PUBLISHED ON : நவ 23, 2019

உற்சாகமாக, 'அம்மா... பள்ளியில, 'லீவு' விட்டாச்சு...' என, குடிசை படலை கதவைத் தள்ளினான் கந்தன். வாசலில் படுத்திருந்த நாய் மணி, எம்பி குதித்து முன்னங்கால்களை துக்கியபடி வரவேற்றது. மிகவும் மகிழ்வுடன் குழைய ஆரம்பித்தது.
'இன்னிக்கு பள்ளியில சத்துணவு அதிகமாகவே போட்டாங்க; அதான், உனக்கும் கொஞ்சம் எடுத்தாந்தேன்...' என, பையில் இருந்த சாதத்தை, நாய்க்கு வைத்தான்; நொடியில் தின்று முடித்து, வாலை ஆட்டியது.
'அம்மா இன்னும் வரலயே... வேலை அதிகமோ; அவரை பாக்க பண்ணையார் வீட்டுக்குப் போறேன்; நீயும் வர்றியா... பண்ணையாரம்மா, முறுக்கு, சீடை ஏதாச்சும் தருவாங்க...' என்றபடி நடந்தான். அதை புரிந்தது போல, வாலை ஆட்டியபடி பின் தொடர்ந்தது நாய்.
கந்தனுக்கு, 10 வயதாகிறது; மூன்று வயதில் அப்பா இறந்தார். அம்மா தான், பண்ணையார் வீட்டில் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
குட்டியாக இருந்த போது, பாவமாக தெருவில் நின்று கத்தியது மணி. அதன் தாய் எங்கே என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து திரும்பிய கந்தன் அதை கண்டான்; வீட்டுக்கு துாக்கி வந்தான். அன்று முதல், இணை பிரியாத நண்பனாகி விட்டது. ஆறு மாதத்தில் நன்றாக வளர்ந்திருந்தது.
பண்ணையாரின் வீடு சற்று துாரத்தில் இருந்தது. வழியெல்லாம் நாயுடன் ஏதேதோ பேசியபடி வந்தான் கந்தன். நெருங்கியதும், பண்ணையார் வீட்டு கிணற்றடியை பார்த்து, 'அம்மா...' என்று கத்தியபடி ஓடினான்.
அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள், 'வா ராசா... இன்னா, உடம்பு சுகமில்லையா... பள்ளிக் கூடத்துலேந்து சீக்கிரமே வந்துட்டே...' என, கவலையுடன் கேட்டாள் அம்மா.
'இல்லம்மா... தேர்தல் வருதில்லையா... வாத்தியாருங்க எல்லாம், ஏதோ பயிற்சி எடுக்க போறாங்களாம். அதனால சீக்கிரமா விட்டுட்டாங்க...'
'சரி... வேல முடிய இன்னும் கொஞ்ச நேரமாகும்; அதுனால, வீட்டுக்குப் போயி, பாட புத்தகத்தை எடுத்து படி...' என்றாள்.
அப்போது அங்கு வந்தார் பண்ணையாரின் மனைவி. அவர் கந்தனை நலம் விசாரித்து, 'நல்லா படிக்கிறாயா...' என்று கேட்டார்.
'படிக்கிறேம்மா... இன்னைக்கு கூட, வாத்தியார் பாரட்டினாரு...'
'படிப்புல கவனமாயிருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி; கொஞ்சம் இரு, முறுக்கு தரேன்...' என்றபடி உள்ளே போனார்.
பண்ணையாரின் ஒரே மகன் வரதன்; கந்தனுடன், படிக்கிறான். வகுப்பறையில் அவனுக்கு மட்டும், தனியாக நாற்காலி, மேஜை போடப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் கந்தனை, அவனுக்கு பிடிக்காது.
பண்ணையார் மனைவி கட்டிக் கொடுத்த முறுக்கு பொட்டலத்தை, வெறுப்புடன் எடுத்துவந்த வரதன், 'இந்தா... இங்கேயே பிரிக்காத... வீட்டுக்குப் போய் தின்னு...' என்று கடுகடுப்புடன் கொடுத்தான்.
