
முன்னொரு காலத்தில் கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் சேது என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் உலக மகாகருமி. அவனுக்கு மூதாதையர் சொத்து நிறைய இருந்தது. வீடுகளிலிருந்து வாடகை வரும். நிலங்களில் இருந்து குத்தகைப் பணம் வரும். இவையெல்லாவற்றையும் ஒழுங்காக வசூலிப்பதுதான் அவன் தொழில்.
எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டான். அந்தக் காலத்தில் வங்கிகள் இல்லாததால், பெரிய தோட்டத்தில் இருந்த மாமரத்தின் அடியில், குழி தோண்டி வெள்ளிக் காசுகளையும், தங்க நாணயங்களையும் பானையில் போட்டு புதைத்து வைப்பான்.
'வெளியே சென்றால் அணிந்து கொள்ள நகைகளே இல்லை... ஒரு பட்டுப் புடவை கூட இல்லை... எனக்கு வாங்கிக் கொடுங்க' என்று கேட்பாள் அவனது மனைவி.
'என்னது நகை, பட்டுப்புடவையா? போ... போ... இருக்கிற புடவையை கட்டு' என்று திட்டுவான்.
யாருமே அவனிடம் ஒரு காசு கூட வாங்க முடியாது. கடைக்குப் போய் காய்கறி வாங்கப் போனாலும், பேரம் பேசுவான்.
வாடகை தருபவர்கள், 'ஐயா இந்த மாதம் அதிகம் செலவாகி விட்டது. அடுத்த மாத வாடகையுடன் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்' என்று சொன்னால் அவர்களை கண்டபடி பேசி, உடனே காலி செய்யச் சொல்வான். அவர்கள் இதற்குப் பயந்து கடன்பட்டாவது வாடகையை ஒழுங்காகக் கொடுத்து விடுவர். அப்படியே நிலத்தைக் குத்தகை எடுத்தவர்களும் மழை அதிகமாகப் பெய்து பயிர்கள் பாழாகி விட்டால் அவனிடம் வந்து அழுவர்.
அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசி, குத்தகைப் பணம் கட்டா விட்டால் நிலத்தை வேறொருவரிடம் குத்தகைக்கு விட்டு விடுவதாகச் சொல்வான். அவர்கள் இதற்கெல்லாம் பயந்து, பட்டினி கிடந்தாவது அவனுக்கு நெல்லும், பணமும் கொடுத்து விடுவர்.
சேதுவின் மகனுக்கு இதெல்லாம் சிறிது கூடப் பிடிக்கவில்லை. அப்பா தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் என்னதான் செய்கிறார்? என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.
ஒருநாள்-
இரவு தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அவன் எழுந்து தோட்டக் கதவைத் திறந்து வெளியில் போய் பார்த்தான்.
மாமரத்தின் அடியில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு யாரோ தோண்டிக் கொண்டிருந்தனர். உற்றுப் பார்த்தபோது அது அவன் தந்தை தான் என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு ஓசைப்படாமல் வந்து படுத்துக் கொண்டான்.
சில நாட்களுக்குப் பிறகு, அப்பா வெளியூர் சென்றபோது, மாமரத்தினடியில் தோண்டிப் பார்த்தான்.
நிறைய செப்புக் குடங்கள் இருந்தன. ஒன்றைத் திறந்தான். அதில் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் இருந்தன. சிறிது தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பழையபடியே குடத்தை மூடி புதைத்து விட்டான்.
கடைக்குச் சென்று தன் தாய்க்கும், வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கினான். மீதி பணத்தை தாயிடம் சென்று கொடுத்தான்.
அவன் தாய்க்கு மிகவும் ஆச்சரியம்.
''உனக்கு ஏதுடா இவ்வளவு பணம்?'' என்று கேட்டாள்.
''எனக்கு வேலை கிடைச்சிருக்கு...'' என்று பொய் சொன்னான்.
சில நாட்களுக்குப் பிறகு, சேது வீட்டிற்கு வந்தபோது எல்லாரும் புதிய உடைகள் அணிந்திருந்தனர். வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட்டு துப்புரவாக இருந்தது. அவன் மனைவி நிறைய நகைகள் போட்டிருந்தாள். அவன் அலமாரியைத் திறந்த பொழுது, அதில் நிறைய புதிய உடைகள் இருந்தன. அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.
''இதெல்லாம் யார் வாங்கினது?'' என்று மனைவியிடம் கேட்டான்.
''மகனுக்கு வேலை கிடைச்சிருக்கு. அவன் தான் வாங்கி வந்தான்,'' என்றாள் மனைவி.
அதைக் கேட்டு முதலில் நம்பிய சேது பிறகு யோசித்துப் பார்த்தான். 'எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இதெல்லாம் வாங்க நிறைய செலவாகுமே' என்று குழம்பினான்.
நாம் வைத்திருக்கும் புதையலில் இருந்துதான் எடுத்திருப்பான் என்று புரிந்து போய் அன்றிலிருந்து இரவில் தோட்டத்தில் புதையலின் பக்கத்திலேயே ஒரு கட்டில் போட்டு படுத்து கொண்டான். யாரும் புதையலை எடுத்துவிடக் கூடாது என்று காவல் இருந்தான்.
இவனது நடத்தையை கவனித்து வந்த பக்கா திருடன் ஒருவன், இரவில் சேதுவை அடித்து நொறுக்கி விட்டு, புதையல்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். அதிர்ச்சியில் மயக்கமடைந்தான் சேது.
சேதுவின் மகன், அவனுக்கு நிறைய செலவு செய்து வைத்தியம் பார்த்தான்.
''புதையல்... போச்சே..'' என்று புலம்பியே இளைத்தான் சேது.
''அப்பா... இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்துதான், பொற்காசுகளை எல்லாம் எடுத்து வீட்டிற்குள் பத்திரமாக வைத்துவிட்டு, கற்களை போட்டு நிரப்பி மேலே சிறிது காசுகளை போட்டு வைத்தேன். அதை தான் திருடன் கொண்டு சென்றான்...'' என்றான் மகன்.
அந்த வார்த்தையை கேட்டதுமே சேதுவுக்கு உயிர் வந்தது. அன்றிலிருந்து தன் வீட்டிற்காகத் தாராளமாகச் செலவு செய்ய ஆரம்பித்தான். மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்தான். பிள்ளைகளோடும், பேரப்பிள்ளைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்தான்.
சிக்கனமாக இருக்க வேண்டியதுதான். அதற்காக, 'ஓவர்' சிக்கனம் கூடாது.

