
பழனி அருகே நெய்க்காரப்பட்டி, குருவப்பா மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 6ம் வகுப்பு படித்தேன்.
முந்தைய வகுப்பில் முறையான எழுத்துப் பயிற்சி பெறாமையால் பிழைகள் ஏற்பட்டன.
குணநலன் மிக்க வகுப்பு ஆசிரியர் குணசீலனிடம், 'ஐயா... எழுதும் போது பிழைகள் ஏற்படுகின்றன. காரணம், குறில், நெடில் குழப்பம். ல, ழ, ள எழுத்துகளில் மயங்கொலி குழப்பம். ர, ற வேறுபாடு அறிய முடியவில்லை. ண, ன, ந எழுத்துகளுக்குள் உள்ள வேறுபாடு புரியவில்லை...' என அழுதேன்.
ஆறுதல் படுத்தி, 'கவலைப்படாதே... உன் குறைகள் தீரும் நாள் வெகுதுாரத்தில் இல்லை...' என கூறினார். மறுநாளிலிருந்து முறையாக எழுத்துப் பயிற்சி அளித்தார்.
அவரது கனிவான அணுகுமுறையும், என் முயற்சியும் வளர்ச்சி தந்தன. பத்தே நாட்களில் பிழைகளை தவிர்த்து உயர்வு பெற்றேன்.
என் வயது, 34; அறத்துடன் ஆசிரியப்பணி செய்து கொண்டிருக்கும் நான், அந்த ஆசிரியர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
- சி.நாகேந்திரன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 93604 97879