கந்தனுடன் வந்திருந்த நாயைக் கண்டதும், 'டேய்... இதையெல்லாம் ஏன்டா இங்கே கூட்டிட்டு வந்த... இது, என்னோட சைக்கிள்ல, உச்சா பண்ணிடிச்சு...' என்று ஆத்திரம் பொங்க கூறினான்.
'இல்ல வரதா... இனிமே அப்டி செய்யாது; நான் பாத்துக்குறேன்...'
'போடா... நீ என்னடா பாத்துக்கறது...' என்றபடி, சுற்றும் முற்றும் பார்த்தவன், ஒரு கல்லை எடுத்து எறிந்தான்; வலி தாங்க முடியாமல் நாய் கத்தியது. அதைப் பார்த்து, ஏளனமாக சிரித்தபடியே ஓடினான் வரதன்.
கந்தனுக்கு அழுகை வந்தது. கல்லடி பட்ட நாயை, பரிவுடன் அணைத்து தடவியபடி, குடிசைக்கு அழைத்து வந்தான். சிறு முதலுதவி சிகிச்சை அளித்து ஆறுதல் படுத்தினான்.
பொங்கல் பண்டிகை வந்தது. பள்ளிக்கு ஒரு வாரம் விடுப்பு. கிராமத்தை சுற்றி வந்த கந்தன், வயலில் சிறிய வேலைகள் செய்தான். காலையில் கிளம்பினால், மாலையில் தான் திரும்புவான்.
அன்று மாலை, 4:00 மணி, கரும்பைக் கடித்தவாறே, துள்ளலுடன் வீடு திரும்பிய கந்தனுக்கு, வியப்பு ஏற்பட்டது. வீட்டருகே, நாயுடன் பரிவாக விளையாடிக் கொண்டிருந்தான் வரதன். இதை நம்ப முடியாமல், 'நீ எங்கடா இந்தப் பக்கம்... மணியை கொஞ்சுறியே... என்ன ஆச்சு...' என்றான் கந்தன்.
'இன்னைக்கு, இந்த மணி தான்டா என்னை காப்பாத்தியது...'
'என்னடா சொல்ற...'
'வயலுக்குப் போயிட்டு, குறுக்கு வழியா வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில திருடன் என் கைய முறுக்கி, கழுத்துல இருந்த தங்க சங்கிலிய கழட்ட முயன்றான். பயந்து போய் கத்தினேனா... உடனே, ஒரு கத்தியை கையில எடுத்தான்; நான் அதிர்ந்து போயி திகைச்சி நின்னேன்...
'அப்போ தான்... திடீர்னு மணி எங்கிருந்தோ ஓடி வந்து, அவன் மீது பாய்ந்து குதறியது... கத்தியை கீழே போட்டவன், ஒரே ஓட்டமா ஓடிட்டான்...' என, மூச்சு வாங்கியபடி முடித்தான் வரதன்.
'நீ ரொம்ப தைரியசாலி...' என்று, நாயைக் கொஞ்சினான் கந்தன்.
'என்னை மன்னிச்சுடு கந்தா... நல்லா படிக்கிறியேன்னு, பொறாமையில உன் நாயை கல்லால அடிச்சேன். ஆனா, இன்னைக்கு என்னை பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தியிருக்கு; இனிமே, இந்த மணி உனக்கு மட்டுமல்ல; எனக்கும் நண்பன்...' என்று நெகிழ்ந்தான். வாலை குழைத்தபடி, அவர்களை சுற்றி வந்தது மணி.
குழந்தைகளே... பொறாமை குணத்தை ஒழித்து, அனைத்து உயிரினங்களையும் நேசியுங்கள். அவை, ஆயிரம் பாடங்களைக் கற்று தரும்.
வி.எஸ். அருண்குமார்
