஒவ்வொரு அறையையும், கொடிய மிருகம் காவல் காத்துக்கொண்டிருக்கும். போகும்போது உன் உடைவாளை மறக்காமல் கொண்டு போ. அந்த ராட்சத மிருகத்தின் தலையை வெட்டினால்தான் அவை சாகும். வேறு எவ்வகையிலும் அவற்றைக் கொல்ல முடியாது,'' இவ்வளவையும் கூறிவிட்டுக் குள்ளன் மறைந்து போனான்.
அன்று மாலை கோட்டைக்குத் திரும்பிய அண்ணன்மார் இருவரும், 'இன்று பகல் பொழுது எப்படி சென்றது? என்று தம்பியிடம் கேட்டனர்.
தம்பி நடந்ததை எல்லாம் கூறினான். 'அண்ணன்களுக்கு அதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அந்தக் கிணற்றையும் பார்த்துவிடலாமே' என்று முடிவு செய்தனர்.
மறுநாள் காலை மூன்று சகோதரர்களும் மலை உச்சிக்குப் போயினர். முதலில் கிணற்றுக்குள் யார் இறங்குவது என்று சீட்டுக் குலுக்கிப் போட்டனர். முதலில் மூத்தவனும், அடுத்து இரண்டா மவனும், கடைசியாக மூன்றாமவனும் என்று சீட்டு விழுந்தது. கையோடு உறுதியான கயிறும், கூடையும் கொண்டு போயிருந்தனர். கூடைக்குள் ஒருவர் அமர மற்ற இருவரும் அதைக் கிணற்றினுள் இறக்கினர். மேலே வர வேண்டுமானால் அதை அறிவிக்க கிணற்றுக்குள் போகிறவன் தன்னுடன் ஒரு மணியைக் கொண்டு போனான். அதை அசைத்து ஒலித்தால் உடனே மேலுள்ளவர்கள் கூடையை மேலே இழுத்து விடுவர்.
மூத்தவன் கிணற்றில் கீழே போனதும், அங்குள்ள ராட்சத மிருகத்தைக் கண்டானோ இல்லையோ, மணியைப் பலமாக அடித்தான். உடனே தம்பிகள் இருவரும் கூடையை மேலே இழுத்து விட்டனர். மூச்சு வாங்க, வியர்த்து விறுவிறுக்க மேலே வந்த அவன் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தான்.
இரண்டாமவனும் இதே மாதிரி அலறி அடித்துக் கொண்டு உடனே மேலே வந்து விட்டான். கடைசியாக மூன்றாமவனின் முறை வந்தது. கிணற்றின் கடைசி வரையில் தன்னை இறக்கும்படி சொல்லி விட்டுக் கூடைக்குள் அமர்ந்தான் அவன். கூடை தரையில் போய் இறங்கியதும் கூடையிலிருந்து கீழே குதித்தான். அதன் அறையை நோக்கித் தைரியத்துடன் கையில் கத்தி ஏந்தி முன்னேறினான்.
-தொடரும்.
