தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மூன்று தண்டனை!

மூன்று தண்டனை!

மூன்று தண்டனை!


PUBLISHED ON : செப் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அத்திப்பட்டி என்னும் ஊரில் மாணிக்கம் என்பவர் நெய் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் சிங்காரம். அவன் மிகவும் பேராசை பிடித்தவன்.

மாணிக்கத்திற்கு வயதாகி விட்டதால், வியாபாரத்தைத் தன் மகன் சிங்காரத்திடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டார்.

சிங்காரத்துக்கு அவன் தந்தையின் வியாபார முறைகளான நியாயம், நாணயம் முதலியவை சிறிதும் பிடிக்கவில்லை. அவன் வெகு விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

நீண்ட நாட்கள் சிந்தித்த சிங்காரம், 'தான் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்து, அதிக விலைக்கு விற்று, அதில் அதிக லாபம் பெற்று, விரைவில் தான் வசித்து வந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட வேண்டும்' என்று ஆசைப்பட்டான். அவனிடம் கொஞ்சம் நெய் இருந்தது. அதில் அதே நிறத்தில் உள்ள தேங்காய் எண்ணெயையும், சிறிது ரவை யையும் கலந்து விற்றால், மக்களுக்குத் தெரியவா போகிறது என்ற எண்ணம் கொண்டான். முதலில் சிறிய அளவில் தேங்காய் எண்ணெயையும், ரவையையும் நெய்யில் கலந்து விற்ற போது, மக்கள் கலப்படத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் கலப்படத்தைப் புரிந்துக் கொள்ளாததை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிங்காரம், ஒரு தடவை தேங்காய் எண்ணெயிலும், ரவையிலும் சிறிது அளவு நெய்யைக் கலந்து விற்றான். நெய் வாசனைக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வாசனை வருவதைப் பார்த்த மக்கள், வியாபாரியைப் பற்றி ஊர்த் தலைவரிடம் முறையிட்டனர்.

ஊர்த் தலைவரும் சிங்காரத்தை அழைத்து விசாரித்தார். ஊர்த் தலைவர் விசாரணையை சிறிதும் பொருட்படுத்தாத சிங்காரம், தான் விற்பது சுத்தமான நெய் என்றும், தன்னைப் போல எந்த வியாபாரியும் சுற்று வட்டாரத்தில் குறைந்த விலைக்கு நெய் விற்க முடியாது என்றும் கூறினான். சிங்காரத்தின் வார்த்தைகளில் திருப்தி அடையாத ஊர்த் தலைவர், சிங்காரம் கடையில் இருந்த இரண்டு டின்கள் நெய்யை ஊர் மக்களை கொண்டு வர சொல்லி, சிங்காரத்தையும் அழைத்துக் கொண்டு, நீதிபதியிடம் சென்றார்.

நீதிபதியிடம் சென்ற ஊர்த்தலைவர் நீதிபதியைப் பார்த்து, ''கனம் நீதிபதி அவர்களே! இதோ உங்கள் முன் நிற்கும் சிங்காரம் ஒரு நெய் வியாபாரி. அவன் நெய் என்ற பெயரில், தேங்காய் எண்ணெயையும், ரவையையும் நெய்யில் கலந்து அதிக விலைக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறான். நீங்கள்தான் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்று கூறினார்.

நீதிபதியும் சிங்காரத்தைப் பார்த்து, ''ஊர்த் தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்?'' என்று கேட்டார்.

''கனம் நீதிபதி அவர்களே! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் மக்களுக்கு நன்மைதான் செய்து வருகிறேன். என்னைப் போல் யாராலும் குறைந்த விலைக்கு நெய்யை விற்க முடியாது,'' என்று கூறினான் சிங்காரம்.

நீதிபதியும் டின்னில் இருந்து கொஞ்சம் நெய்யைத் தன் கையில் எடுத்து அதை மக்கள் மத்தியில் காண்பித்து, ''இது அசல் நெய்யா அல்லது கலப்பட நெய்யா?'' என்று கேட்டார்.

மக்களும் ஒரே குரலில், ''இது நெய் என்ற பெயரில் உள்ள தேங்காய் எண்ணெய்,'' என்று கூறினர்.

நீதிபதியும் சிங்காரத்தைப் பார்த்து, ''நீ நெய் என்று சொல்லுவது வெறும் தேங்காய் எண்ணெய்தான் என்று ஊர் மக்கள் கூறு வதால், நீ விற்பது கலப்படம் செய்த நெய் என்பது உறுதியாகி விட்டது. ஆகவே, நீ செய்த குற்றத்துக்கு மூன்று விதமான தண்டனையை உனக்கு அளிக்கிறேன். மூன்றில் உனக்குப் பிரியமான ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,'' என்று கூறினார்.

''முதலாவதாக, உன் கடையில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு டின்களில் உள்ள நெய்யை நீ ஒருவனே உண்ண வேண்டும் அல்லது ஐம்பது பிரம்படிகள் வாங்க வேண்டும். அதுவும் முடியாது என்றால், ஐநூறு காசுகள் அபராதம் செலுத்த வேண்டும். எது உனக்குச் சரியெனப்படுகிறதோ அதை ஏற்றுக் கொள்,'' என்றார் நீதிபதி.

நீதிபதி கூறியதைக் கேட்ட சிங்காரம் யோசித்தான். பிரம்படியையும், ஐநூறு காசுகளையும் விட கலப்பட நெய்யை உண்பது தான் தனக்கு சுலபமானது என்று முடிவு செய்தான். கலப்பட நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது குடித்த உடன் அவனுக்கு வாய் குமட்டிக் கொண்டு வந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். அவன் உடனே நீதிபதியிடம், ''ஐயா, என்னால் நான் மக்களுக்கு விற்ற நெய்யை உண்ண முடியவில்லை. அதனால் ஐம்பது பிரம்படிகள் வாங்கிக் கொள்கிறேன்,'' என்றான்.

முதல் இரண்டு பிரம்படிகள் வாங்கிய சிங்காரம் வலி பொறுக்க முடியாமல், அலறித் துடித்தான். உடனே அவன் நீதிபதியைப் பார்த்து, ''தண்டனையான ஐநூறு காசுகளை செலுத்தி விடுகிறேன்,'' என்றான்.

சிங்காரத்தின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களும், ஊர்த் தலைவர் மற்றும் நீதிபதியும் வாய் விட்டுச் சிரித்தனர்.

முதலிலேயே ஐநூறு காசுகள் அபராதத் தொகையைக் கட்டியிருந்தால், முதல் இரண்டு தண்டனைகளை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். பேராசை காரணமாக, முட்டாள் தனமாக நடந்து கொண்டதால், ஒரு தண்டனைக்கு மூன்று தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவித்தான் சிங்காரம். அத்துடன் தன்னுடைய கலப்பட தொழிலை நிறுத்தினான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us