
சென்னை, பரங்கிமலை, துாய தோமா உயர்நிலைப் பள்ளியில், 1967ல் படித்தபோது, கனமழை, காய்ச்சல், தலைவலி என எந்த இடர்பாடு ஏற்பட்டாலும், காலம் தவறாமல் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
இது, ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தது. விடுப்பு எடுக்காமல் வருகை பதிவு இருந்ததால், சான்றிதழ் தந்து புத்தகப்பரிசு அளித்தார் ஆசிரியர் ராஜாங்கம்.
ஆண்டு முடிவில், பரிசுக்கோப்பை, அகராதி, திருக்குறள் புத்தகம் வழங்கினர். பள்ளி ஆண்டு விழா மலரில், என் புகைப்படத்தையும் பிரசுரித்து கவுரவித்தனர்; மிகவும் மகிழ்ந்தேன்.
இந்த பழக்கத்தை, வேலை பார்த்த இடத்திலும் விடாமல் கடைபிடித்தேன். அது, பதவியில் உயர உதவியது.
இப்போது, என் வயது, 64; இன்றும் நேரம் தவறாமை, சொன்ன சொல் மாறாமை, சுறுசுறுப்பை கடைப்பிடித்தல் என்ற பண்புகளை கடைபிடித்து வருகிறேன். இவை, வளமான வாழ்க்கைக்கும் பேருதவியாக உள்ளன.
- பி.பழனி, சென்னை.

